ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

இனி நான் கெட்டவன்

"சீக்கிரமா கிளம்புங்க, ரெண்டு வருசம் கழிச்சு நம்ம புள்ள வர்றான், விமான நிலையம் போகனும்" என்று வேக வேகமாக அடுப்பில் வேலையை முடித்துவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பி இருந்தாள் மலர்.

மகிழ்வுந்தைத் துடைத்துக் கொண்டிருந்த நாகய்யன் சற்று பொறுமையிழந்து "காலையில இருந்து இதேதான் சொல்லிகிட்டு இருக்க, விமானம் இங்க வர்றதுக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கு" என்று சலித்துக் கொண்டார். நமக்கு மட்டும் நம் பையனைப் பார்க்கனும்னு ஆசையில்லாத மாதிரி விரட்டிகிட்டு இருக்கா என்று முணங்கிக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு வேலைக்குச் சென்ற சூர்யா இரண்டு வருடம் கழித்து இப்பொழுது சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனை அழைத்து வந்தவுடன் சொந்த ஊர் திருச்சிக்கு இரண்டு வாரம் கழித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தார் நாகய்யன். அங்கே சூர்யாவோட அண்ணன் மாறன் இருக்கிறார். அவரது திருமணத்திற்கும் சூர்யா இங்கிலாந்திலிருந்து வரவில்லை.

பத்து மணிக்கு தரையிறங்கும் விமானத்திற்கு காலை எட்டரை மணிக்கே சென்று காத்திருந்த நான்கு விழிகளும் பதினோரு மணிக்கு வெளியே வந்த மகனை ஆரத்தழுவி அணைத்த பிறகு வடித்த சிலசொட்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருந்தன. வீட்டில் ஒரே ஆராவாரமாக கூடியிருந்த சூர்யாவின் சில நண்பர்களும், சூர்யாவும் நாட்களைக் கடத்திக் கொண்டு இருந்தனர்.

ஒருவாரம் கழித்து நாகய்யன் நாம வர்ற வெள்ளிக் கிழமை திருச்சிக்குப் போகிறோம் என்றார். சட்டென்று அதிர்ந்து போன சூர்யா "நான் நாளைக்கே இங்கிலாந்து கிளம்பிடுவேன், எனக்கு இன்னும் ஒரு வருசம் அங்கே இருக்கனும்" என்று மெதுவாக சொல்லி முடித்தான்.

பாசத்தின் மிகுதியில் நாகய்யன் சற்றே கோபம் கொண்டு "அதெல்லாம் முடியாதுப்பா, ஒன்றரை வருசத்துல போயிட்டு வர்றன்னு சொல்லிட்டுப் போனவன், இரண்டு வருசம் கழிச்சுதான் வந்திருக்க, இனி நீ அங்கே போக வேண்டாம், உன் அண்ணனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாச்சு, அடுத்து உனக்கும் முடிச்சு வைக்கனும், அதனால நீ போகவேண்டாம்" என்று கட்டளை இட்டார். இறுதியில் சூர்யா எல்லோரும் அதிரும்படியான ஒரு விசயத்தைப் போட்டு உடைத்துவிட்டான். தான் அங்கே ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் வேறு மதத்தவள் என்றும், நீங்கள்லாம் சம்மதிக்கலைன்னாலும் அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பன்னுவேன் என்றும் கூறி விட்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டான்.

காதலே சற்றும் பிடிக்காத நாகய்யனுக்கு இது பெரிய இடி. நம்ம பிள்ளையா இப்படிப் பேசுகிறான் என்று சுத்தமாக நம்ப முடியாமல் வீட்டிலேயே புலம்பிக் கொண்டிருந்தார், அதுவும் தன்னிடமே மகன், நீங்கள் வேண்டாம் அந்தப் பெண்தான் முக்கியமென்று சொல்லிவிட்டானே என்று நொந்து வெதும்பினார். மறுநாள் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன் வந்தவனுக்கும் நாகய்யனுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றிப் போய் "நீ என் மகனே இல்லைடா, உன்னைப் பெத்ததையே மறந்து தல முழுகிடுறேன், என் கண்ணுலையே படமா ஒழிஞ்சுப் போடா" என்று கோபமாக பேசிவிட்டார். தாயும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சென்றுவிடான்.

