ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

மனிதமென்னும் மந்திரம் - சிறுகதை

அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார்.

"என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு யாரோ வர்றாருன்னீங்க, இன்னும் வரலையா?"

"வந்துடுற நேரம்தாம்பா, 8.00 கு இன்னைக்கு வர்றேன்னாரு, 8.30 ஆயிடுச்சு, வந்துடுவாரு."

"சரிண்ணே, புதுசா ஒரு சாவி போட்டுருங்க, இன்னைக்கு வர்றவருக்குத் தேவைப்படும். நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்."

வீட்டைக் காலிபண்ணும்போது சாவியையும் சேர்த்தே கொண்டு போயிடுறானுக, ஒவ்வொரு தடவையும் புது சாவி போட வேண்டி கெடக்கென்று புலம்பிக் கொண்டே சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.

கட்டிட வேலை கண்காளிப்பாளன்ங்குறதால அடிக்கடி ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டியிருக்கும். இந்த தடவை மதுரைக்கு வந்திருந்தான். பல நேரம் வேலைக்குப் போயிட்டு அடுத்த நாள் காலையில கூட வருவான். வழக்கமா போற திருமங்கலம் ரோட்டுல பேருந்துல இருந்து இறங்கி கட்டிடம் கட்டுற இடத்துக்குப் போயிகிட்டு இருந்தான். வழியில கொஞ்சம் கூட்டமா இருக்குறதப் பார்த்து அங்கே போனான்.

"என்னாச்சுங்க, எதுக்கு இவ்வளவு கூட்டம்?"

"யாரோ வலிப்பு வந்து கிடக்குறாங்க, சாவி கொடுத்தும் நிக்கல" கூட்டத்துல இருந்த ஒருத்தர் கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னார்.

"தள்ளி வாங்க, அவருக்கு ஏதாவது ஆயிடப் போகுது, பக்கத்துல மருத்துவமனை எங்க இருக்கு?"

"பக்கத்து தெருவுல கூட ஒண்ணு இருக்குப்பா"

சடாலென கீழே விழுந்திருந்தவரைத் தூக்கிக் கொண்டே கொஞ்ச தூரத்துலேயே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அளவுக்கு அதிகமாகவே கொஞ்சம் மருத்துவமனையை பரபரப்பாக்கிவிட்டான் அப்துல்லா.

"யாருப்பா இங்க இவரை சேத்தது, அவருக்கு சரியாயிடுச்சு, கூட்டிகிட்டுப் போகலாம். அப்படியே நர்ஸைப் பாத்து காசு எவ்வளவுன்னு கேட்டுக்குங்க" டாக்டர் எந்தவித சலனமுமின்றி தனது வேலையை முடித்துவிட்டுக் கூறினார்.

வெளியே இருந்து ஓடிவந்த அப்துல்லா, மூச்சு இளைத்துக் கொண்டே கையிலிருந்த பையை கீழே வைத்தான்.
"நாந்தான் டாக்டர், அவரைக் கூட்டிகிட்டு வந்தேன். எப்படி இருக்காரு, பிரச்சினை ஒண்ணுமில்லையே?!"

உள்ளே சென்று அந்த நபரைப் பார்த்தான்.
"எப்படி இருக்கீங்க. உங்க பை இதுன்னு நினைக்குறேன். எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையாம். நீங்க இனி உங்க வீட்டுக்குப் போகலாம். பணத்தைக் கட்டிட்டேன். உங்களுக்கு ஆட்டோக்கு எதுக்கும் காசு வேணுமா?"

"உங்களைப் பார்த்தா இஸ்லாம் மாதிரி தெரியுது, நானும்தான். இன்ஷா அல்லா, நல்ல நேரத்துல என்னைக் காப்பாத்துனீங்க. இல்லைன்னா அங்கேயே செத்திருப்பேன்."

"யாருக்கா இருந்தாலும் செஞ்சிருப்பேன். எல்லாமே உயிர்தானே. காப்பாத்த மட்டும்தான் அல்லா உத்தரவிட்டிருக்கான் அழிக்க இல்ல. எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும். நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா?"

"நீங்க செஞ்ச உதவியே போதும். இனி நான் போய்க்குறேன். நீங்க செஞ்ச உதவியை அல்லாகிட்ட போற வரைக்கும் மறக்க மாட்டேன்".

பையையும் எடுத்துக் கொண்டு சேவல் பண்ணையை நோக்கி நடந்தான் காதர்.
"இன்னைக்கு வர்றேன்னு சொன்னவன் நான்ந்தான். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு. என்னோட அறை எதுன்னு சொல்றீங்களா?"

