ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

தோப்பு

மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல, காகையின் எச்சம் எண்பதை உணர்ந்தான். மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்தான்.

பசிக்கொடுமை தாங்காது வயிறு புறமுதுகிட்டு ஓடியது, புறமுதுகையே தொட்டுவிட்டது. செங்கல் சூளையில் நிற்பது போன்ற வெப்பம் அவன் உடலெங்கும் பிய்த்தது. சற்றே நினைவுகூர்ந்தான், எதற்கு மயங்கினோம்? மேலே சூரியனை ஏறிட்டுப் பார்த்ததும் மயங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

அவன் நாக்கு மேல்வாயில் ஒட்டிக் கொண்டது. அப்படியே தொடர்ந்து நடந்தான். அவனது சரும வெடிப்பு தரையில் தண்ணீரின்றி வந்த வெடிப்புகள் போலவே இருந்தன. தண்ணீர் தண்ணீர் என்று முணங்கிக் கொண்டே நடந்தான். இரண்டு மணி நேரம் நடந்தான். வரும் வழியில் ஓய்வெடுக்க ஒரு மரத்தில் கூட இலைகளே இன்றி இருந்தது. ஒரு சில மரமும் கருகிய நிலையில் நின்று கொண்டிருந்தது. அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முடியாது விழுந்தான் மாயன். அவனை அங்கிருந்த மூன்று பேர் தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த வீட்டுத் திண்ணையில் கிடத்தினார்கள்.

"ஏய் இங்க வா புள்ள, இந்தா ஒரு ஆளு உசுரு போறாப்புல இருக்கு, கொஞ்சம் அத எடுத்துட்டுவா" என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன். "நீ பாட்டுக்கு போற வர்றவனையெல்லாம் இழுத்துட்டு வந்துகிட்டு இருக்க, குடுக்குறதுக்கு நான் எங்க போறது. ஊரே தண்ணி இல்லாம செத்துகிட்டு கெடக்கு..." என்று கூறிக் கோப்பை நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள். அருகில் வந்ததும் அலறிக் கத்தினாள்... "அப்பா, அப்பா" என்று அலறினாள்.

"ஏய் இந்தா புள்ள, இது ஒ அப்பனா? நல்லா பாத்து சொல்லுடி" என்றான் அவள் கணவன் ராசு. "என்னத்த சொல்லுவேன், இப்படி வந்து கெடக்காகளே, நான் என்னத்த சொல்லுவேன். இருக்குறத குடிச்சுட்டு அவுகளாவது நிம்மதியா இருக்கட்டும்னுதானே வீட்ட விட்டு ஓடியாந்தேன், இப்படி ஒடிஞ்சு போயி கெடக்காகளே, நான் என்ன பண்ணுவேன்" என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கி அவர் வாயில் தண்ணீர் ஊற்றினான் ராசு. மாயனுக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிஞ்சுது.

இலைகளைனூடே பாயும் கதிர் போல வரண்டு போன இமைகளினூடே பொறுமையாய் பார்த்தான் மாயன். அவனுக்கு எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலிருந்தது. உற்றுப் பார்த்தான், அது அவள் மகள் இந்திரா போல தெரிந்தது. "இந்திரா இந்திரா" என்று முணங்கினான். அவள் மாயனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள், "அம்மா எங்கப்பா, அம்மா எங்க" என்றாள்.

புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு வெளி வருவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு வந்தது மாயனுக்கு. "உன் அம்மா பட்டினியா இருக்கா, ஏதாச்சும் கெடைக்குமானுதான் நான் இம்புட்டு தூரம் நடந்தாந்தேன். நான் வூட்டுக்குப் போகணும் வூட்டுக்குப் போகணும்" என்று சொல்லிக் கொண்டே மேலெழுந்தான்.

"இருப்பா, எலிக்கறி இருக்கு சாப்பிட்டுட்டு, அம்மாக்கு ஒரு எலிக்கறி கொண்டு போப்பா. இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு டம்ளர் தண்ணி இருக்கு, இதையும் கொண்டு போப்பா" என்று குரல் கரகரத்துக் கூறினாள் இந்திரா. மாயன் அதையெல்லாம் பொருட்படுத்தாம "அஞ்சல, அஞ்சல" என்று அவர் மனைவியின் பெயரை உரக்கக் கூவினார்....

"என்னாங்க என்னாங்க, என்னாச்சு இவருக்கு.... தண்ணி கிண்ணி குடிக்குறீயளா? ஏ இந்தா முழியுங்க.." அஞ்சலை.

தான் இவ்வளவு நேரம் கனவு கண்டதை உணர்ந்த மாயன் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டு சன்னல் வழியே பின்னால் இருந்த தோப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அஞ்சலை அவனருகே வந்து "தண்ணிய குடிச்சுட்டு தூங்குங்க, நாளைக்கு வெடிய காலையில தோப்ப அந்த கூல்டிங்க்ஸ் காரனுக்கு முடிச்சுக் கொடுக்கப் போகணும்ல" என்றாள்.

தண்ணீர் ஒரு செம்பு நிறைய குடித்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டே மெதுவாய் அஞ்சலையிடம் சொன்னான், "நாம, நம்ம தோப்பை விக்க வேணாம், அது இருக்கட்டும்..." என்று கூறிக் கொண்டே கண் மூடினான்.

2 comments:

"உழவன்" "Uzhavan" April 23, 2009 at 5:20 AM  

//"நாம, நம்ம தோப்பை விக்க வேணாம், அது இருக்கட்டும்..." //

நல்ல செய்தி.. விளைநிலம் காப்போமாக!

ஒளியவன் April 23, 2009 at 5:27 AM  

மிக்க நன்றி அன்பரே. விளை நிலத்தை காககாவிடில் விடியல் இல்லை.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்