குறுந்தொடர் - பகுதி 16
கடந்த காலத்துக்குச் சென்று எதிர்காலத்தை மாற்றும் பொருட்டு பயணிக்கத் தயாராகினர் மூவரும். இப்படி ஒரு அற்புத இயந்திரத்தை இழக்க வேண்டுமா என்ற ஆதங்கம் பாலாவின் முகத்தில் தெரிந்தது. கரனும், லதாவும் நெருக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.
"கரா, எனக்கு குழந்தை பாக்கியமே இல்லையாம். எனக்கு ஏதோ போல இருக்கு. கடந்த காலத்துக்குப் போனதுக்கப்புறம் நீ என்னை மறந்திடு. உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்"
"என்ன தியாகம் பன்றதா நினைப்பா. உன்னால குழந்தை சுமக்க முடியலைன்னா என்ன இப்போ? நாம ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். நான் முடிவே பண்ணிட்டேன், கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன் கூடத்தான்னு"
மழை தூறி முடித்த பின் தெரியும் வானவில்லாய் ஒளிர்ந்தது அவள் முகம். தென்றலோடு மிதந்து வரும் லேசான தூறல் போலானது கரனின் அண்மை. மூவரும் ஒரு முறை சுயம்புவிடமும், சிமியிடமும் விடை பெற்றுக் கொண்டனர். அவர்கள் செல்ல வேண்டிய காலத்திற்கான ஏற்பாடுகளை சுயம்பு செய்தான். அப்படியே அங்கே எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக கரனிடம் ஒப்படைத்தான்.
கால இயந்திரத்தின் கதவுகள் மூடிக் கொண்டன, பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். சிமி யாரு? எப்படி இந்த பூமி இப்படி அழிஞ்சிருக்கும்? இன்னும் விடைதெரியாத பல கேள்விகளுக்கான ஒரே விடையான கால இயந்திரத்தை இழக்கப் போகிறோமென்ற எண்ணத்தோடு பாலாவின் முகம் சற்று இறுகிப் போய் இருந்தது.
"கரா, நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"
"நீ என்ன சொல்லப் போற பாலா? அதைப் பொருத்துத்தான் கேக்குறதும், கேக்காததும்"
"இதோ பார், சுயம்பு சொல்ற படி கேட்டா நாம எல்லோரும் சாக வேண்டியதுதான்"
"வேற எப்படியும் செய்ய முடியாது. அது வலியில்லாத மரணம்தான். ஆனா, இந்தத் தியாகத்தைச் செஞ்சாதான் நாம நம்ம புறப்பட்டு வந்த காலத்துல வாழ முடியும்"
"இல்ல கரா, என்ன இருந்தாலும் இந்த ரகசியமெல்லாம் நம்மளோட அழிஞ்சிடும். நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கும் லதாவுக்கு இப்ப இருக்குற காதல் அழிஞ்சிடும். நீயும் அவளும் இப்போ எடுத்த முடிவு எல்லாம் வேற மாதிரியா நடக்கலாம். நீங்க திரும்பவும் ஒரு தடவை சுயம்புவை உருவாக்குவீங்க."
"நீ என்னதான் சொல்ல வர்ற?"
"இதோ பாருடா கரா, என்னதான் நாமளே இரண்டு இரண்டு பேரா இருந்தாலும், நான் சாகரதை நான் ஒத்துக்க மாட்டேன்."
"என்னடா சொல்ற, யாரோ மாதிரி பேசுற? எல்லாமே நம்மளக் காப்பாத்திக்கத்தாண்டா."
"நாம இந்த இயந்திரத்துக்குள்ள இருந்து இதை அழிக்காம, நாமளும் சாகக் கூடாது. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்"
"உண்மைதான், எனக்கும் இப்போ லதா மேல இருக்க காதலை விட்டுக் கொடுக்க மனசில்ல. அப்போ இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன். கேளு"
"நாம இந்த இயந்திரத்தை எடுத்துகிட்டுப் போய் சுயம்பு சொன்ன எல்லாத்தையும் செய்வோம், ஆனா கடைசியா சொன்னது மட்டும் வேண்டாம். அதுக்குப் பதிலா விபத்து நடக்குறதுக்கு சரியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திரும்பிப் போய், அந்தப் படகை சிமி கவிழ்க்கும் போது, செல்வினையும், மற்ற இருவரையும் நாம காப்பாத்திட்டு, பாய்மரப் படகுல இருந்து சிமி, நாம மூணு பேரு அங்க இருந்து கிளம்பும்போது இந்த இயந்திரத்தை நாம அழிச்சுடலாம். அப்படின்னா அந்த இயந்திரத்தோட சேர்ந்து அங்க இருக்குற நாம எல்லோரும் காணாம போயிடுவோம். பிறகு அந்தப் பாய்மரப் படகையெடுத்துகிட்டு நாம வந்திடலாம்."
"இது நல்ல யோசனையா இருக்கு. இதையே பண்ணலாம்"
திட்டமிட்ட படி அனைத்தையும் முடித்து விட்டு கால இயந்திரத்தையும் அழித்து விட்டனர். பாய்மரப் படகிலிருந்து ஆறு பேரும் தப்பித்துக் கரைக்குச் சென்றனர். லதா தப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாய் செல்வின் உறுதியளித்தான்.
சென்னையிலிருந்து வந்திருந்தவர்கள், அந்தப் பிராணியைப் பற்றி தீவிரமாக ஆராயவேண்டுமென்றனர். சற்றே சிநேகாவின் நினைவோடு பாலா மூழ்கலானான். லதா கரனின் தோள்களில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.
கரன் தனது வயிற்றுப் பகுதியை ஒரு முறை தடவிப் பார்த்தான்! அதில் கால இயந்திரத்தின் சூத்திரம் அடங்கிய ஒரு கண்ணாடி (அந்தக் காலத்தில் dic – data in crystal என்ற முறையில் தகவல் சேமிக்கப் பட்டிருந்தது) இருந்தது. அது 2311 ம் ஆண்டிலிருந்து அவன் எடுத்து வந்திருந்தான்.
- பயணத்தோடு ஒளியவன்
இத்துடன் கதை நிறைவுற்றது.
முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 16
Posted by
ஒளியவன்
at
Sunday, September 28, 2008
Labels: தொடர்
2 comments:
மிக நன்றாக இருந்தது ஒளியவன். முடிவு எதிர்பாராத ஒன்று.
உங்கள் அடு்த்த தொடர் சிறுகதையை எதிர் பார்க்கிரேன்.
வணக்கம்
மைதிலி
மிக்க நன்றிங்க உங்கள் பின்னூட்டதிற்கு.
Post a Comment