தனியாக விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்ற சூர்யாவை பொங்கி வழியும் கண்ணீரோடு காத்திருந்த நண்பன் முகிலன் சந்தித்தான். "நீ பன்றது சரின்னு எனக்குப் படலைடா, எதுவா இருந்தாலும் வீட்டைக் கஷ்டப் படுத்திட்டுப் போகாதே, நடந்ததையெல்லாம் வீட்டுல சொல்லிடலாம் இல்லையென்றால் நீ இதை என்னிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம்" என்று முகிலன் வறண்டு போன தொண்டையில் பேசினான்.

இறுகிய குரலில் "இல்ல முகிலா, இப்போதைக்கு வீட்டுக்கு நான் கெட்டவன். இனி எனக்குக் கவலையில்லை. நீதான் என்னோட வீட்டைப் பார்த்துக்கனும், அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும், என்னைப் பற்றி எந்தத் தகவலும் உனக்கும் நமது நண்பர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிடு. உங்களையெல்லாம் பிரிவதற்கு எனக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆனால் கடந்த ஆறு மாசமா நான் யோசிச்சு எடுத்த முடிவு இது. உன்னிடமாவது இந்த உண்மையை சொல்லிவிடுவதால் ஏதோ என் மனதுக்கு ஒரு ஆறுதல். மரணம் எனக்கு பயம் இல்லை, இதுவும் தூக்குத் தண்டனைப் போலதான், சிறையில் தனியாய் இருந்து பின்னர் மரணிப்பது போல உங்களிடமிருந்து விலகி இருந்து நான் மரணிக்க விரும்புகிறேன், இந்த உண்மை உன்னை என்னைத் தவிற யாருக்கும் தெரியக் கூடாதென்று சத்தியம் செய்" என்று பேசி முடித்து சத்தியமும் வாங்கிக் கொண்டு கால்கள் நகர்த்திவிட்டான் சூர்யா.

ஆறு மாதத்திற்கு முன்புதான் சூர்யாவிற்கு புற்றுநோய் இருப்பதை அவன் அறிந்தான், அதைக் குணப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் கைவிட்டு விட, வாழ்க்கையை நீட்டித்து மட்டுமே கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் இறப்பை நிச்சயம் பெற்றோர் தாங்கிக் கொள்ள மாட்டார்களென்று சகஜமாகிவிட்ட காதல் பிரச்சினையில் பிள்ளைகளைத் தலை முழுகும் எத்தனையோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருந்து போகட்டுமே என்று மரணம் நோக்கச் சென்றுவிட்டான். இதிலும் சூர்யாவின் பெற்றோர்களுக்கு வருத்தமெனினும், அவனது மரணத்தை விடக் கொடிதல்ல.

தேடலின் தொடக்கம்

சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம் இவனது பதினைந்து வருடத் தேடுதல். ஏதோ பிரச்சினையில் இவனுடைய சொந்த ஊருக்கே திரும்பிப் போகாத செழியனின் அப்பாவின் கோபத்தின் காரணமறியவில்லை, அறியவும் விரும்பவில்லை இவன். நகரத்தின் நெரிசலிலும், நாகரீகத்தின் செயற்கையிலும் சிக்கித் தவிக்கும் நகர எல்லையை கடந்து வந்தது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. செழியன் பிறந்து எட்டு வருடத்தில் நகரவாசியாகிவிட்டான்.

செழியனின் அம்மா அவ்வப்பொழுது சொல்லிவிடும் சின்னஞ்சிறு ஊர் ஞாபகங்களையெல்லாம் அவனுகுள் இருக்கும் இதயத்தின் சுகந்த அறையில் பத்திரமாக வைத்திருக்கிறான். பஞ்சு மிட்டாய், திருவிழாத் தேர், கோவில் விசேசம், மார்கழித் தெருக் கோலங்கள், ஊர்க் கிணறு, அதில் தினமும் கூட்டமிடும் துணி துவைக்க வரும் பெண்கள், தாரில்லாதா செம்மண் சாலைகள், அதில் கொஞ்சம் ஆட்டுப் புளுக்கைகள், பச்சைப் பசேலென்ற வயல் வரப்பு, அதில் நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதை, பாதை கடந்து வரும் மோட்டார் கிணறு, குச்சி ஐஸ், கான்கிரீட்டில் வானம் மறைக்காத வீட்டு முற்றம், அதில் பெய்யும் மழை, இன்னும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கும் ஊரின் ஞாபகக் கனவுகளை நிசமான நினைவாக புசிக்க செல்கிறான்.

