குறுந்தொடர் - பகுதி 6
கார்மேகம் வழிந்தோடிய பின் வெறிசோடிக் கிடக்கும் வானம் போல், கண்ணீரால் கவலை கழுவி முடித்தாள், வார்த்தை கோர்த்து எடுத்தாள்.
“லதா, விட்டா இதான் சாக்குன்னு அவன் மேலையே சாஞ்சுகிட்டு இருக்க” என்று கிண்டல் செய்தான் பாலா, உண்மையில் அவளைத் தேற்றுவதற்குத்தான் சீண்டினான்.
குளியலறையை யாரோ எட்டிப் பார்ப்பது போல தாவினாள். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். சொற்களை சொற்றொடர்களாக்கினாள்.
“நம்ம கல்லூரியில திடீருன்னு ஸ்ட்ரைக் செஞ்சாங்க நம்ம சீனியர்ஸ், காலையில 8 மணிக்கே வந்து சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மூன்றாவது வருசம் படிக்குற பசங்கள்ல இரண்டு கோஷ்டிக்கும் இடையில மோதல். நான் விடுதியில இருந்து வந்துகிட்டு இருந்தேன் அப்போ இரண்டு பசங்க எதிர்க்க வந்த மூன்று வண்டியையும் கவிழ்க்கனும்னு பேசிகிட்டாங்க. அதே மாதிரி அதை கவிழ்த்துட்டாங்க. எனக்கும் சிநேகாவுக்கும் கையும் ஓடல காலும் ஓடல”
எழுந்த சூரியனை மீண்டும் கடலே விழுங்குவது போல மீண்டும் கண்கள் கண்ணீரில் மூழ்கின.
“அழாம சொல்லு, கவிழ்த்தவங்க யாரு? செத்தவங்க யாரு? உன்னை எதுக்கு துரத்துறாங்க?” கரன்
“கவிழ்த்தவங்க நம்ம கல்லூரிப் பசங்க, ஆனால் செத்தது யாருன்னு எனக்குத் தெரியாது. அதை நான் பார்த்துட்டேன்னு என்னைத் துரத்துறாங்க. நானும் சிநேகாவும் கல்லூரிக்குத்தான் ஓடினோம். திரும்ப அங்கேயும் இவங்க வந்து துரத்த ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் இந்தப் பக்கம் ஓடினேன், சிநேகா என்ன ஆனான்னு தெரியலை” சொல்லி முடிக்கும் முன் சில தடவை எச்சில் முழுங்கி பல தடவை எழுத்துக்களை முழுங்கினாள் லதா.
“யாரு உன்னைத் துரத்துறாங்க? எந்தப் பசங்க” பாலா.
“துரத்துறப் பசங்கள்ல ஒருத்தன் நம்ம கல்லூரி முதல்வரோட பையன், இன்னொருத்தன் இந்த ஊரு எம்.எல்.ஏ பையன்” சொல்லும்பொழுதே நடுங்கிற்று அவள் சொற்களும் ஈரக்குலையும்.
பாலாவிற்கு உடனடியாக தோன்றிய எண்ணம் ‘வசமா சிக்கிட்டோம்’, இனி எப்படி இவளிடமிருந்து தன்னையும் கரனையும் காப்பாற்றிக் கொள்வதென்று. உண்மையில் யாரும் சினிமாக் கதாநாயகர்கள் இல்லைதான்!
கரன் அதிர்ந்துதான் போனான், அவனுக்கு எதுவும் புரியவில்லை
மழை மேகம் சூழும் தருணம் ஏற்படும் அமைதியை சடாறென்று இடி உடைப்பது போல் சிறிது நேரம் நிலவிய மௌனத்தை லதா உடைத்தாள்.
“என்னால நீங்க இரண்டு பேரும் சிரமப் பட வேண்டாம், நான் எப்படியாவது தப்பிச்சுப் போயிடுறேன்” லதா.
உள்ளூர ஏதோ இருண்ட குகையில் திக்கு தெரியாமல் அலையும் தருணம் ஒரு வெளிச்சம் வரும் பாதை தெரிவது போல தோன்றினாலும், அவனுடைய தன்மானமும், இத்தனை நேரம் அவள் அவனை மீது சாய்ந்திருந்த போது தனது மார்பில் பதிந்த சூடும், அவனை இப்படிக் கூறச்செய்த்து.
“அப்படி இல்ல, நீ தப்பிக்குறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்” என்றான் கரன்.
பாலாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏன் இவன் வீணா அவகிட்ட இப்படி சொல்லணும் என்ற எண்ணம் பாலாவை சூழ்ந்து நின்றது. மறுபுறம் கரனை விட்டுவிட்டு தன்னால் செல்லமுடியாது என்றும் தோன்றியது.
தூரத்திலிருந்து ஒருவர் கையசைப்பதைப் போன்று பாலாவிற்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர்தான் என்று அவனுக்குப் புரிந்தது. அது வேறு யாருமில்லை, அவன் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன்தான். கடலுக்குள் செல்ல முற்பட்ட அந்தப் படகில் இருப்பவன் பாலாவிற்கும் பழக்கமான செல்வின்தான்.
“நாங்களும் வரமுடியுமா” என்றான் பாலா
இப்பொழுது அந்த படகு இவர்கள் நிற்கும் கரைக்கு கொஞ்ச தூரத்தில் நின்றது. செல்வின் படகின் முன்முனைக்கு வந்தான்.
“நாங்க திரும்பி வர்றதுக்கு ஒரு நாள் ஆயிடும், அதுவரைக்கும் எங்க கூட இருப்பீங்களா” என்றான்.
லதாவிற்கு அது சரியெனப் படவில்லை. அவளுக்கு கடலென்றால் கொஞ்சம் பயமுண்டு.
“கரா, வேண்டாம் கடலுக்குப் போக வேண்டாம், எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.
லதாவை சமாதனப் படுத்தினான் கரன். “ஒரே நாள்தான், நானும் பாலாவும் நிறைய தடவை இந்த மாதிரி போயிருக்கோம். எந்தப் பிரச்சினையும் இல்ல. மற்றதெல்லாம் நாம அங்க போய் யோசிக்கலாம்” என்றான் கரன்.
அப்பொழுது உள்ளே செல்ல எத்தனித்தது ஒரு பாய்மரப் படகு. அதில் மூவரும் ஏறிக்கொண்டு ஓங்கியடித்த அலைகளில் மேலெழும்பி கீழிறங்கியென ஒருவழியாக படகைச் சென்று அடைந்தவுடன் லதா ஓவென்று வாந்தி எடுத்தாள். தலையைப் பிடித்து விட்டான் கரன்.
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 6
Posted by
ஒளியவன்
at
Friday, August 8, 2008
Labels: தொடர்
0 comments:
Post a Comment