ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - 2

குறுந்தொடர் - பகுதி 2

“இவளுகளுக்கு வேற வேலக்கழுதையே இல்ல, எப்ப பார்த்தாலும் கெக்கபெக்கேன்னு சிரிச்சே பசங்கள சோலிய முடிக்குறது, அங்கே என்னடான்னா கடல்ல எதையோ பார்த்ததைப் பற்றி இவ்வளவு தீவிரமா பேசுறாங்க” என்று சலிப்புத் தட்டிப் பேசினான் பக்கத்திலிருந்த சுகுமார்.

“டேய் கரா உன்னைப் பத்தித்தான் பேசி சிரிக்குறாங்கன்னு நினைக்குறேன், நான் சொல்ல சொல்ல நீ கேட்க மாட்டேங்குற. லதா மேல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு” என்று பீடிகை போட்டுப் பேசினான் பாலா.

“சும்மா இருடா, லதா பக்கத்துப் பேட்சுப் பொண்ணு அவ்வளவுதான், இதுவரைக்கும் நான் அவகிட்ட சரியாப் பேசினது கூட இல்ல. அந்தப் பொண்ணு நல்லப் பொண்ணுடா, சுத்தி உக்காந்துருக்கதுதான் வெவகாரமானதுக” என்றான் கரன்.

“நடத்து கரா நடத்து. நான் சொல்றத நம்பாம அந்தப் புள்ளைக்கா பரிஞ்சுப் பேசுற” என்று எகத்தாளமா சிரித்துக் கொண்டான் பாலா.

அங்கே சற்று நேரம் அடங்கியிருந்த சிரிப்பொலி மீண்டும் எழுந்தது. தூண்டில் புழு போல வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் லதா.

“ஏய் உன் ஆளு உன்னைப் பார்க்கவே மாட்டேங்குறான், பக்கத்துல உக்கார்ந்துருக்க பாலாதான் பார்க்குறான், இது என்ன முக்கோணக் காதலாடி?” என்று வழக்கமான பெண்கள் குசும்போடு கேட்டாள் லதாவின் தோழி சிநேகா. கூட்டமே மறுபடி ஒரு முறை கிளுக்கென சிரித்தது.

“அய்யோ கடவுளே, கொஞ்ச நேரமாவது சும்மா இருங்கடி” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லதா. உள்ளுக்குள்ளே இவர்கள் இப்படிப் பேசுவது அவளுக்கு சுகமாய் இருந்தது.

வகுப்பில் நடக்கும் ஆராவாரத்தின் ஒலி கேட்டு துறைத் தலைவர் அவரது அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்ததும் வாத்தியார் சார்லஸ் பதபதைத்தார். “ஏய் பொண்ணுங்களா கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? ம். ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறுவிட்டு பாடம் எடுக்க முன்னாடி சென்றார் சார்லஸ்.

உணவு இடைவேளையில் எப்பொழுதுமே பாலா, கரன், சுகுமார், சாம் எல்லோரும் ஒரே உணவு விடுதியில்தான் சாப்பிடுவார்கள். அன்று சாம் ஒரு ஆச்சரியப் பார்வையோடே உலா வந்தான்.

“என்ன சாம், காலையில இருந்து உன்னைச் சுற்றி ஒரேக் கூட்டம். கலக்குற, அப்படி என்னத்த உங்கப்பா கடல்ல பார்த்தாரு, எங்ககிட்டையும் சொல்லேன்” என்றான் வழக்கமானக் குசும்போடு பாலா.

சற்று அலட்சியட்சத்தோடும், பெருமிதத்தோடும் பார்த்தான் சாம். “டேய் சொன்னா நம்ப மாட்டீங்க” என்று ஆரம்பித்த சாமை மடக்கிப் பேசினான் சுகுமார்.

“நீ சொன்னதை இதுவரைக்கும் நம்புனா மாதிரி பேசுற? வழக்கம்போல நம்ப மாட்டோம். நடந்ததை மட்டும் சொல்லு, கப்ஸா விடாம” என்றவுடன் அனைவரும் சாமைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தார்கள்.

“டேய், இந்த நையாண்டிதானே வேண்டாங்குறது. சொல்றத கேளுங்கடா, எங்க அப்பா நேத்து கடல்ல இருந்து திரும்பி வரும்போது வலையில ஒன்னு சிக்கியிருந்துருக்கு. இழுக்க வரலியேன்னு உள்ள போயி பார்க்கலாம்னு மூனு பேரு உள்ள குதிச்சுருக்காங்க. அதுல ஒரு மனுசன் மாதிரியே உடம்பு எல்லாம் இருக்க ஒன்னு தண்ணிக்குள்ள இருந்துருக்கு. இவங்களைப் பார்த்ததும் வேகமா போயிருக்கு. அது கடல் கன்னி மாதிரி ஏதாவதா இருக்கும்னு எங்கப்பா சொன்னாருடா” என்றான் ஆர்வமாக.

“உங்க அப்பா சரக்குப் போட்டா, நம்ம டீக்கடையில இருக்க மாஸ்டரைப் பார்த்து சிவாஜி மாதிரி இருக்கேம்பாரு, நேத்தும் என்ன, சரக்குதானா? கடலாம், கடல் கன்னியாம்” என்றான் பாலா.

“டேய் சும்மா இருடா பாலா. நீ கோச்சுக்காதடா சாம், இவன் எப்பவுமே இப்படித்தான் உண்மையை பட்டுபட்டுனு பேசிடுவான்” என்று கேலியாகப் பேசினான் கரன்.

உங்க கூடல்லாம் சகவாசம் வச்சுகிட்டதுதாண்டா தப்புன்னு புலம்பினான் சாம்.

மாலை 5 மணிக்கு வகுப்பு முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். பாலாவும் கரனும் கொஞ்சம் பொறுமையாக இடத்திலேயே அமர்ந்திருந்தனர். லதாவும், அவளது தோழி சிநேகாவும் இறுதியாக கிளம்பினார்கள். கரனைக் கடக்கும்போது சிநேகா செய்த கிண்டலில், “ஏய் சும்மா இருடி, எப்ப சொல்லனும்னு எனக்குத் தெரியும். வாடிப் போகலாம்” என்று வெட்கத்தில் சிவந்து கொண்டே லதா கரனையும், பாலாவையும் கடந்து சென்றாள்.

“டேய், இது அதுதாண்டா. கலக்குடா கரா. பொண்ணைப் பத்திப் பேசினாலே எரிஞ்சு விழற உனக்குப் போயி பொண்ணு மாட்டுது பாரு. எனக்கும் எதையாவது ஏற்பாடு செஞ்சுக் கொடேன்” என்று வழக்கமானக் கிண்டலோடு கரனைக் கேலி செய்தான் பாலா.

“அப்பவே போயிருக்கலாம், நீ சொன்னேன்னு உட்கார்ந்தேன் பாரு என்னை அடிச்சுக்கனும்” என்று பதில் சொல்லிகொண்டே இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர். வீட்டிற்குச் சென்று கணினியைப் பார்த்தான் கரன்.

“உங்க கிட்ட நேரடியாப் பேசனும், கடல்ல நடந்த விசயம் இன்னைக்கு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைப் பற்றித்தான் பேசனும்” என்று கூறி நின்றது சுயம்புவின் மின்னரட்டை. கரன் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்