ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

அவன் பெயர் பழனிவேல்...

பால்ய காலத்து குறிப்புகள் - 3

ஒரு நீண்ட தனிமையின் பின்னர் தூங்கிவிடும் சில இரவுகளில் திடீரென என் கனவைக் கிழித்து வரும் ஒரு கூரிய தென்றலாய் அவன் ஞாபகம்... சற்று நேரம் விழித்திருந்து அவனைப் பற்றிய நினைவுகளை அசைபோட்டு விட்டு இப்பொழுது அவனைச் சந்திக்க முடியாத சூழ்நிலையை எண்ணி மனக்கனத்தோடு மீண்டும் தூங்கிவிடுவது வழக்கம். அவன் எங்கே இருந்தாலும் அவனுக்கான ஒரு ஆத்மார்த்தமான இடம் என் மனதில் என்றும் உண்டு. அவன் பெயர் பழனிவேல்...

ஒவ்வொரு நாளும் காலை அம்மாவிடம் சென்று தொண்டைக்குள் தொடங்கி உதட்டிலேயே முடிந்துவிடும் கம்மிய குரலில் "இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுக்குறேம்மா, நாளையில இருந்து ஸ்கூலுக்கு போயிடுறேன்" என்று கூறுவது எனக்கு பழக்கம். அப்பொழுது தான் என் அம்மாவுடன் பழக்கமானார் பழனியம்மா, ஆம் இன்று வரை அவர்கள் பெயர் எனக்குத் தெரிந்ததில்லை, அவர்களை அப்படி அழைத்தே பழக்கப் பட்டுவிட்டேன். என்னை பள்ளிக் கூடத்திலிருந்து சில நேரம் கூட்டி வரும் என் அம்மாவும், பழனியம்மாவும் பேசிக் கொண்டே வருவார்கள். நான் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்தபொழுது சீறுடை அணிந்தால் பள்ளிக்குத்தான் போகிறேனென எண்ணிக் கொண்டு சீருடை அணிய மாட்டேனென வண்ண உடை போட்டுக் கொண்டு பள்ளிக் கூடம் கூட்டிப் போய், பள்ளிக்கூடத்து ஆயா முன்னர் என்னை சீருடை அணிய வைப்பார்களாம், சின்ன பிரம்பைக் காட்டி பயமுறுத்திய படியே, இந்தக் கதையெல்லாம் பழனியம்மாவிற்கு மனப்பாடமே ஆயிருக்கக் கூடும்.

அப்பொழுது கிடைத்த என் பால்ய காலத்து சிநேகிதன்தான் பழனிவேல். அவனுடன் பழக ஆரம்பித்த பிறகு பள்ளிக்கூடத்திற்கு லீவு எடுப்பதாகக் கூறி வந்ததை நிப்பாட்டிக் கொண்டேன். அவனும் நானும் ஒரே வகுப்பில் படித்ததே இல்லை, இருப்பினும் ஒவ்வொரு சாயங்காலமும் என் அம்மாவுடனோ, அல்லது அப்பாவின் வண்டியிலோ நானும் அவனும் வந்திடுவோம். அப்பொழுதெல்லாம் என் அப்பாவின் முன்னர் நானும், அப்பாவின் பின்னர் அவனும் உட்கார்ந்து கொள்வோம். ஒருநாள் பழனி என் அப்பாவிடம் "பாஸ்கரப்பா, நீங்க பாட்டு பாடிட்டு வர்றீங்களா?" என்று கேட்டான். அதைக் கேட்டு என் அப்பாவிற்கு பயங்கர ஆச்சரியம், வாயைத் திறந்து பாடவில்லை, அதுவும் எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு எப்படி தெரியவந்ததென்று... எங்களை இறக்கிவிடும் போது, உனக்கெப்படி தெரியுமென அப்பா கேட்டதற்கு அவன் கூறிய பதில் என் முதல் ஸ்டெதஸ்கோப் சோதனை அனுபவம்... "பாஸ்கரப்பா, நான் கீழ விழுந்துடக் கூடாதுன்னு உங்கள கெட்டிமா புடிச்சுப்பேனா, அப்போ முதுவுல காத வச்சு கேக்கும்போது நீங்க பாடுறது கேக்குது" என்று. என் அப்பாவிற்கும் அந்த சோதனை புதிதுதான், அவனை மெச்சிக் கொண்டார் அன்று முழுவதும்.