அங்கு செல்ல வேண்டுமென்று வீட்டில் இரண்டு வருடமாக அடம்பிடித்து இப்பொழுது கிளம்பி இருக்கும் செழியனுக்கு வயது 23. "தாத்தா மூக்கைய்யனுக்கும், ஆச்சி பொன்னாத்தாளுக்கும் நான் வரும் சேதியைச் சொல்லிவிடு. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் சொன்ன குறிப்பின்படி அந்த ஊருக்கு வரும் என்னை எந்த ஆராவாரமும் இல்லாமல் என் பாட்டி பிசைந்து தரும் பழைய கஞ்சியை எனக்காகக் கொஞ்சம் மிச்சமெடுத்து வைக்கச் சொல்" என்று காற்றிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இன்னும் 8 மணி நேரம்தான் இருக்கிறது இவன் கனவுலகத்துக்குச் செல்ல....

விடிந்து விட்ட வானத்தில் வடியாது நிற்கும் அடர்ந்த மேகங்களுக்கிடையில் தெரியும் சூரியனின் கிரணத்தில் தூரத்தில் தெரியும் அந்த தென்னந்தோப்பின் பின்னாடிதான் இவன் தாத்தா ஆச்சி வீடு இருக்க வேண்டும்.

இதோ வழியில் வரும் ஒரு பெரியவரிடம் "ஐயா, இங்க மூக்கையன் வீடு எங்க இருக்கு" என்றான். ஆடம்பர உடையில் இவனைப் பார்த்து அவர் ஆச்சரியப் படுவது அதிசயமில்லை. இருந்தாலும் சரியான வீட்டைக் காண்பித்துவிட்டார்.

"ஆச்சி நீங்கதான் பொன்னாத்தாளா?" என்றான் வாசலில் உரலில் அரிசி போட்டு அரைத்துக் கொண்டிருந்த பொன்னாத்தாளிடம்.

ஏதோ அந்தக் குரலில் அந்நியம் இல்லாதது கண்டு சற்றே வியந்த பொன்னாத்தாள், அருகே சென்று "யாரு அய்யா நீ, நான் தான் பொன்னாத்தாள். உன்னைப் பார்ப்பதற்கு பழக்கப்பட்ட முகம்போலத் தெரிகிறதே. நீ யாருப்பா" என்று பேசி முடிக்க திண்ணையிலிருந்து எழுந்து வந்து விட்டார் மூக்கைய்யன்.

தாந்தான் பேரன் என்றும், எப்படி இங்கு வந்தேனென்றும் சொல்லி முடிப்பதற்குள் கண்கள் குளமாகிவிட்ட பெருசுகளால் அவனை அள்ளி அணைக்காமல் இருக்க முடியவில்லை. அன்பு முத்தங்களும், அவனை கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்து விட்டு கை, கால்களைத் தொட்டு தடவிப் பார்த்தும் தலையில் அடித்துக் கொண்டே பொன்னாத்தாள் புலம்பலானாள். "எத்தனை வருசம்பா, பதினைந்து வருசம் ஓடிப் போச்சே. இந்தப் பாவி மனுசன் வாய வச்சுக்கிட்டு இல்லாம மருமகன்கிட்டே முரண்டு புடிச்சு என் செல்வத்த என்கிட்ட இருந்துப் பிரிச்சுட்டாரே" என்றாள். ஏதோ ஒரு கோபத்துல நான் பேசினாலும் பதினைந்து வருசமா தண்டனைன்னு உறைந்து உட்கார்ந்தார் மூக்கைய்யன்.

பழங்கதைகள் பல பேசி பழைய கஞ்சியும் குடித்துவிட்டு, காலார நடந்தான். வழியில் தென்பட்ட ஒரு சின்ன வீட்டு வாசலில் இவனைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விட்டு விழிகளை நகற்ற முடியாமல் கேட்டே விட்டான். "நீங்க யாரு, உங்ககிட்ட சின்ன வயசுல பேசின ஞாபகம் இருக்கு, நான் செழியன்" என்றான்.

கையில் வைத்திருந்த சுளகைக் கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டுக் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். உள்ளே இருந்து வந்த ஒருவர் சொன்னார் "வாய்யா மருமகனே. இப்பந்தான் நீ வந்த சேதி தெரிஞ்சுது. அங்கதான் கிளம்பிகிட்டு இருக்கேன். நாந்தான் உன் அத்தை சீதா, அது எம்பொண்ணு பத்மினிதேன், சின்ன வயசுல ஒன்னா வெளாண்டதெல்லாம் மறந்துடுச்சுப் போல" என்று பேசி முடித்தார்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

தழல் ததும்பும் கோப்பை

காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும் தென்படவில்லை. உடல் முழுதும் வியர்த்திருக்கிறது அவனுக்கு. சத்தமிட்டு சத்தமிட்டு தொண்டை வறண்டுவிட்டது. படியிலிருந்து வேகமாக கீழே இறங்கியவன் கால் இடறி 17 படிகளிலும் உருண்டு கீழே விழுந்தான். பின்னந்தலையில் லேசான அடி. உடம்பு எல்லாம் செயலிழந்தது போல உணர்வு. உதடுகள் மட்டும் கனவு கண்டு புலம்புவது போல புலம்ப ஆரம்பித்தது. "எங்கே போனீங்க.. எங்கே போனீங்க... நான் என்ன தப்பு பன்னினேன்...." அப்படியே அந்த பேச்சும் அடங்கி விட்டது.

