குறுந்தொடர் - பகுதி 9
லதாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவள் கண்கள் கரனின் கண்களை விட்டு அகலாமல் நிலை குத்தி நின்றது. கரன் மெல்ல புன்னகை உதிர்த்தான்.
“கரா என்னோட மிச்ச வாழ்க்கை இனி உன்னோடுதான்”
கரனின் மனதில் கோடிப் பூக்கள் பூத்துக் குலுங்கியது.
படகும் சற்றே பெரிய அலையில் சிக்கியது போல குலுங்கியது. படகை ஏதோ வெகு வேகமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. அது அந்த கடலில் பார்த்த மனிதன் போன்ற உருவம்தான். கரனும், லதாவும் கீழே விழுந்தனர்.
படகு ஓரத்தில் நின்று கொண்டிருந்த செல்வினும், சென்னையிலிருந்து வந்த இருவரும் கடலில் விழுந்தனர். செல்வின் தலையில் அடிபட்டு குருதி வழிந்தோடியது. பாலா சட்டென கடலில் பாய்ந்தான்.
படகின் கீழே தண்ணீர் நிறைய ஆரம்பித்தது!
“லதா இங்கேயே இரு, கெட்டியாப் பிடிச்சுக்கோ, திரும்பி வந்துடுவேன்”
“கரா எனக்குப் பயமா இருக்குடா”
கரனும் கடலில் பாய்ந்தான். பாலா செல்வினை பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பாய்மரப் படகில் ஏற்றினான்.
கரன் எவ்வளவு தேடியும் மற்ற இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
“செல்வின், செல்வின். என்னைப் பாருடா. உனக்கு ஒண்ணுமில்லை, என்னைப் பாருடா” பாலா.
செல்வின் தலையில் படகின் கீழ்புறத்தில் சற்றே நீட்டிக் கொண்டிருந்த இரும்புத் துண்டு பலமாக அடித்ததில் இறந்திருந்தான்.
கரன் பின்புறம் போய் செல்வினின் நாடியைப் பார்த்தான். உயிரில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். பாலாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.
“செல்வின் செத்துட்டான்டா, மிச்ச இரண்டு பேரையும் தேடிட்டேன், கிடைக்கலை. நான் எதற்கும் இன்னொரு தடவை பார்த்துட்டு வர்றேன்”
பாலா நடப்பது எதுவும் புரியாதவனாய் துளிக் கண்ணீரோடு திகைத்துப் போய் பாய்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடலில் மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தான். யாரையும் கண்டு பிடிக்க முடியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“கரா, இங்க படகுல ரொம்ப வேகமா தண்ணீர் வருது. எனக்குப் பயமா இருக்குடா” பதறினாள் லதா.
இருவரும் மேலே ஏறினார்கள். படகில் மூவரைத் தவிற வேறு யாருமில்லை. எப்பொழுதுமே படகு ஓட்டத் தெரிந்தவர்கள் இரண்டு பேரோடவாவதுதான் படகை எடுக்க வேண்டும் என்று செல்வினின் தந்தை சொல்லுவார். ஆனால் செல்வின் எப்பொழுதுமே அவன் தந்தைப் பேச்சைக் கேட்பதில்லை.
“பாலா இப்போ என்ன பன்றதுடா? கரையிலிருந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். என்ன பன்றதுடா”
“கரா அவசரப் படாதே, நிச்சயம் தப்பிச்சுடலாம். படகு மூழ்குறதுக்குள்ள இங்கே இருந்து கரையில இருக்க யார்கிட்டையாவது பேசிட்டா போதும். பின்னாடி பாய்மரப் படகு இருக்கு. கவலைப் படாத தப்பிச்சுடலாம்.”
கரனும் லதாவும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.
“லதா பயப்படாத, எப்படியும் தப்பிச்சுடலாம்”
பாலா அடிக்கடி செல்வினுடன் கடலுக்கு வந்திருப்பதால், அவனுக்கு படகிலிருந்து எப்படி கரைக்கு சமிக்ஞை அனுப்புவதென்பது தெரியும். அவசர அவசரமாக தாங்கள் இருக்கும் திசையையும், கிளம்பிய இடத்தையும் சொன்னான்.
படகு சுக்கான் அறை வரை தண்ணீர் வரத் தொடங்கியது. லதாவிற்கு நீச்சல் தெரியாது. இருந்த ஒரு மிதக்கும் தக்கையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் குதிக்கச் செய்தார்கள்.
கரன் லதாவை இழுத்துக் கொண்டு பின்னால் இருந்த பாய்மரப் படகுக்குப் போனான். பாலா சுக்கான் அறையை விட்டு வெளியே வந்து பாய்மரப் படகு நோக்கி குதித்தான்.
“பாலா அந்த முடிச்சைக் கழட்டுடா. இல்லைனா இதையும் உள்ளே இழுத்திடும்”
“நீ அங்கேயே இரு, நான் கழட்டிடுறேன்.”
பாலாவின் கைகள் நடுக்கத்துடன் கயிறை கோர்த்து வைத்திருந்த அந்த இரும்பு வளையத்திலிருந்து வெளியேற்றப் பார்த்தான். அது கழற்ற வரவில்லை. சிக்கிக் கொண்டது போலிருந்தது.
படகு மேல் முனை வரை முழுக ஆரம்பித்த்து.
“கரா இங்க வாடா இதை இழுத்துப் பிடி”
“இதோ வந்துட்டேன்டா, லதா எதுவா இருந்தாலும் இந்த தக்கையை விட்டுடாத, கெட்டியா பிடிட்ச்சுகோ.”
கரன் தண்ணீருக்குள் தாவினான். படகு மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டே போனது. கயிறை அதிலிருந்து எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பாலா. கரன் அங்கே போய் அதை விடுவிப்பதற்குள், படகு வேகமாக அமிழ்ந்தது.
லதா பாய்மரப் படகிலிருந்து கவிழ்ந்தாள்.
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 9
Posted by
ஒளியவன்
at
Tuesday, August 12, 2008
Labels: தொடர்
0 comments:
Post a Comment