கடந்தகால குறிப்புகள் - 1
அந்த டீச்சரே மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் தொடங்கியது கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் எனது நான்காம் வகுப்பிற்கான பயணம். வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டையென புத்தம்புது உடையில் சீறி வரும் காற்றை எதிர்கொண்டவாறே வண்டியில் பெட்ரோல் டேங்கிற்கும் அப்பா அமரும் இருக்கைக்கும் இடையே தொடர்ந்தது அந்தப் பயணம். எனக்கு எப்பொழுதுமே அப்படி அமர்ந்து போவது பிடிக்கும், அப்பாவின் இரும்புக் கரங்களுக்கூடே, வேகமாக செல்லும் வண்டியிலே மனதிற்குள்ளேயே நான் அந்த வண்டியை ஓட்டிச் செல்வதாய் ஒரு சின்ன நினைவோடு.... இனிமை.
9 மணி பள்ளிக்கூடத்திற்கு 7.15க்கே அப்பா என்னை அழைத்துச் சென்று விட்டுவிடுவது வழக்கம். அப்பொழுதுதான் அப்பா அவரது வேலையை கவனிக்க சரியாயிருக்கும். என்னுடைய பழைய வகுப்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு. இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தேன். கோடை விடுமுறையின் இடைவெளிக்குப் பிறகு மீண்டுமந்த பள்ளிக்கூட மண்வாசனை மூக்கைத் துளைத்தது. நேரம் கடக்க கடக்க எனது வகுப்புத் தோழர்களெல்லாம் வந்தார்கள். தலைமையாசிரியர் அறைக்குச் சென்று எனது வகுப்பெதுவென்று தெரிந்து கொண்டு பவனி செல்லும் ஒரு ராஜாவைப் போல வீர நடையோடு வகுப்பு நோக்கிச் சென்றேன். 9 மணி ஆனதும் உள்ளே நுழைந்தார் எங்கள் பள்ளியிலே கண்டிப்பான டீச்சர் பட்டியிலில் ஒருவராய் இருக்கும் சரோஜா டீச்சர். அவரைப் பார்த்ததுமே சின்ன நடுக்கம், இனம் புரியாத சின்ன பயம். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வகுப்பு நாளேட்டை வாசிக்கத் துவங்கினார்.
ஒவ்வொருவராக "உள்ளேன் டீச்சர்" சொல்லிக் கொண்டு வந்தவேளை எனக்குப் பழகாத ஒரு புதிய குரல் "யெஸ் மேடம்" என்றது. யாரது வித்தியாசமாக சொல்வது என்ற எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்த்தால், எனது உயரம் மதிக்கத்தக்கவள், பளீர் நிறம், இரட்டை ஜடை, அகன்ற சிரிப்பு, சின்னப் பொட்டு, காலில் வெள்ளிக் கொலுசென எனது வகுப்புக்கு ஓர் புது வரவு.
அவளைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லாமல் கழிந்தது முதல் இடைத்தேர்வு வரை. அந்த முதல் இடைத்தேர்வில், வழக்கமாக நான் வாங்கும் முதல் ராங்க் அவளெடுத்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான மதிப்பெண் இடைவெளி 15 தேறும். நான் வாடிப் போய்விட்டேன். அது நாள் வரை வகுப்பின் சாக்பீஸ், டஸ்டர் எனது கண்கவனிப்பில் இருந்தது மாறிப்போய் அவளது கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. வீட்டிற்கு ராங்க் கார்டை எடுத்துச் சென்றால் "என்னடா முதல் ராங்க் வாங்காமல் இரண்டாவது வந்திருக்க" என்ற கேள்வி, அதுவும் என் அத்தைப் பெண்கள் இருக்கும் நேரத்தில். நான் பளீரென்று பதில் சொன்னேன் "அவள் மட்டும் காலாண்டுக்கு ஒரு பாடத்துக்காவது லீவ் போடட்டும், நான் தான் முதல் ராங்க் வாங்குவேன்" என்று. அங்கிருந்த அத்தனை பேருக்கும் கலீரென்ற சிரிப்பு.
