குறுந்தொடர் - பகுதி 7
அலையின் போக்குக்கெல்லாம் ஆடியபடியே நகர்ந்து சென்றது படகு. படகில் செல்வினுடன் சேர்த்து ஐவர் இருந்தனர்.
செல்வின் பாலா அருகில் வந்தான்.
"வாடா பாலா, எப்படி இருக்க?"
திடீரென்று மூவரை ஓரிரவு படகில் தங்க அழைத்தது அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வழக்கமாக அவன் அப்பாவுடன் செல்லும் போது கண்ணில் படும் நண்பனையும் சேர்த்து அழைத்துச் செல்வதே அவனுக்கு வழக்கம்.
செல்வினின் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாய் இருந்தான் பாலா. சற்றுத் திரும்பி கரனைப் பார்த்தான். கரன் இன்னும் லதாவின் அருகிலேயே மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தான். பாலா சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, செல்வினைக் கூப்பிட்டுக் கொண்டு படகின் அடுத்த புறம் சென்றான்.
பாலா நடந்ததையெல்லாம் செல்வினிடம் சொன்னான்.
"என்ன செய்யனு தெரியல, இவளை வேற இங்கே கூட்டிகிட்டு வந்தாச்சு, இனி என்ன ஆகும்னு தெரியலை".
பெரிய ஆச்சரியத்தோடோ அல்லது அதிர்ச்சியோடோ இதைக் கேட்கவில்லை செல்வின்.
"விடுடா இதெல்லாம் பெரிய விசயமா, எம்.எல்.ஏ எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்தான், அவர் பையன் எனக்குத் தெரிஞ்சவன்தான், கவலையை விடு. அந்தப் பொண்ணை சமாதானப் படுத்தி இதைப் பத்தி யாருகிட்டையும் வாயைத் திறக்க மாட்டேன்னு சொல்லச் சொல்லு".
பாலாவிற்கு வயிற்றில் பால்வார்த்தது போலிருந்தது.
"அவளை எப்படியாவது பேசி சமாளிச்சுட்றேன்டா, நீ இப்படி சொன்னதே போதும். நாளைக்கு நீயும் உங்கப்பாவும் அவ பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சிடுங்கடா"
"சரிடா, நான் பாத்துக்குறேன். நீ கவலை படாதே. ஆமாம், அந்தப் பொண்ணு கரனோட ஆளா? கரன் கலக்குறானே!"
"இல்லடா, அவன் என் நண்பன். நீ நினைக்குறா மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை"
"அப்படின்னா சரி. அப்புறம் என் படகை அசிங்கப் படுத்திடப் போறாங்கன்னுதான் பயந்தேன்"
"அடிங்கு உன்னை. இல்லைன்னாலும் இவரு ஒன்னுமே பன்னதில்லை. டேய், என்கிட்டேவா நீ பொய் சொல்லுற?!"
"விடுடா, விடுடா. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"
"சரி யாருடா மத்தவங்கல்லாம்? ங்கே னு இருக்கானுக"
"அவனுக சென்னையிலிருந்து வந்துருக்கானுக, ஏதோ கடல்ல ஆராய்ச்சி செய்யணுமாம். அதுவும் ராத்திரியில தான் செய்யணுமாம். வெளக்கெண்ணெய்க இதுக்கே நான் இரண்டு மடங்கு சொன்ன விலைக்கு ஒத்துக்கிட்டானுக, படிச்சவங்கன்னாலே புத்தி இருக்காது போலடா"
"டேய் எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதடா. சரி இங்கேயே இரு கரன் என்ன பன்றான்னு பார்த்துட்டு வர்றேன்"
பாலா அங்கே போகவும் லதா பேச்சை நிப்பாட்டினாள்.
"என்னடா கரா, பேசி முடிச்சாச்சா? சரி நீ ஓரம்போ நான் கொஞ்ச நேரம் பேசிக்குறேன்"
கரனுக்கு பாலா இப்படி பேசுவது புதிதாக தெரியவில்லையெனினும் இந்த சமயத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்த்து அவனுக்கு.
"ஏன், நானிருக்கும்போது பேச மாட்டியா"
"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் கரா, நீ போயி செல்வின் கிட்ட பேசிகிட்டு இருடா"
"என்னடா லந்தா, நானிங்கதான் இருப்பேன். சொல்லு. அப்படி எனக்குத் தெரியாம என்னத்தைக் கேட்கப் போற?"
"சரி விடு. எனக்கு எல்லாம் புரியுது"
அப்படியே அங்கு செல்வின் சொன்னதை லதாவிடம் சொன்னான்.
தப்பித்தால் போதுமென்ற பயத்தில் உண்மையை காவல் துறையிடம் சொல்ல அவளுக்கு தோன்றவில்லை. மேலும் இங்குள்ள காவல்துறை அதிகாரிகளால் இவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதும் ஊரறிந்த விசயம்.
"அவங்க சொல்றா மாதிரி கேட்டுக்குறேன். யாருகிட்டையும் எதுவும் சொல்ல மாட்டேன். எந்தப் பிரச்சினையும் வராதுல்ல பாலா"
"இது எல்லாத்தையும் நாந்தான் ஏற்பாடு செய்யுறேன். என்னை அப்போ அப்போ கவனிச்சுகிட்டு, நான் கேட்குறத வாங்கிக் கொடுத்தன்னா எந்தப் பிரச்சினையும் இல்ல. இனி எல்லாம் உன் கையிலதான் இருக்கு"
"ரொம்ப ஓவர்டா இதெல்லாம். எதுவா இருந்தாலும் செல்வினுக்கு நன்றி சொல்லணும்"
படகில் உடன் வந்த சென்னைக் காரர்கள் கடலில் வந்துபோன அந்த வித்தியாசமான உயிரைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 7
Posted by
ஒளியவன்
at
Sunday, August 10, 2008
Labels: தொடர்
0 comments:
Post a Comment