இதற்கு சரியாக ஒரு நாள் முன்பு.......

அவனுக்குப் பிடித்த ஆப்பம் சுட்டுத்தருமாறு அம்மாவைக் கேட்டுக் கொண்டே இருந்தான் வாசன். "சீக்கிரம்மா, இன்னைக்கு நாம வெளியில போறோம், உனக்கு எங்க போனும்னு தோணுதோ, அங்கே போகலாம். இரவுதான் திரும்பி வருவோம்".

வழக்கத்துக்கு மாறாக என்ன இவன் இப்படிப் பேசுகிறான் என்ற லேசான அதிர்ச்சியோடு இருந்தாள் வாசுகி. "என்னப்பா, எங்கே போகனும், சித்ராவும் நேத்துதான் அவங்க அம்மா வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி இல்லைன்னதும் உனக்கு நேரம் போகலையா? அதுக்கு பெருசுங்க நாங்க இரண்டு பேருமா கிடைச்சோம்? எதுக்குப் பறக்குற?" என்று வழக்கமான சிரிப்போடு கேள்வி கேட்டாள் வாசனின் தாய். அந்த நேரம் வாசனின் தந்தை சண்முகமும் வந்துவிட்டார்.

"இல்லைம்மா எனக்கு இன்னைக்கு விடுமுறைதானே, நாம் மூன்று பேரும் வெளியே போய் நீண்ட நாள் ஆச்சு, அதனாலதான், இன்னைக்கு முழுசும் உங்க கூட சுத்தலாம்னு..." என்று கெஞ்சிக் கேட்டான் வாசன். சண்முகம் குறுக்கிட்டு "சரி விடுடி பிள்ளை ஆசப்பட்டு கூப்பிடுறான், போயிட்டு வருவோம்."

மகிழ்வுந்து புறப்பட்டு மகாபலிபுரம் சென்றது. நல்ல நிழலோரமாகப் பார்த்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பிறகு அமர்ந்து கொண்டனர். அவ்வளவு நேரம் சுற்றியதில் கால் வலித்தது வாசுகிக்கும், சண்முகத்திற்கும். ஏதோ போல இருந்த மகனின் முகத்தை தந்தை கண்டுபிடித்து விட்டார். "இங்கே வா, என் மடியில் படுத்துக்கோ. என்ன ஆச்சு, இன்னைக்கு உன் நடவடிக்கையே சரியில்ல... நீ எதையோ எங்ககிட்ட இருந்து மறைக்குறா மாதிரி இருக்கு, எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுப்பா."

தேக்கி வைத்திருந்த கண்ணீரைத் தாரை தாரையாக வடித்தான். அப்பா மடியில் தலையும், அம்மா மடியில் காலும் வைத்துக் கொண்டு விசும்பினான்.கண்களைத் துடைத்துக் கொண்டே தனக்கும் தனது மனைவிக்கும் நடந்த பிரச்சினையைக் கூறினான்.

"நீங்களா பார்த்துதான் எனக்கு கல்யாணம் செஞ்சுவச்சீங்க, நான் சித்ராவை எப்படிப் பாத்துக்குறேன்னு உங்களுக்கே தெரியும். ஆனால் அவளுக்கு எப்பவுமே நீங்க இரண்டு பேரும் என்கூட இருக்கிறதே பிடிக்கலை. தனிக்குடித்தனமாத்தான் இருக்கனும்ங்குறா. நானும் பலநாள் சமாதானப் படுத்திப் பார்த்துட்டேன். ஆனா நேத்து வெளியில சாப்பிடப் போனப்போ, நான் இன்னைக்கு குழந்தையோட எங்க வீட்டுக்குப் போறேன், தனிக்குடித்தனம் போகலாம்னா என்னைக் கூப்பிடுங்கன்னுட்டுப் போயிட்டாம்மா." என்று கூறி மீண்டும் அழத் தொடங்கினான்.

