-சிறுகதை
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. சுட்டி http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html
அன்றைய கடமையை முடிக்கப் போகும் சூரியன் இரவின் மடி தேடி வேகமாக ஓடத் தொடங்கியது வழியெங்கும் மேகங்கள் மீது வண்ணங்கள் தூவிக் கொண்டே, அதை அண்ணாந்து ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அம்மு. ஐந்தாம் வகுப்பு முடிக்கப் போகும் அவள் பூமியில் நடைபயில வந்த சொப்பன தேவதை. பள்ளியிலே சுமாராக மதிப்பெண் வாங்கும் குழந்தைதான். மின்னஞ்சல் இணையமென இரண்டு வயதிலிருந்தே பல விசயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் 21ம் நூற்றாண்டின் சராசரி நகரத்துக் குழந்தை. வழியெங்கும் பூவை உதிர்த்துவிட்டு அவளின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது அவளின் குடியிருப்பின் சாலை.
தாத்தா பாட்டியிடம் தினம் தினம் நடந்ததை அவள் சொல்லிவிடுவது வழக்கம். இன்று அவளுக்கு கூறுவதற்கு ஒரு முக்கியமான விசயமிருந்தது. அவளிடம் எப்பொழுதுமே குறும்பு செய்யும் சுந்தர், இன்று அவளைப் பிடித்து கிழே தள்ளிவிட அவளுக்கு முட்டியில் சிராய்ப்பு. வந்த கோபத்தில் உதட்டைப் சுழித்துக்கொண்டே சுந்தரைக் கீழே தள்ளிவிட்டு கையிலிருந்த பையால் அடி அடியென்று அடித்துவிட்டாள். சுந்தர் அழுதுகொண்டே ஆசிரியரிடம் சொல்ல, ஆசிரியர் இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அம்முவின் காயத்தில் மருந்திட்டுக் கட்டி அனுப்பினார்கள். அவளுக்கோ அது ஒரு வலியாகவே சிறிதும் படவில்லை, ஒரு துளி கண்ணீரும் வரவில்லை, இருப்பினும் இன்று தாத்தா பாட்டியிடம் சுந்தரை அடித்ததைப் பற்றிக் கூறப்போகும் சிந்தனையிலேயே பெருமையாக சென்று கொண்டிருந்தாள். இது போன்று அவள் இதற்கு முன்னரும் நடந்துகொண்டிருந்தாள், அப்பொழுதெல்லாம் வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறியதும் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என அனைவரும் சேர்ந்து ஒன்றாகச் சிரித்துவிட்டு அவளைப் பாராட்டிய வண்ணமே இருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவளுடைய அம்மா லதா கொடுக்கும் பறக்கும் முத்தம் அவளுக்கு சாயங்கால விருந்து. அவள் வந்து சற்று நேரத்திலேயே வந்துவிடும் அப்பா அவளது நெத்தியில் முத்தமிடுவது அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று. அவள் வருகைக்காகவே எத்தனை வேலையிருந்தாலும் அம்முவை எதிர்பார்த்தபடி வாசல் கதவிற்கு எதிரிலுள்ள சோஃபாவில் அமர்ந்திருப்பாள் லதா. அம்மாவின் அன்பு முத்தத்தினை எதிர்பார்த்தபடியே வீட்டுக் கதவை திறந்தாள் அம்மு. வழக்கமான அதே புன்னகை தளும்பிய முகத்தோடு பறக்கும் முத்தமொன்று கொடுத்து விட்டு "ம்... என் ராசாத்தி பைய இறக்கி வச்சுட்டு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்திருக்குமாம், அம்முகுட்டிக்கு அம்மா காப்பி எடுத்துட்டு வருவேணாம். அது வரைக்கும் தாத்தா பாட்டி கூட பேசிக்கிட்டு இருங்க" சமையலறைக்குள் நுழைந்தாள் லதா.
