சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு மத்தியிலும் தனிமைப் படுத்தப் பட்ட ஒரு தருணமது. அந்தப் பிஞ்சு மனதிற்குள் அதற்கான காரணங்களாய் சில வேர்கள் மனம் கிழித்து வளர்ந்து நின்றது. அந்த வேர்கள் கிழித்துப்போன இடத்தினிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் கசிந்திடும் இரணங்களே அந்த வேர்களுக்கு நீராய் மாறியது. மெல்ல மெல்ல அந்த வேர்கள் அவன் முகங்களில் தனிமைக் கிளைகளைப் பரப்பி அதில் கனவு இலைகளை வளர்த்துக் கொண்டிருந்தது.
மெல்ல மெல்ல அவன் அந்தத் தனிமையின் ரசிகனாகிவிட்டான். அவன் முகம் மீது வளர்ந்திருக்கும் அந்த தனிமை மரம் அவனுக்கோர் கற்பக விருட்சமாய்த் தெரிந்தது, அதிலே சுந்தரக் காய்கள் முளைப்பது போலவும், வண்ண மலர்கள் பூப்பது போலவும் கனவு கண்டு கொள்வான் கண்கள் திறந்துகொண்டே. காலை ஏழு மணிக்கே பள்ளி சென்றதும் மற்ற நண்பர்கள் வரும் வரை அந்த பகற்கனவில்தான் அவனது வசந்தம். இன்னும் பேருந்துப் பயணம், வீட்டில் அவனது பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரம், அப்படி இப்படியென அவனது தனிமைப் பொழுதுகள் முழுதும் கனவுகளே அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது. போதைக்கு அடிமையானவனைப் போல, அவனே வீட்டிலுள்ள உரையாடல்களை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்து அவனை அவனே அந்த தனிமைச் சிறையில் செல்லக் கைதியாய் அடைத்துக் கொள்வான். உடனே அந்த கனவுலக தேவதை அவன் எண்ணங்களில் வடிய ஆரம்பித்துவிடுவாள். அந்தக் கனவுலகில் அவனுக்கான தாய், தந்தை, தங்கையென சொந்த பந்தங்கள் இப்படியாய் நீண்டு கொண்டே இருந்தது.
அது ஒரு பின்பனிக்காலம். அன்று அவனை பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்த அப்பா, அவனுக்கான பரிசுப் பொருளொன்று வீட்டில் இருப்பதாய் சொன்னார். அவன் அந்தப் பரிசைப் பற்றிய கற்பனைகளில் இறக்கைகளை வளர்த்துக் கொண்டு அவனது கனவுலகம் பூராவும் பறந்து சென்று, நமது உலகத்தின் இன்னொரு விருந்தாளி என உறக்கச் சொல்லியபடியே வீட்டுக்கு வந்தான். அங்கே வேகமாய் வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது கருகருவென ஒரு நாய்க்குட்டி வாசலருகே கட்டிப் போடப் பட்டிருந்தது. உயிரற்ற பல பரிசுப் பொருள்களைக் கற்பனையில் சிந்தித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு உயிருள்ள பரிசுப் பொருள் மிகப் பெரிய பொக்கிஷமாய்த் தெரிந்தது. அருகே செல்ல சின்ன பயம் வேறு... கடித்து விடுமோவென்று...
அது ஒரு குள்ளசாதி நாய், குட்டையாய் ஆனால் நீளமாய் வளரும். அதன் காது தரை வரை தொங்கி ஊசலாடும். கருப்பு நிற வெல்வெட்டாய் அதன் மயிர்க் கற்றைகள். தாயைப் பிரிந்த ஏக்கம் அதன் கண்களில் வெகுவாகத் தெரிந்தது. ஒரு வாசல் அடைத்தால் மறுவாசல் திறக்கும் என்ற முதுமொழியின் அர்த்தம் அந்த இருவருக்குமே உண்மையானது. ஆம், அந்தச் சிறுவனின் நிழல் உலகிலிருந்து அவனுக்கான நிஜமாய், இன்னொரு தாய்... நாய் வடிவில்... அந்த நாய்க்கோ அந்தச் சிறுவன் வடிவில் ஒரு மாற்றுத்தாய். இருவருக்குமே பூரிப்பு. மெல்ல மெல்ல அந்த நாய் வளர்ந்தது, அவனது பாசக் கரங்களின் ஆயுள் ரேகைகளோடு சேர்ந்துகொண்டு...