பாண்டியன், அப்துல்லா அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். உள்ளே இருந்த அப்துல்லாவின் படத்தைப் பார்த்துவிட்டு வியப்படைந்த காதர்
"இவருதான் இங்க தங்கியிருக்காரா? இன்னைக்கு நான் செத்துருக்க வேண்டியவன், இவர்தான் என்னைக் காப்பாத்தினாரு" என்று நடந்ததைக் கூறினான்.

"இவனா, நல்ல பையன்பா, இந்தப் பண்ணையில இந்த மாதிரி பையனை நான் பாத்ததில்ல, இங்க திருமங்கல ரோட்டோரத்துல இருக்க ஒரு கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கட்டிடம் கட்றாங்க, அங்கதான் வேலை பாக்குது இந்தத் தம்பி. சாய்ந்திரம் வந்திடும்."

இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பையிலிருந்து ஒரு கட்டிங் ப்ளேயரும், கத்தியும் எடுத்துகிட்டு உடனே தலை தெறிக்க ஓடினான். அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்தோட அஸ்திவாரத்துக்கு ஓடினான். மதுரையில தொடர்ந்து ஒரு மாசத்துக்கு அங்க இங்கன்னு குண்டு வைக்குறதுக்காக வந்தவந்தான் காதர். தன்னோட உயிரையே காப்பாத்துன அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்துல மூன்று குண்டுகளை வைத்திருந்தான். வேக வேகமாக ஒவ்வொரு குண்டா செயலிழக்க வச்சுகிட்டு இருந்தான். மூன்றாவது குண்டு படாரென்று பெரிய சத்தத்தோடு வெடித்தது. மேலே நின்ற அப்துல்லா முதற்கொண்டு இரண்டு பேர் கீழ விழுந்தார்கள். அடி பலமா படலைன்னாலும் அப்துல்லாவிற்கு கை பிசங்கிக் கொண்டது.

அடுத்த நாள் பாண்டியனிடம் நாளிதழ் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தான் அப்துல்லா பிசங்கிய கையில் கட்டோடு.
"ஏண்ணே, வீட்டுக்கு வந்தவரோட பை இருக்கு, ஆனா ஆள் வரவே இல்லையே?!"

"வந்து பைய வச்சுட்டு இதோ வர்றேன்னு ஓடிப் போனவருதாம்பா. ஆளைக் காணோம். இன்னைக்குப் பார்ப்போம், வரலைன்னா பையை தூக்கி வெளியே போட்டுடுவோம்"

செய்தித்தாளை உரக்க வாசித்தான்.
"இந்தியாவின் பல நகரங்களையடுத்து மதுரையிலும் குண்டு வெடிப்பால் மக்கள் பீதி. திருமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டால் சரிந்தது. வெடியில் சிக்கிய ஒரு வாலிபர் அடையாளம் காணமுடியாத வகையில் உடல் கருகி மரணம். அங்கே வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டது...."

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 16

குறுந்தொடர் - பகுதி 16

கடந்த காலத்துக்குச் சென்று எதிர்காலத்தை மாற்றும் பொருட்டு பயணிக்கத் தயாராகினர் மூவரும். இப்படி ஒரு அற்புத இயந்திரத்தை இழக்க வேண்டுமா என்ற ஆதங்கம் பாலாவின் முகத்தில் தெரிந்தது. கரனும், லதாவும் நெருக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.

"கரா, எனக்கு குழந்தை பாக்கியமே இல்லையாம். எனக்கு ஏதோ போல இருக்கு. கடந்த காலத்துக்குப் போனதுக்கப்புறம் நீ என்னை மறந்திடு. உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்"

"என்ன தியாகம் பன்றதா நினைப்பா. உன்னால குழந்தை சுமக்க முடியலைன்னா என்ன இப்போ? நாம ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். நான் முடிவே பண்ணிட்டேன், கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன் கூடத்தான்னு"

மழை தூறி முடித்த பின் தெரியும் வானவில்லாய் ஒளிர்ந்தது அவள் முகம். தென்றலோடு மிதந்து வரும் லேசான தூறல் போலானது கரனின் அண்மை. மூவரும் ஒரு முறை சுயம்புவிடமும், சிமியிடமும் விடை பெற்றுக் கொண்டனர். அவர்கள் செல்ல வேண்டிய காலத்திற்கான ஏற்பாடுகளை சுயம்பு செய்தான். அப்படியே அங்கே எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக கரனிடம் ஒப்படைத்தான்.

கால இயந்திரத்தின் கதவுகள் மூடிக் கொண்டன, பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். சிமி யாரு? எப்படி இந்த பூமி இப்படி அழிஞ்சிருக்கும்? இன்னும் விடைதெரியாத பல கேள்விகளுக்கான ஒரே விடையான கால இயந்திரத்தை இழக்கப் போகிறோமென்ற எண்ணத்தோடு பாலாவின் முகம் சற்று இறுகிப் போய் இருந்தது.