சொன்ன படியே அவள் காலாண்டிற்கு அறிவியல் தேர்விற்கு வரவில்லை. வேறென்ன... நான் தான் முதல் மதிப்பெண். இருப்பினும் அவளுக்குமெனக்குமான மதிப்பெண் வித்தியாசம் வெறும் 25குள்ளாகத்தான். அவள் அறிவியலில் தேர்ச்சியடைந்திருந்தாலே என்னை விட நிச்சயம் முன்னால் சென்றிருப்பாளென என் உள்ளம் துடித்துக் கொண்டது. குரூப் ஸ்டடீஸ் என்ற முறையை அறிமுகப் படுத்தினார் சரோஜா டீச்சர். அதில் முதல் 8 மதிப்பெண் எடுத்தவர்கள் குரூப் லீடராகவும், மீதமுள்ளோர் அவர்களின் அங்கத்தினராகவும் இருக்க வேண்டும், தலா 5 பேர் கொண்ட குழு. மாலை வகுப்பின் கடைசி மணி நேரத்தில் அன்று கொடுத்த கேள்வி பதில்களை மனப்பாடம் செய்யச் சொல்லி சரியாக மாணவர்களை ஒப்பிக்க வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு. பின்னர் குரூப் லீடரெல்லாம் சேர்ந்து சரோஜா டீச்சரிடம் ஒப்பிக்க வேண்டும்.
அப்பொழுது அவளே வந்து எனது முதுகின் பின்னமர்ந்துகொண்டு பேசலானாள். அவளை ராஜ ராஜேஸ்வரி என்று முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்பதும், அவ்வப் பொழுது சாப்பிடுவதும், குரூப்பை கவனிக்க மறந்து சிரித்து பேசிக் கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. ஆனாலும் அதன் பிறகு அந்த முதல் மதிப்பெண்ணை நான் தவறவிடவில்லை, அவள் எல்லா தேர்விற்கும் வந்தும். ஆனால் அந்த சாக்பீஸையும் டஸ்டரையும் அவள் என்னிடம் கொடுத்த பொழுது நீயே வைத்துக் கொள் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். நான் வருடா வருடம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்துவிடுவேன், அவளும் அதைப் பாராட்டுவாள். 5ம் வகுப்பிற்கும் அதே சரோஜா டீச்சரே வந்தார். என் வகுப்புக்காரி ஒருத்தி ஓடி வரும்போது திண்ணையில் வழுக்கி முழங்கைக்கு கீழே உடைந்து போனது. அதைப் பார்த்த பதட்டத்தில் என் கைகளை அவள் இறுகப் பிடித்துக் கொண்டாள். இருவரும் அப்படியே உறைந்து நின்றோம் சற்று நேரம்.
5ம் வகுப்பு இறுதித் தேர்வும் முடிந்த பிறகு சொந்த ஊருக்குப் போகும் கனவோடே சட்டென பள்ளிக்கூடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். 5ம் வகுப்பு வரைதான் அந்த பள்ளிக் கூடத்தில் உண்டு. அதன் பிறகு ஆண்களுக்குத் தனிப் பள்ளி, பெண்களுக்குத் தனிப் பள்ளியென பிரிந்துவிடும். இரண்டும் அக்கம்பக்கம் கூட இல்லை, கொஞ்ச தூரம் போகணும். தேர்வின் முடிவுகளைப் பார்த்துவிட்டு சான்றிதழ்கள் வாங்க வந்த அன்றுதான் என் மரமண்டைக்கு எட்டியது இனி ராஜ ராஜேஸ்வரியைப் பார்க்க முடியாதுன்னு. அவள் இன்னும் எனது எண்ணங்களை விட்டகலாத என்னுடைய முதல் தோழியாகவே இருக்கிறாள்.
4 comments:
nice yar. So we will come to know all secrets of ur life right?
என் வாழ்க்கையில ரகசியம்னுல்லாம் ஒண்ணுமில்ல. சில குழந்தைப் பருவ ஞாபகங்கள் சுவையானதா இருக்கும். வாழ்க்கையில எப்போல்லாம் நான் சின்ன வயசா இருந்தபோதுன்னு தோணுதோ அப்போல்லாம் அதைப் பற்றின ஒரு பதிவு வரும்.
கதை மிகவும் நல்லா இருக்கிறது.ரசித்து படித்தேன்
நன்றிம்மா. தங்கள் ரசனைக்கு ஏற்றபடி எழுதியிருக்கிறேன் என மகிழ்ச்சி எனக்கு.
Post a Comment