குறுந்தொடர் - பகுதி 3
"டேய் பாலா, இங்க வா. நான் காலையில சொன்னேன்ல சுயம்புனு ஒருத்தர் பேசுறாருனு, அவர் என்னென்னமோ சொல்றாருடா" என்று நடந்ததை விளக்கினான் கரன்.
"நம்ம பசங்கதான் யாராவது இருக்கும்டா, விளையாடுறானுக" உள்ளே சற்று யாராக இருக்குமென யோசித்துக் கொண்டே இருந்தாலும் அலட்சியமாகவே சொல்லி முடித்தான்.
கரன் விடவில்லை மீண்டும் சுயம்புவிடம் பேச்சுக் கொடுத்தான். "நீங்க யாருன்னு எனக்கு சொல்லுங்க. மேற்கொண்டு என்னிடம் உங்களைப் பற்றிய விவரத்தைச் சொல்லவில்லைன்னா இதோட பேச்சை நிப்பாட்டிக்குங்க" என்று பதட்டத்தோடு தட்டச்சினான்.
"உங்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரியலை, உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னும் உங்களுக்குத் தெரியலை. உங்களுக்கு நான் மிகவும் நெருக்கமானவன். ஆனால் இப்பொழுது எதையும் சொல்லும் நிலைமையில் நானில்லை. எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்." என்று விடுகதையோடு முடித்தான் பேச்சை.
"இல்லை, நீங்கள் என்னிடம் இப்படிப் புதிராகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நினைக்கும் ஆள் நானில்லையென எண்ணுகிறேன்" என்றான்.
சற்று நேரம் பதிலில்லை. 2 நிமிடத்திற்கு மேல் கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பதில் வந்து சேர்ந்தது.
"இந்த சூழ்நிலையில் உங்களுக்கு நான் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாது. ஆனால் இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தீர்களானால், பிறகு தானாகவே உங்களுக்கு ஒரு நாள் புரிய வரும்" என்றான் சுயம்பு.
தன்னைப் பற்றி ஏதேதோ கூறும் சுயம்புவை நம்ப முடியாதவனாக இணைப்பைத் துண்டித்தான் கரன்.
அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தவனை ஆசுவாசப் படுத்துவதற்காக பாலா கணினியில் ஒரு பாடலைப் போடுவதற்கு வந்தான். அந்த நேரம் பார்த்து லதா மின்னரட்டைக்கு கரனுக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தாள். சற்று விளையாடிப் பார்க்க எண்ணிய பாலா, அவளிடம் பேச எண்ணினான்.
"வணக்கம் கரன், எப்படி இருக்க" என்றாள்.
"இப்பந்தானே கல்லூரியில இருந்து வந்தோம், அதுக்குள்ள எதுவும் ஆகலை, நல்லாதான் இருக்கேன்" என்றான் பாலா கரன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு.
"என்ன கிண்டலா? நான் பார்க்கதான் அமைதியான பொண்ணு, இங்க எங்க தோழிங்ககிட்ட கேட்டாதான் என்னைப் பற்றி உனக்குத் தெரியும்" என்றாள்.
"இப்படியெல்லாம் சொல்லாதே, நான் பயந்துடப் போறேன். உண்மையிலேயே இவ்வளவு அமைதியா இருக்க நீயே இப்படி வாய் பேசுவன்னா, உன்னோட தோழி சிநேகால்லாம் வாய்கிழிய பேசுவாளோ" என்றான்.
"நீ கூடதான் அமைதியா இருக்க, இப்போ என்னடான்ன இந்த அளவுக்குப் பேசுற? சிநேகாவைப் பற்றியெல்லாம் ஏன் இப்போ பேசுற?" என்றாள்.
"நான் எப்பவுமே இப்படித்தான். ஆனால் கல்லூரியில மட்டும்தான் அப்படி இருப்பேன், அதுவும் பெண்கள் இருந்தா. உண்மைதான் ஒரு பொண்ணைப் பற்றி இன்னொரு பொண்ணுகிட்டப் பேசினா கோபம்தான் வரும். உண்மையச் சொன்னா, எனக்கு உன்னை விட சிநேகாவைத்தான் பிடிச்சிருக்கு" என்றான் அவளைக் கிண்டிப் பார்க்க.
கொஞ்ச நேரம் பதிலில்லை. அமைதியாக இருந்தது. ஒருவேளை ஏதாவது தவறா பேசிவிட்டோமோ என்று பாலா எண்ணினான். "என்ன பதிலில்லை" என்று மேலும் கேட்டான்.
இதைப் பார்த்துவிட்ட கரன், சற்றே கோபப்பட்டு "ஏன்டா என் பேரைச் சொல்லிப் பேசுற, அவ எதாவது தப்பா நினைச்சுடப் போறா. தள்ளிப் போடா" என்று அவனை விலக்கிவிட்டு கணினி முன் அமர்ந்தான் கரன்.
"டேய் என்னையா திட்டுற. என்னைவிட அவதானே உனக்கு முக்கியம்? பொண்ணு வந்த உடனே என்னை ஓரந்தள்ளுறியா?" தான் செய்தது தவறு என்றாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல் சின்னக் கோபத்தோடு கேட்டான் பாலா.
"அப்படி இல்லடா, நமக்குள்ள எதுவும்னா சரி, நீ எப்படி என் பேரைச் சொல்லி அந்தப் பொண்ணுகிட்ட பேசலாம். இப்போ அந்தப் பொண்ணு என்னைத் தப்பா நினைச்சுருக்கும்ல" என்றான் அவனைச் சமாதானப் படுத்தும் நோக்கத்தோடு இளகிய குரலில்.
"இருக்கட்டும் கரா, என்ன இருந்தாலும் அவ பொண்ணு, நீ எதிர்பார்க்கிறது என்கிட்ட இல்ல" என்றான் கிண்டலாக. ஆனால் உள்ளூர ஒரு சின்னக் காயம், அந்தப் பெண்ணிற்காக தன்னைத் திட்டிவிட்டானே என்று.
"டேய், என்னடா இது. இதுக்கு ஏன் இப்படியெல்லாம் பேசுற. அவளுக்கும் நமக்கும் இடையில எந்த சம்பந்தமும் இல்ல. அவகிட்டையே சொல்லிடுறேன், இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு" என்று வேகமாகத் திரும்பினான் கணினியை நோக்கி.
அதற்குள் அங்கே ஒரு விசயம் தட்டச்சப் பட்டிருந்தது. அதை வாசித்தவன் சங்கடப் பட்டு விழித்தான். அதை வாசித்த பாலாவும் நெருக்கடியாக உணர்ந்தான்.
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 3
Posted by
ஒளியவன்
at
Monday, July 28, 2008
Labels: தொடர்
0 comments:
Post a Comment