குறுந்தொடர் - பகுதி 8
பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் லதாவை நல்ல படியாகவே பாட்டி வீட்டில் விட்டு வளர்த்தார்கள். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் முதல் முறை பாட்டி வீட்டிலிருந்து வெளியூருக்குக் கிளம்பினாள் லதா. படகும், அங்கே வீசும் மீன் வாடையும் அவளுக்கு ஒத்து வராததாகவே இருந்தது. எப்படி ஒரு நாள் தங்கப் போகிறேன் என்ற கேள்வி அவளைக் குடைந்தெடுத்தது. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் இருப்பது மேலும் அவளுக்கு ஒரு தவிப்பை ஏற்படுத்தியது. யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியாத சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக குமுறிக் கொண்டிருந்தாள்.
"கரா, நாம எப்போ திரும்பிப் போவோம்"
"தெரியலையே. டேய் பாலா எப்போடா கரைக்குப் போவோம்?"
"நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு செல்வின் வீட்டுக்குப் போயிடலாம். அவங்க அப்பாவைக் கூட்டிகிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்குப் போயிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடலாம். இங்க படகுலையே எல்லா வசதியும் இருக்கு. கீழ போனா குளிக்குறதுக்கே வசதி இருக்கு"
லதாவிற்கு சற்றே நிம்மதி பிறந்தது. இருந்தாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வும், கரனைத் தவிர வேறு யாருடனும் எதையும் பேச முடியாத சூழலும் அவளை ஏதோ செய்தது.
கரனுக்கு அவளது சூழலை உணர முடிந்தது. அவளைக் காதலிக்கப் போவதில்லை என்று அவளிடம் சொல்ல வேண்டுமென்றுதான் காலையில் புறப்பட்டான், ஆனால் இப்பொழுது அவனுள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அலையோடு அலையாக அலை பாய்ந்திருந்தது.
கொஞ்ச நேரம் உலவிய மௌனத்தை உடைத்தான் பாலா.
"ஆமாம், சிநேகா எப்படி இருக்கா?"
பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது லதா. இருந்தாலும் இந்தச் சூழலில் இப்படி அநாவசியமாக பேசுவது அவளுக்கு பொறுமையிழக்கச் செய்தது. பாலாவை ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு
"இருக்கா, நல்ல வேளை அவளை யாரும் சரியாப் பார்க்கலைன்னு நினைக்குறேன், என்னை மட்டும்தான் துரத்தினாங்க"
"நல்ல பொண்ணுங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது"
"டேய், பாலா சும்மா இருடா, விளையாடுறதுக்கு இதுவா நேரம்? அவளே நொந்து போய் இருக்கா, அவகிட்ட போயி கிண்டல் பன்னுற"
"என்னடா, அவகிட்ட பேசினா இங்க இருந்து பதில் வருது? ம்......ம்....... நடக்கட்டும். சரி லதா, அப்படியே நானும் சிநேகாவும் பேசுறதுக்கு ஏற்பாடு செஞ்சுக் கொடு, சும்மா கடலை போடத்தான்"
"உனக்கு எப்பவுமே விளையாட்டுதானா பாலா? நேத்து என்னடான்னா அப்படி செஞ்சுட்ட"
"என்ன செஞ்சுட்டேன் லதா? சிநேகா எதாவது சொன்னாளா?"
"ம்........... அவ ஒன்னும் சொல்லல, ஆனா உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"
"இது என்ன புதுசா இருக்கு, என்ன விசயம்? அதுக்கு முன்னாடி சிநேகா எதைத் தெரிஞ்சுக்குறதுக்கு கரன்கிட்ட பேசினா?"
"அது... அது..... வந்து......" லேசா வெட்கப் படத் துவங்கிய இதழில் பேச்சே வரவில்லை.
எந்த ஆணுக்கும் தன்னை ஒரு பெண் அவளாகவே காதலிக்கத் துவங்குவது வித்தியாசமான அனுபவம்தானே. கரனுக்குள்ளே ஏதோ செய்தது. வெளியே அவன் அவளைக் காதலிக்க மாட்டேனென்று சொல்லி வந்தாலும், உள்ளூற இப்பொழுது அவள் சொல்லப் போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.
"சும்மாதான் பேசினா...... வேற ஒன்னுமில்லை. தேவைன்னா அவகிட்ட கேட்டுக்கோ"
சொல்லி விட்டு குணிந்து கொண்டாள்.
"இதெல்லாம் சரியா வரலியே, என்னைப் பற்றி உனக்குத் தெரியும்னு நினைக்குறேன். என்கிட்ட பொய் சொல்ல நினைச்சா, நான் கண்டு புடிச்சுடுவேன்"
"டேய்! விடுடா, வா நாம அந்தப் பக்கம் போகலாம், அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்"
இந்தச் சூழ்நிலையில் பாலாவை அங்கேயிருந்து நகர்த்திக் கொண்டு செல்வதில்தான் கரன் ஆர்வமானான்.
கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்தார்கள் பாலாவும் கரனும். மீண்டும் லதா இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே லதா இல்லை. படகில் வலைகள் குமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அமர்ந்திருந்த இடத்தில் கரியால் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. அதை குணிந்து வாசித்தான் பாலா.
"கரன், நான் உன்னை ஒன்றரை வருசமா காதலிக்குறேன். இதுதான் உண்மை. ஆனால் எனக்கு எப்படிச் சொல்லன்னு தெரியலை"
கரனும், பாலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலா சம்மதச் சமிக்ஞையோடு சிரித்தான். கரன் முகம் ஒளியானது!
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 8
Posted by
ஒளியவன்
at
Monday, August 11, 2008
Labels: தொடர்
2 comments:
இதிலே 4453ம் ஆண்டு எங்கே வருகிறது?
சண்டைப் படமென்பதற்காக சண்டையே போட்டுக் கொண்டிருக்க முடியுமா? கொஞ்சம் மற்ற விசயங்களும்தானே. உங்கள் கேள்விக்கான விடை இரண்டே பகுதியில் தெரிய வரும்.
Post a Comment