நடந்ததையெல்லாம் உணர்ந்த இருவரும் அவனைச் சமாதானப்படுத்தி, அப்பா, அம்மாவும் இருக்கிற வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. நாளைக்கே அவளை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துவிடுவோம் என்று ஆறுதலும்ம் சொன்னார் சண்முகம். அழுது அழுது இரவு 2 மணிக்குத் தூங்கிவிட்டான் வாசன்.

இன்று சரியாக காலை 11 மணிக்கு....

யாரோ தண்ணீர் தெளிப்பது போன்ற ஒரு உணர்வு மெல்ல வாசனுக்கு ஏற்பட்டது. அது மனைவி சித்ராதான். அவன் தெளிந்ததும் அவள் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். இதை உன்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார் மாமா. வீட்டு தபால் பெட்டியில் இது கிடந்தது. அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தான்.

"அன்பு சித்ரா, சீக்கிரமாக நம், இல்லை உன் வீட்டுக்குப் போ. நாங்கள் கிளம்புவதை அவனிடம் சொல்லாமலேயே கிளம்புகிறோம். நாங்கள் எங்கே போகிறோம் என்று எங்களுக்கேத் தெரியாது, எங்களை அவன் தேடவேண்டாமென்று சொல். என் மகன் அழுது நான் பார்த்ததேயில்லை, நேற்று அவன் அழுததை எங்களால் தாங்க முடியவில்லை. எங்களை விட அவனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாய் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம்.

அன்பு மகனே, தனிக்குடித்தனம் போக வேண்டுமெனின் நாங்களே உன்னை மகிழ்ச்சியோடு அனுப்பியிருப்போம். சித்ராவிடம் எந்தக் கோபமும் கொள்ளாது அவளுடன் அன்புடன் நடந்துகொள். இதில் அவள் தவறு எதுவும் இல்லை. நீங்கள் இருவரும் அன்போடு வாழவேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காகவே உன்னைவிட்டுப் பிரிகிறோம். இதற்கு பங்கம் விளைவித்துவிடாதே. இப்படிக்கு உன் அன்பு அப்பா, அம்மா."

கண்ணீரோடு கலைந்து நின்ற சித்ராவைத் திட்டமுடியாமல், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவளை. இருவரையும் 8 வயது மகன் சாரதி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

காதலும் கோலமும்

காதலர்களின் சொர்க்கமான மெரீனா கடற்கரையில் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காதலர்களுக்கும், காதலரைப் போல் காட்சியமைத்துக் கொண்ட கயவர்களுக்கும் இடையில் செம்மேகமும், சிவப்புக் கம்பளக் கடலும் ஒன்றோடொன்று முத்தமிட்டுக் கொண்டிருந்ததை ரசித்த படியே இரு தோள்கள் மட்டும் சற்று உரசிய படி இருவர் அமர்ந்திருந்தனர். இவர்கள் காதலர்களே அல்ல என்று நினைப்பது போல் ஒருவர் மீது ஒருவர் சாயாமல் இருப்பது ஆச்சரியமானாலும், காதலர்கள் இல்லையென்றும் கூறமுடியாத படி நெருக்கமாகவே அமர்ந்திருந்தனர்.

"மலர்விழி, நாம் காதலிக்க ஆரம்பித்து நேற்றுடன் மூன்று வருடம் முடிந்தது. முத்தமென்ற சத்தமே இருக்கக்கூடாதென நீ இட்ட கட்டளைக்கு இன்னும் என்னிடம் மரியாதை இருக்கிறது. என் வீட்டில் ஓரளவுக்குச் சம்மதம்தான், ஆனால் உன் வீட்டில் என்ன நிலை?" என்ற கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் வசந்தன்.

இது ஒன்றும் புதிய கேள்வி அல்ல எனினும், புதிதாக இதற்கு பதில் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது மலர்விழியிடம் என்பதை அவள் கண்கள் அவனைப் பார்க்கும் போது தெரிந்தது.

"மூன்று வருடம் போனதே தெரியல, இப்பந்தான் நாம முதன்முதலா சுதந்திர தினம் அன்னைக்கு சந்திச்சுகிட்ட மாதிரி இருக்கு, அதுக்குள்ள இது நாலாவது சுதந்திர தினமா?" என்றாள்.

நாலு சுதந்திர தினத்தை நாடு பாத்திருந்தாலும், அவனது காதல் சுதந்திர தினத்தை இன்னும் பார்க்காதவனாய் இருப்பது வசந்தன் முகத்திலேயே தெரிந்தது. வழக்கமான இந்த ஜோடிக்கு வழக்கமாக சுண்டல் விற்கும் அந்தப் பையன் வந்துவிட்டான்.