டோனி என்றதும் எங்கிருந்தாலும் ஓடிவந்திடும். ஓடி வந்து அவனைத் தாண்டி வழுக்கிச் சென்றபடி நின்று பின் அங்கிருந்து மீண்டும் அவனிடம் வந்துசேர்வதே அதன் பழக்கம். அவன் சுவரில் முதுகு சாய்த்து காலைச் சம்மளமிட்டு கையில் புத்தகத்தோடு படிக்க ஆரம்பிக்கையில் அது மெல்ல மெல்ல அவன் கரங்களுக்கும் தொடைகளுக்கும் நடுவே முகம் புதைத்துக் கொள்ளும். அவன் மெல்ல மெல்ல கனவுலகிலிருந்து மீண்டு நிஜ உலகிற்கு வரத்தொடங்கினான் டோனியின் ஸ்பரிசத்தினூடே... வீடு முழுக்க எங்கேயும் மண்தரைக்கான இடமேயில்லை, அது ஒரு சின்ன இடம், முழுவதும் வீடும், சுற்றுச் சுவரும், சிமெண்டால் பூசப்பட்ட முற்றமுமென இருக்கும். அந்த நாயை வீட்டுக்கு வெளியில் கொண்டு சென்று மலம் கழிக்க சொன்னால், அது கேட்காது. எவ்வளவு தூரம் அடக்க முடியுமோ அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் அழைத்து வந்ததும் தன் காலைக் கடனை முடித்து விடும். வழக்கம்போல அதை அள்ளுவது அவனது அப்பா, அம்மாவின் வேலை.
மெல்ல மெல்ல டோனியின் மீதான பாசம் சிறுவனின் அம்மாவிற்கு குறைய ஆரம்பித்தது. "ஏன் நாயை வளர்ப்பானேன் பீயைச் சுமப்பானேன்" என்ற சொற்கள் அடிக்கடி விழ ஆரம்பித்தது. அந்தச் சொற்கள் சிறுவனின் மனதிற்குள் சின்ன சின்ன குண்டூசியாய் குத்த ஆரம்பித்தது. அவன் டோனியிடம் கெஞ்சலானான், அம்மா சொல்வதைப் போல கேட்டு நடந்து கொள்ளென்று... டோனி கேட்டபாடில்லை. அதன் சேட்டைகள் தொடர ஆரம்பித்தது.
மெல்லமெல்ல வரத்தொடங்கிய அந்த மழைக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக பேய்மழையாய் பெய்யத் தொடங்கியது. மழையென்றதுமே அந்தச் சிறுவனின் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தேங்கிவிடும். டோனியை வீட்டிற்குள்ளே வைத்திருக்க வேண்டிய சூழல். ஆனால் அவனோ வீட்டிற்குள்ளே படுக்கையறையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க ஆரம்பித்துவிடுவான். கொஞ்சமாய் மழை ஓய்ந்திருந்த காலம் வந்தது.
வழக்கம் போல சிறுவனை அவனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா. வீட்டில் அவன் இறங்கியதும் ஓடி வரும் டோனியைக் காணவில்லை. தேடினான் கிடைக்கவில்லை. அம்மாவிடம் கேட்டான், "டோனி எங்கம்மா?". அங்கிருந்து ஒரு பதில் எந்த வித சலனமுமின்றி வந்தது "அதை இன்னொருத்தருகிட்ட கொடுத்தாச்சுப்பா, அதை வச்சு நம்மளால சமாளிக்க முடியாது....." அந்த வீட்டின் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாய் தூறிக் கொண்டிருந்தது மீத மழை, அவனுக்கு காய்ச்சல் வந்து முணங்கிக் கொண்டிருந்தான் டோனி... டோனி... டோனி... என்று. அவனது கனவு தேவதை மீண்டும் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு அதே தனிமைப் பிரதேசத்தில் பயணிக்கத் துவங்கினாள்...
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம்.