நான் ஆறாவது படிக்கும் காலத்தில் அடிக்கடி அப்பாவை வரவேண்டாமென்று சொல்லிவிட்டு அவனும் நானும் 1 மணி நேரம் நடந்தே பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு வந்திடுவோம். வருகிற வழியில் கிடக்கும் ஒருவித பெயர் தெரியாத இனிக்கும் காயை எடுத்துச் சப்பிக் கொண்டு போனது இன்னும் நாக்கில் அதன் சுவையையும், என் சுவாசத்தில் மணத்தையும் கொண்டு வருகிறது. சில நேரம் குச்சி ஐஸ், சில நேரம் தர்பூசணி என்று என் வீட்டில் தினமும் கொடுக்கும் 1 ரூபாயில் 50 பைசாவிற்கு எதையாவது வாங்கிவிடுவோம். ஒரு நாள் வெயில் காய்ந்துகொண்டிருந்தது, அவன் செருப்பு பிய்ந்துபோய் விட்டதென்று அன்று செருப்பில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் காலைத் தூக்கி தூக்கி நடப்பதைப் பார்த்து மனசு பொறுக்காமல் "என்னோட செருப்பைப் போட்டுக்கோ, எனக்கு வெயில் ஒன்னும் பண்ணாது" எனக்கூறி அவனை சமாதானமடைய வைத்து செருப்பை மாட்டிக்கொள்ளச் செய்தேன். உண்மையில் நான் செருப்பின்றி எங்குமே சென்றதில்லை. எனக்குக் கால் வெகுவாகச் சுட்டது, இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வீடு வரைக்கும் வந்து சேர்ந்தேன், என் வீடு வந்ததும் செருப்பைக் கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டான். இரவு முழுவதும் எனக்கு கால் வலிப்பதைப் பார்த்துவிட்டு அம்மா கேட்டவுடன் பயந்துபோய் உண்மையைச் சொல்லிவிட்டேன். "அவன் கர்ணன் மாதிரிடி" என்று என் அப்பா பெருமை பேசிக் கொண்டார், உள்ளுக்குள்ளே இப்படி விவரம் தெரியாம இருக்கானே பையன் என்ற எண்ணம் இருந்தது உண்மை. "அப்பா வேணும்னா அவனுக்கொரு செருப்பு வாங்கிக் கொடுத்துடுறேன், ஆனா இனி நீ செருப்பைக் கொடுக்க வேண்டாம்" என அப்பா சொல்லிவிட்டார்.

ஆறாவதில் நான் ஆங்கில வழிக் கல்வியிலும், அவன் தமிழ் வழிக்கல்வியிலும் படித்தோம். அவனது அப்பா தண்டபானி ஒரு மெத்தக் குடிகாரர். இருக்கும் பணம் எல்லாவற்றிற்கும் மொத்தமாகக் குடித்துவிட்டு பல நேரம் பழனியையும், பழனியம்மாவையும் அடிக்கும் பழக்கமுள்ளவர். அவனுக்கு எப்பொழுதுமே அவனது அப்பாவின் மீது ஏக பயம். படிப்பில் மதிப்பெண் சரியாக எடுக்காவிட்டாலும் அடி பயங்கரமாக விழும். இதனாலேயே பள்ளியருகே இருக்கும் ஒரு கோவிலில் உள்ள ஒரு இலையை எடுத்து படிப்பு இலை என ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்துக் கொள்வான். நான் வழக்கமாக ஒரு மயிலிறகும் அது வளர்வதற்கு இரண்டு அரிசியும் வைத்துக் கொள்வேன். அது வளருவது போலவே எனக்கும் ஒரு எண்ணமுண்டு அப்பொழுது.

பரீட்சை எல்லாம் முடிந்து நாங்கள் கோலி பம்பரம் பட்டமென விளையாட்டை ஆரம்பித்த தருணம் அது. பழனி என் தெருவைத் தாண்டி மண்ணெண்ணெய் வாங்கி வர சென்று கொண்டிருந்தான். "விளையாட வரலியாடா" என்றேன். "தோ, பாஸ்கரு, கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல குடுத்துட்டு உங்கூட வெளாட வர்றேன்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் எனது தெருவில் எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே ஓடினார்கள், என் அம்மாவும் சேர்ந்து. என்னவாக இருக்குமென நானும் பின்னாடியே சென்றேன், அது பழனி வீட்டு முன்னர் போய் நின்றது. கூட்டத்தில் ஒருவர் என் அம்மாவிடம் கூறினார் "பாவம்மா அந்தப்புள்ள... கிருஷ்ணாயில் வாங்கக் கொடுத்த காச வழியில தொலைச்சுடுச்சு, அதுக்கு பழனியம்மா இரு இரு அப்பா வரட்டும் உனக்கு வச்சுக்குறேன்னு சொல்லிட்டு அது ரேஷணுக்கு போயாரதுக்குள்ள இந்தப் புள்ள தூக்கு மாட்டி செத்துப் போச்சும்மா" என்றார். அதிர்ச்சியில் என் அம்மாவும், அழுகையில் நானும்....

"தற்கொலை செஞ்சுக்குறது கோழத்தனன்டா பாஸ்கரு" என்று ஒரு முறை அவன் கூறியது ஞாபகம் வரவே அவனது பூத உடலை பார்க்க மாட்டேனென கோபித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். இப்பொழுதும் யாராவது சின்னக் குழந்தை காசைத் தொலைச்சுட்டேன்னு அழுதா அது எவ்வளவு பணமா இருந்தாலும் உடனே நான் அதைக் கொடுத்துவிடுவேன், கொடுக்கும் பொழுதெல்லாம் பழனி என் கண்முன் வந்து மறைவான். ஒவ்வொரு முறையும் நான் கனவில் விழித்துக் கொள்ளும் பொழுதெல்லாம் தோன்றும், அவனைக் கடைசியா ஒரு முறை பார்த்திருக்கலாமோவென்று...


தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்