"என்னடா ராஜா, எப்படி இருக்க? வழக்கம் போல இரண்டு சுண்டல் பொட்டலம் கொடு" என்று பையில் வைத்திருந்த கிழிந்து ஒட்டு போட்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டை நீட்டினான் வசந்தன்.

"எனக்கின்னா சார்? சோக்காகீரேன். அதான் சுண்டல் வாங்குறதுக்குன்னே பல பேர் இங்க இருக்காங்களே, ஆனால் எனக்குத் தெரிஞ்சு மூனு வருசமா ஒரே மாதிரி இருக்கவங்க நீங்கதான் சார். அதுக்காகத்தான் ஒருத்தனும் வாங்கமாட்டேன்னு சொல்ற கிழிஞ்ச அஞ்சு ரூபாயயையும் உன்னான்ட வாங்கிக்குறேன்" என்று வழக்கமான குசும்போடு பேசினான் ராஜா.

வசந்தன் சுண்டல் பொட்டலத்தைப் பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிட்டான். ஆனால் மலர்விழியின் கைகள் கட்டப்பட்டதைப் போல அமைதியாகவே இருந்தது. இது வரைக்கும் மூடி மறைத்த அவளது கண்ணீரைக் கண்கள் காப்பாற்ற வழியின்றி உதிர்த்துவிட்டது. காதலியின் கண்ணீரைப் பார்த்துவிட்டு துடிக்காத காதலனும் இருப்பானா? எப்பொழுதும் தான் புலம்பும் போது தேற்றுகின்ற இவள் இன்று அழுகிறாளே என்று "என்ன ஆச்சு, வீட்டுல சொல்லிட்டியா" என்றான்.

அப்பொழுது அவள் வீட்டில் காதல் விவரத்தைச் சொன்னதாகவும், அதற்கு அவளது பெற்றோர்கள் முடியவே முடியாது என்றதையும் சொல்லி அழுதாள். அவளைத் தேற்றுவதற்காக வசந்தன் அவள் கண்ணீரைத் துடைத்தான். முதன்முறையாக அவள் அவன் மடியில் சாய்ந்து கொண்டாள். "இன்னைக்கும் வீட்டுக்குப் போயி கேட்பேன், இல்லைன்னு சொன்னா நாம இரண்டு பேரும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்று சேரும் வேளையில் பிரபல வெள்ளித்திரை நாயகி நடிக்கும் கோலம் என்ற நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் தாய் மீனா அவளது கணவரிடம் கூறுகிறாள். "பாவங்க இந்தப் பொண்ணு எத்தனை வருசமா அந்தப் பையனைக் காதலிக்குது. ஆனா இந்தப் பொண்ணோட வீட்டுல சம்மதிக்கவே மாட்டேங்குறாங்களே" என்று கூறி துளிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.

இரண்டாவது கல்யாணம்

வழக்கத்துக்கு மாறாக அன்று மிகுந்த புன்னகையோடு எழுந்தாள் விசாலம்மா. புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீரெடுத்து முன்வாசல் தெளித்து விறுவிறுவென கோலம்போட்டாள். பஞ்சாரத்துக் கோழியெல்லாம் வெளியே மேயவிட்டாள். எதிர்வீட்டில் எப்பொழுதும் ஐந்தரை மணிக்கு எழுந்துவிடும் சேது தாத்தா "என்னாத்தா காலையிலேயே எழுந்திருச்சு கோலமெல்லாம் போட்டுட்டேன்னாரு". அதற்கு இதுநாள் வரைப் புடிச்சிருந்தப் பீடை நேத்து ராவைக்கு ஒழிஞ்சதுல இருந்து பொழுது எல்லாம் என் குடும்பத்துக்கு நல்ல பொழுதுதேன் என்றாள்.

இதற்கு முந்தினதினம்தான் தனது மருமகள் ஆனந்தியை அவளது பிறந்தவீட்டுக்கு மூன்று வாரம் போய்வருமாறு அனுப்பி இருந்தாள் விசாலம்மா. ஆனந்திக்கும் விசாலம்மா மகன் நாகராசுக்கும் திருமணமாகி 4 வருடம் முடிந்தும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

காலையில் எழுந்து வழக்கம்போல வயலுக்குப் போவதற்கு அழுக்கான வேட்டியுடன் கிளம்பிக்கொண்டிருந்தான் நாகராசு. "ஆத்தா நான் வயலுக்குப் போறேன்" என்று புறவாசல் வழியாக புறப்பட்டான்.

