குறுந்தொடர் - பகுதி 1
"காலையில 8 மணி ஆயிடுச்சு, சீக்கிரம் எந்திருச்சு கிளம்புடா, நீ கிளம்பிட்டு என்னையும் எழுப்பி விடு" என்று படுக்கையில் புரண்டபடியே முணங்கினான் பாலா.
"ஏன்டா காலையிலேயே உயிரை வாங்குற, என்னை எழுப்புறதுக்கு நீ போய் கிளம்பிட்டு பிறகு என்னை எழுப்பியிருக்கலாம்ல" என்றபடியே திரும்பிக் குப்புறப் படுத்துக் கொண்டு பேசினான் கரன்.
"அதான் இப்போ எந்திருச்சுட்டல்ல, போய் கிளம்புடா" என்று கூறிவிட்டு திரும்பவும் தனது தூக்கத்தைத் தொடர்ந்தான் பாலா.
இவன் எப்பவுமே இப்படித்தான் சோம்பேறி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், இவன் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியவில்லை என்ற எண்ணத்தோடு துண்டோடு குளியலறைக்குக் கிளம்பிவிட்டான்.
பாலாவும், கரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளில் இருந்தே இரண்டு வருடமாக இருவரும் இணை பிரியாத பறவைகள். பல விசயத்திற்கும் ஒத்துப் போகாத எண்ணம் இருந்தாலும் இருவரையும் சேர்த்து வைத்திருப்பது என்னவோ விட்டுக் கொடுத்தலும், அன்பும்தான். மிகவும் சிறிய அளவிலான அந்த அறையில் ஒரே மெத்தைதான். மெத்தைக்கு அருகே இருந்த சிறிய சன்னலின் வழியே காலைப் பொழுதின் மஞ்சள் வெயில் உள்ளே வந்தது. எப்பொழுதுமே சண்டையிடுவது போல காட்சியளிக்கும் இருவரின் நட்பே எந்தச் சண்டைக்குப் பிறகும் இதுவரை பேசாமல் இருந்ததில்லை.
தன்னை மட்டும் எழுப்பிவிட்டு இவன் மட்டும் ஏன் இன்னும் தூங்கவேண்டுமென்று மூலையில் இருந்த கணினியில் சத்தமாகப் பாட்டை ஓடவிட்டுவிட்டு குளியலறைக்குச் சென்றான் கரன்.
எழுந்து அதை நிறுத்திவிட்டுத் தூங்குவதற்கு சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு அப்படியே கண்மூடிப் படுத்துக் கொண்டான், சின்ன ஊடலோடு. பாலாவுக்கு எப்பொழுதுமே கரன் இதுபோல செய்யும் சேட்டைகள் பிடித்திருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்வதில்லை.
குளியலறை விட்டு வெளியே வந்த கரன், பாலாவைக் கிளம்பச் சொன்னான். ம்ஹீம் என்று உதட்டை ஒரு ஓரமாக வைத்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து போனான் பாலா.
"போடா டேய், போடா. போய் கிளம்புற வேலையைப் பாரு. எங்களை மட்டும் எழுப்பி விட்டல்ல" என்று சிரித்துக் கொண்டே பேசிவிட்டுத் தலைவாரிக் கொண்டிருந்தான் கரன்.
தன்னுடைய கணினியில் மின்னரட்டைப் பகுதிக்குச் சென்றான். புதிதாய் அவனுக்கு ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. அந்தப் பெயரில் இதுவரை அவன் யாரையும் சந்தித்ததில்லை. சரி தன்னைப் பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கக் கூடுமென விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டான்.
"காலை வணக்க்ம்" என்று அவன் ஏற்றுக் கொண்டதும் வந்தது.
நீங்க யாரு, இது வரை உங்களை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் என்றான்.
"என் பெயர் சுயம்பு, என்னை உங்களுக்கு இன்னமும் தெரியாது, ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்களைச் சந்திக்கும் இந்த நாளுக்காக நான் வெகுநாட்களாக காத்திருக்கிறேன்" என்றது.
சற்றே ஆச்சரியமடைந்த கரன், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, "ஆச்சரியமா இருக்கு, என்னைப் பார்க்க பல நாட்களாக் காத்திருக்கீங்களா?" என்றான்.
கிளம்பி விட்டு வெளியே வந்த பாலா "யாரு கூடடா சேட் பன்ற? ஏதாவது பொண்ணாடா? அப்படியே நீ பேசி என்னத்தைக் கிழிக்க போற, என்னிடமாவது கொடு" என்றான். கரனுக்கு அவ்வளவாக பெண்களுடன் பழக்கமில்லை. பாலா வாய்ப்பேச்சில் பேசினாலும், செயலில் பெண்களிடம் ஒன்றுமில்லை.
"சரி, எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது, நாம் பிறகு சந்திக்கலாம்" என்று விடைபெற்றுக் கொண்டான் கரன் சுயம்புவிடமிருந்து. பாலாவிடம் நடந்ததைச் சொன்னான்.
9 மணிக்கு ஆரம்பிக்கும் கல்லூரிக்குச் சரியாக 8.45 க்கு இருவரும் கிளம்பினர்.
"இன்னைக்கும் காலையில சாப்பாடு கிடையாதா?" என்று சலித்துக் கொண்டான் பாலா.
வகுப்புக்குச் சென்றதும், முதல் பாடவேளை வாத்தியார் உட்பட சில மாணவர்களும் சேர்ந்து ஆவலோடு சாம் என்ற பையனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவனிடம் கரன் அங்கு என்ன நடக்கிறதென்றான்.
"ஏதோ அவங்க அப்பா கடல்ல பார்த்தாராம் ,அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்" என்று அலட்சியத்தோடு சொன்னான். என்னவா இருக்கும், சரி அப்புறமா கேட்டுக்கலாமென்று கரனும், பாலாவும் அமர்ந்தனர்.
சற்றுத் தள்ளி பெண்கள் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் சலசலப்பில் லதா மட்டும் வெட்கித் தலை குணிந்தாள்.
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து>>
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும்
Posted by
ஒளியவன்
at
Tuesday, July 22, 2008
Labels: தொடர்
0 comments:
Post a Comment