"கரா, நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"

"நீ என்ன சொல்லப் போற பாலா? அதைப் பொருத்துத்தான் கேக்குறதும், கேக்காததும்"

"இதோ பார், சுயம்பு சொல்ற படி கேட்டா நாம எல்லோரும் சாக வேண்டியதுதான்"

"வேற எப்படியும் செய்ய முடியாது. அது வலியில்லாத மரணம்தான். ஆனா, இந்தத் தியாகத்தைச் செஞ்சாதான் நாம நம்ம புறப்பட்டு வந்த காலத்துல வாழ முடியும்"

"இல்ல கரா, என்ன இருந்தாலும் இந்த ரகசியமெல்லாம் நம்மளோட அழிஞ்சிடும். நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கும் லதாவுக்கு இப்ப இருக்குற காதல் அழிஞ்சிடும். நீயும் அவளும் இப்போ எடுத்த முடிவு எல்லாம் வேற மாதிரியா நடக்கலாம். நீங்க திரும்பவும் ஒரு தடவை சுயம்புவை உருவாக்குவீங்க."

"நீ என்னதான் சொல்ல வர்ற?"

"இதோ பாருடா கரா, என்னதான் நாமளே இரண்டு இரண்டு பேரா இருந்தாலும், நான் சாகரதை நான் ஒத்துக்க மாட்டேன்."

"என்னடா சொல்ற, யாரோ மாதிரி பேசுற? எல்லாமே நம்மளக் காப்பாத்திக்கத்தாண்டா."

"நாம இந்த இயந்திரத்துக்குள்ள இருந்து இதை அழிக்காம, நாமளும் சாகக் கூடாது. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்"

"உண்மைதான், எனக்கும் இப்போ லதா மேல இருக்க காதலை விட்டுக் கொடுக்க மனசில்ல. அப்போ இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன். கேளு"

"நாம இந்த இயந்திரத்தை எடுத்துகிட்டுப் போய் சுயம்பு சொன்ன எல்லாத்தையும் செய்வோம், ஆனா கடைசியா சொன்னது மட்டும் வேண்டாம். அதுக்குப் பதிலா விபத்து நடக்குறதுக்கு சரியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திரும்பிப் போய், அந்தப் படகை சிமி கவிழ்க்கும் போது, செல்வினையும், மற்ற இருவரையும் நாம காப்பாத்திட்டு, பாய்மரப் படகுல இருந்து சிமி, நாம மூணு பேரு அங்க இருந்து கிளம்பும்போது இந்த இயந்திரத்தை நாம அழிச்சுடலாம். அப்படின்னா அந்த இயந்திரத்தோட சேர்ந்து அங்க இருக்குற நாம எல்லோரும் காணாம போயிடுவோம். பிறகு அந்தப் பாய்மரப் படகையெடுத்துகிட்டு நாம வந்திடலாம்."

"இது நல்ல யோசனையா இருக்கு. இதையே பண்ணலாம்"

திட்டமிட்ட படி அனைத்தையும் முடித்து விட்டு கால இயந்திரத்தையும் அழித்து விட்டனர். பாய்மரப் படகிலிருந்து ஆறு பேரும் தப்பித்துக் கரைக்குச் சென்றனர். லதா தப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாய் செல்வின் உறுதியளித்தான்.

சென்னையிலிருந்து வந்திருந்தவர்கள், அந்தப் பிராணியைப் பற்றி தீவிரமாக ஆராயவேண்டுமென்றனர். சற்றே சிநேகாவின் நினைவோடு பாலா மூழ்கலானான். லதா கரனின் தோள்களில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.

கரன் தனது வயிற்றுப் பகுதியை ஒரு முறை தடவிப் பார்த்தான்! அதில் கால இயந்திரத்தின் சூத்திரம் அடங்கிய ஒரு கண்ணாடி (அந்தக் காலத்தில் dic – data in crystal என்ற முறையில் தகவல் சேமிக்கப் பட்டிருந்தது) இருந்தது. அது 2311 ம் ஆண்டிலிருந்து அவன் எடுத்து வந்திருந்தான்.

- பயணத்தோடு ஒளியவன்

இத்துடன் கதை நிறைவுற்றது.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 15

குறுந்தொடர் - பகுதி 15

கரனுக்கு சுயம்பு மீது மகனென்ற பாசம் ஏனோ வரவில்லை.
“சுயம்பு, அப்படியே நீ எங்களுக்குப் பிறந்திருந்தாலும், அதெப்படி இன்னும் உயிரோடு இருக்க?”