வெடுக்குனு வச்சத வச்ச இடத்துலேயே வச்சுட்டு புறவாசலுக்கு ஓடினாள் விசாலம்மா. "நாகராசு, உனக்கு இந்த சம்சாரம் வேண்டாம்ப்பா, இன்னைக்கு நம்ம பக்கத்து ஊருலருந்து உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றேன்னு சொல்லி இருக்காங்கப்பா" என்றாள்.

இதைக் கேட்டும் அதிகம் கோபப் படாதவனாக, தோளில் கிடந்த துண்டை மட்டும் எடுத்து உதறிவிட்டு தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு விசாலம்மாவை முறைத்துப் பார்த்தான். "நீயும் இதை என்கிட்ட ரெண்டு வருசமா சொல்லிகிட்டேதான் இருக்க, ஆனால் இதெல்லாம் கூடி வராது சொல்லிபுட்டேன். கல்யாணமே வேணாமுன்ன எனக்கு இவள கட்டி வச்ச, இப்போ இவ வேண்டாம்னு இன்னோருத்தியா" என்று சாடினான்.

அந்த எடுப்பு எடுத்தவளைப் பற்றி பேசவேண்டாம் என்றாள். மேலும் நாகராசுவின் தங்கை ராணி முழுகாம இருக்கிறதா கல்யாணம் செஞ்சு கொடுத்த இடத்துல இருந்து சேதி வந்ததும் இரண்டு நாட்களாகவே விசாலத்தை பெருமையின் உச்சியில் வைத்திருந்தது. "மலட்டுப் பொண்ண நம்ம தலையில கட்டிவச்சு நம்ம வம்சத்தை அழிக்கப் பாக்குறானுவ, எம்பொண்ணு போன 4 மாசத்துல முழுகாம இருக்கா. இங்க என்னாடான்னா இந்த மலட்டுப் பொண்ணு வச்சு நான் 4 வருசமா மாரடிக்கிறேன்" என்று புறவாசலில் இருக்கும் காய வைத்த வரட்டிகளையெல்லாம் எடுத்த படியே பேசிக் கொண்டிருந்தாள் விசாலம்.

அந்த சிறுக்கி வந்ததுல இருந்தே நேரம் சரியில்லையென்று கடுகடுத்துக் கொண்டாள். "நீ என்ன செய்வியோ தெரியாது எனக்கு நம்ம வம்சம் இதோட நின்னு போறதுல சம்மதம் இல்ல. இன்னைக்கு மதியத்துக்கு உன்னை பார்க்க வருவாக, ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுதான் வாராக, நீ கழனியிலிருந்து வெள்ளன வந்து சேரு. வெயில் உச்சியில இருக்கும் போதே வந்துருவாக" என்று விசாலம் சொன்னாள்.

அம்மா எப்பவும் இப்படித்தான் பேசுமென்று அறிந்துகொண்டவன், மறுப்பேதும் பேசாமல் வயலுக்குப் புறப்பட்டான். மனதுக்குள்ளேயே மதியம் வீட்டுக்கு வரவேண்டாமென்று முடிவெடுத்துக் கொண்டான். இதற்கு மனைவி மேலிருந்த அவனது பாசத்தைவிட, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறதுல விருப்பம் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக இருந்தது.

இதயெல்லாம் அங்கிருந்தே கேட்டபடி இருந்த சேது தாத்தா விசாலத்திடம் மகன் ஒத்துக்கிட்டானா என்றார். அவருக்கு விசாலம்மா செய்வது எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் எதிரெதிர் வீடு என்பதற்காக எப்பொழுதும் பேசி வைப்பார். இவருக்கு ஆனந்தி மீதும் ஒரு பாசம் உண்டு. பல நேரம் இவரு நோயில் கஷ்டப்பட்ட போதெல்லாம் திண்ணையில தனியா படுத்திருப்பவருக்கு ஆறுதலா கஞ்சித்தண்ணி கொடுத்து பேசிவிட்டு அவள் வருவதே காரணம். பதிலாக விசாலம்மா அவருக்கு ஒன்றுமே சொல்லவில்லை. சேது தாத்தா ஆனந்தியுடன் பாசமாக இருப்பது விசாலம்மாவிற்குப் பிடிக்கவில்லை.