பையை இறக்கி வைத்துவிட்டு தாத்தா பாட்டியிடம் அன்று பள்ளிக்கூடத்தில் அவள் கூடப் படிக்கும் சுந்தரை அடித்துவிட்டதை சொல்லி முடித்தாள். தனது காலில் அடிபட்டதையும் காண்பித்தாள். தாத்தாவும் பாட்டியும் அவள் காலைப் பார்த்து சலனப்படாமல் அவளிடம் சுந்தரை அடித்தது குறித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லதாவும் அவளுக்கு அடி பட்டதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவளுடைய தைரியத்தைப் பாராட்டிய படி இருந்தாள்.
"அம்மு, அம்மாகிட்ட வந்து காப்பி வாங்கிட்டுப் போ, அம்மா அடுத்து சமையல் வேலை செய்யணும்" லதா கொஞ்சும் குரலில் அம்முவை அழைத்தாள். அம்மாவிடம் காப்பி வாங்கி வர சமையலறைக்குள் ஓடிப் போய் அம்மு சிணுங்கிக் கொண்டே "அம்மா, காப்பி தா". "இதோ இங்க இருக்கு பாரு, எடுத்துக் குடிம்மா, பக்கத்துலேயே மிச்சர் எடுத்துக்கோ" லதா. மெதுவாய் காப்பியையும் மிச்சரையும் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருக்கையில் அவளுடைய அப்பாவும் வந்தாயிற்று. "ஹை அப்பா, அப்பா" சத்தமிட்டுக்கொண்டே ஓடிப் போய் ராஜேஷின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவளுக்கான வழக்கமான முத்தத்தைப் பரிசாக கொடுத்துவிட்டு "அப்பா போயி ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன், அப்பா உனக்குப் பிடிச்சது ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன், இன்னைக்கு என் அம்முக்குட்டிக்குப் பிறந்தநாளேச்சே, உங்கம்மா, எங்கம்மா, எங்கப்பா எல்லோரையும் ரெடியா இருக்க சொல்லு" சொல்லிக் கொண்டே வேகமாய் மாடியிலிருக்கும் அறைக்குச் சென்றான்.
"அம்மா, அப்பா வந்துட்டாங்க நீ சீக்கிரம் வாம்மா, தாத்தா பாட்டியும் ரெடி" படபடத்துக் கொண்டிருந்தாள் அம்மு. இரண்டே நொடியில் எல்லோரும் தயாராய் இருந்தார்கள். எல்லோரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட அவளுக்காக வாங்கி வந்த கேக்கை வெட்டி முடித்தாள். அவளுக்குப் பிடித்த பெரிய கரடி பொம்மையை எல்லோரும் சேர்ந்து பரிசாகக் கொடுத்தார்கள். அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டே சிலிர்த்துப்போய் நின்றாள். "அம்முக்குட்டி ஓடிப் போயி தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி எடுத்துட்டு வருமாம், தாத்தாவும் பாட்டியும் உனக்கு இன்னைக்கு சிங்கம் கதை சொல்லுவோமாம், சீக்கிரம் போ" செல்லமாக முதுகைத் தட்டினார் அம்முவின் தாத்தா. டுர்ர்ர்ர்ர் என வாயிலேயே வண்டி ஓட்டிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து "அம்மா தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி வேணுமாம்". இரண்டு குவளையில் தண்ணீரை ஒரு தட்டில் வைத்து கவிழாமல் பிடித்துக் கொண்டே சோஃபாவின் அருகில் வந்தாள்...
கடிகாரம் 9.30 மணியைக் காட்டியவாறு இருந்தது. கார் வரும் சத்தம் கேட்டது, அங்கிருந்த ஒருவரை ஒருவர் பார்த்துப் பதறியபடியே முழித்துக் கொண்டிருந்தனர். "அம்மு, யாரு வர்றது? நாங்க கிளம்பட்டுமா" ராஜேஷும் லதாவும் பதட்டமானார்கள். சரியென தலையசைத்தாள் அம்மு. மறுநொடியே இருவரும் மறைந்தனர். இருவர் காலடிச் சத்தம் அருகி வருவது போல இருந்தது. உடனே தாத்தாவும் பாட்டியும் விடைபெற்றுக் கொண்டு சோஃபாவின் பின் சென்றவாறே மறைந்தனர். சட்டென வெயிலைக் கண்ட இருளாய் அறையில் இருந்த எல்லோரும் ஒவ்வொரு மூலைக்கும் ஓடி மறைந்தனர். வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது, திடுக்கிட்டவளாய் திரும்பிப் பார்த்தாள் அம்மு.