படபடப்பாக அனைத்து வேலையும் முடித்துவிட்டு மாட்டுக்கு கழனித்தண்னியும் வைத்துவிட்டு "நம்ம பையனுக்கு ஒன்னும் கொறயில்ல, எல்லாம் அவளுக்குத்தான் குறை. என் வம்சத்துல பொறந்த எம்பொண்ணு போயி நாலு மாசத்துல உண்டாயிட்டா. ஆனந்திக்குத்தான் குறை இருக்கனும். போன சனியன் திரும்பி வர்றதுக்குள்ள இவன ஒரு தாலிய கட்ட வச்சிடனும். வந்த சிறுக்கி இங்கனையே கெடந்தா கெடக்கட்டும் இல்லைன்னா அவ அப்பன் வீட்டுக்குப் போகட்டும்" என்று மாட்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். நடந்ததையெல்லாம் சொல்லி முழுச்சம்மதத்துடந்தான் மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள். கிட்ட திட்ட இது தேதி குறிக்க மட்டுமே. அவர்களுடைய வீட்டில் வரதட்சணை எதுவும் கொடுக்க முடியாமல் இருப்பதாலும், வீட்டில் நான்கு பெண்கள் கல்யாண வயசுல இருப்பதாலேயும் முதல் பொண்ணை இப்படி கட்டிவைக்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க.

மெதுவாக நகரும் சூரியன் அன்று விசாலத்துக்காக வேகமாக நகர்ந்தது போல ஒரு உணர்வு அவளுக்கு. ஆனால் இன்னும் நாகராசு வீட்டுக்கு வந்து சேரலை. தெருவழியே போன ஒருத்தர்கிட்ட தன்னோட பையனை வயக்காட்டுல இருந்து வேகமா வரச்சொல்லும்படி சொல்லி அனுப்பியிருந்தது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.

மாப்பிள்ளைப் பார்க்க வந்த பதினைந்து பேரும் வந்து வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டனர். வந்தமர்ந்த பெண்ணின் அப்பா ராசவேலு சுவற்றில் கவனிக்கப் படாததாய் தொங்கிக் கொண்டிருந்த விசாலம்மாவின் கணவர் படத்தைக் காண்பித்து இவர்தானா உங்க கணவர் என்று கேட்டார்.

"அவரேதேன், 10 வருசமாச்சு அவரு போயி சேர்ந்து. இந்தக் குடும்பத்தைப் படாதபாடு பட்டு கரை சேர்த்துட்டேன்னு நினைச்சா கொலத்தக் கெடுக்கன்னே ஒருத்தி வந்து சேர்ந்துட்டா. இந்தக் கல்யாணம் மட்டும் நல்ல படியா முடிஞ்சுதுன்னா நான் மகராசியா போய் சேர்ந்துடுவேன்" என்று சொல்லிக் கொண்டே பலகாரங்கள் பரிமாறினாள்.

நாகராசு வருவதாய்த் தெரியவில்லை. ஆனால் பேச வேண்டியதெல்லாம் கிட்டதிட்ட பேசி முடித்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்துல திருமணத்திற்கு நாளும் குறித்தாயிற்று. அந்த சமயம் உள்ளே இருக்கும் கூட்டத்தை கவனிக்காத பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் திண்ணையில் வந்து அமர்ந்து விசாலத்தைக் கூப்பிட்டார்.

விசாலம்மா மகளைக் கட்டிக் கொடுத்த ஊர்க்காரரென்று தெரிந்ததும் விசாலம் உடனடியாக வெளியே சென்று பேச ஆரம்பித்தாள். வந்த பெரியவர் தந்தி போல பேச ஆரம்பித்தார். "உம்மவளுக்கு வயித்துல புள்ள ஏதும் இல்லையாம் அது வெறும் கட்டிதானாம். ஊரு பெரிய ஆஸ்பத்திரியில போய் பார்த்ததற்கு இவளுக்கு புள்ள பொறக்குற பாக்கியமும் இல்லைன்னுட்டாங்க. நீ போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு. மாப்பிள்ளை வீட்டுல இவள வெட்டி விட்டுட்டு வேற கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சுறுவாக போலிருக்கு. எனக்கு சோலி நெறய கெடக்காத்தா. நான் கிளம்புறேன்" என்று கூறி விட்டு திண்ணையைக் காலி செய்துவிட்டார். அந்தத் திண்ணையிலேயே உட்கார்ந்து அழுதபடி உறைந்து இருந்தாள் விசாலம்மா. இதைப் பார்த்துவிட்டு வேறு ஏதும் சொல்லாமல் சொல்லி அனுப்புங்கள் என்று கூறி விட்டு வந்தவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேது தாத்தா மெதுவாக புன்னகைத்துக் கொண்டார்.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்