"என்ன அம்மு, யாருமே இல்ல, கையில வெறும் தட்டை வச்சுகிட்டு என்ன செஞ்சுட்டு இருக்க? அம்மா இதோ முப்பது நிமிஷத்துல சாப்பாடு செஞ்சுத் தர்றேன்" லதா. "தினமும் இப்படி ரெண்டு பேருக்கும் நேரமாயிடுது, அம்மு பாவம் தினமும் இப்படித் தனியா வீட்டுல இருக்க வேண்டியதாயிடுது, எங்க அப்பா, அம்மாவை இங்க கூட்டிகிட்டு வந்துடலாம்னா அதுக்கும் வேண்டாம்ங்குற..." வெறுத்துக் கூறிய படியே மாடிப்படி ஏறிப் போய்க் கொண்டிருந்தான் ராஜேஷ்.
என்னைப் பற்றி...
மின்மடலில் பெற...
காற்றோடு பேசும் இளங்குருத்து
Posted by
ஒளியவன்
at
Monday, June 15, 2009
11 comments:
நல்ல கதை நண்பா..முடிவு எதிர்பார்க்கவில்லை. வித்தியாசமாக இருந்தது.
வாழ்த்துக்கள் !
அன்பு பாஸ்கர்..
nice story abt hallucination..
ஆங்கிலத்தில் இதை அடிப்படையாகக் கொண்டு நிறைய திரைப்படங்கள் ( A beautiful mind, ... )உள்ளன என்றாலும் தமிழில் இல்லை என்ரே நினைக்கிறேன். உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது..
வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா.
நன்றி ரிஷான், கோகுலன்.
கோகுலன், நீ சொன்ன அந்த ஆங்கிலப் படத்தை வெகு விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன். நன்றி.
நல்ல கதை பாஸ்கர் .கொஞ்சம் பிரிவோம் சிந்திப்போம் சாயல் தோன்றுகிறது .ஆனாலும் குழந்தையின் பார்வையிலிருந்து கதையை சொன்ன பாங்கு அழகு
மிக்க நன்றி பூங்குழலி அக்கா. சாயலில்லாத கதை எழுதுவது இனி சாத்தியமா என்றுத் தெரியவில்லை...
முதற்கவிஞன் முதல்
இன்றையக் கவிஞன் வரை
ஒரே கவிதையைத்தான்
எழுதிக் கொண்டிருக்கிறார்கள்
என கூறிய அப்துல் ரஹ்மானின் கஸல் நினைவிற்கு வருகிறது...
கதை மிகவும் நல்லா இருந்தது அண்ணன்.
கடைசி பத்தி வரை என்னால் கணிக்க முடியவில்லை. குழந்தையின் உலகை அழகாக, மென் சோகமாக சொல்லி இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.
அனுஜன்யா
மிக்க நன்றி லக்ஷ்மி மற்றும் அனுஜன்யா.
மிகச்சிறந்த கதை. வெற்றி பெற வாழ்த்துகள் பாஸ்கர்.
உங்கள் வாழ்த்துகளுக்கும், இந்த அளவு கதையெழுதக் கூடியவனாக என்னை மாற்றிய உங்கள் வழிநடத்தலுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.
ஒளியவன், எங்கிருக்கிறீர்கள்
அருமையான சிறுகதை புனைவதை ஏன் நிறுத்திவிட்டீர்கள்.
எனக்கு மிகவும் பிடித்த உங்களின் இக்கதையையும்
(சத்தமின்றி பூக்கும் பூ என்ற கதையையும்) வலைச்சரத்தில் பதிவிட்டுள்ளேன்.
உங்கள் பதிவு இணைத்த
எனது இடுகை
Post a Comment