“அப்பா, நீங்க ஒரு மருத்துவருக்கு மிக நெருக்கமான நண்பரா இருந்தீங்க, அப்போ, அவர் ஜீன் தெரபிங்குற மருத்துவ முறையால உங்களை சோதிக்க அனுமதிச்சீங்க. அவர் ஒவ்வொரு மனிதனையும் நீண்ட ஆயுள் வாழ வைக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிச்சார். கருப்பையில் கரு சுமக்காமலேயே குழந்தைகளை உருவாக்கவும், அதையும் ரூபாய் நோட்டு அச்சடிப்பது போல அரசே செய்யவும். மகனோ, அல்லது மகளோ தேவைப் பட்டால் விந்தணுக்களை மட்டும் இருவரும் கொடுத்தால் போதும். இப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார். அதனோடு சேர்த்து ஜீன் தெரபியும் செய்தார். அம்மாவுக்கு கருப்பை பாதிக்கப் பட்டிருந்ததால குழந்தையை நீங்க அவரிடம் சொல்லி அவருடைய சோதனைக் கூடத்திலேயே உருவாக்கினீங்க. அப்படிப் பிறந்தவந்தான் நான். உங்களுக்கு மாறுபட்ட ஜீன்கள் இருந்ததால என்னோட ஆயுள் ரொம்ப அதிகமாயிடுச்சு. நீங்க உங்க 327 வது வயசுலதான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிச்சீங்க. அதை இயக்குறதுக்கு நீங்க இருந்தாதான் முடியும். திடீருன்னு காணாம போயிட்டீங்க. அந்த இயந்திரமும் அங்க இல்ல.”

“அப்போ இந்த இயந்திரம் எப்படி வந்துச்சு?”

“அவசரப் படாதீங்க, ஒரு நாள் ஒரு இயந்திரத்துல நீங்க வந்தீங்க, வந்து என்னிடம் இதைக் கண்டு பிடிச்சுக் கொடுத்தீங்க. இப்போ இந்த இயந்திரத்தை வச்சுத்தான் நீங்க உங்களைக் காப்பாத்திக்கணும்”

“நான் என்னைக் காப்பாத்திக்கணுமா? என்ன சொல்ற?”

“ஆமாம். நீங்க இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்கும்போதே இத வச்சு எதிர்காலத்துக்குப் போலாமே தவிர பிற்காலத்துக்குப் போக முடியாதபடிதான் செஞ்சிருந்தீங்க. ஆனால் அதை வச்சு பிற்காலத்துக்கும் போக முடியுங்குறதுதான் உண்மை. ஒரு மனுஷன் பிற்காலத்துக்குப் போறதுனால எதுவேணும்னாலும் மாறலாம், அதனால எதிர்காலத்துக்குப் போறது தப்பே இல்லைன்னு நீங்க அடிக்கடி என்கிட்ட சொல்லுவீங்க.”

“இப்போ நீ பிற்காலத்துக்குத்தானே வந்து என்னை இங்க கூட்டிகிட்டு வந்த? அதெப்படி முடிஞ்சுது?”

“நீங்க கேட்குறது சரிதான். உங்க கூட வேலை பார்த்த ஒருத்தர் உங்களோட கால இயந்திரத்தைத் திருடி எடுத்துகிட்டுப் போயிட்டாரு. அவர் எதிர்காலத்துக்கு எங்க போனாருன்னு தெரியல, ஆனா, உடனே பூமி மேல எதிர்பாராத விதமா சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், பாறைகளும் விழுந்துச்சு. அதுல இருந்து தப்பிச்சு வந்தீங்க. பிற்காலத்துக்குப் போகக் கூடிய ஒரு இயந்திரத்தை நீங்க யாருமே கண்டு பிடிக்க முடியாத ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருந்தீங்க, அது வந்து சேர்ந்த இடம் இதுதான். அங்க ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய ஒரு சின்ன இயந்திரத்தையும் கண்டு பிடிச்சிருந்தீங்க. அந்த சின்ன இயந்த்துலதான் நீங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இங்க வந்தீங்க. கால இயந்திரக் கண்டு பிடிப்பாலத்தான் பூமிக்கு பெரிய கதிர்வீச்சும், அதனால சில பாறைகளும் வந்து விழுந்துச்சு. அதனால கடந்த காலத்துக்குப் போய் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குறத தடுக்கணும்னு சொல்லி, கடந்த காலத்துக்குப் போகக் கூடிய இந்த இயந்திரத்தை என்கிட்ட கொடுத்தீங்க. அதற்கப்புறம் இறந்துட்டீங்க.”

“அப்போ, இங்க இருந்த பழைய காலத்துக்குப் போற இயந்திரத்தை வச்சுத்தான் நீ என்னைக் கூட்டிகிட்டு வந்திருக்க. சரி, அப்படியே என்னை எதிர்காலத்துல காப்பாத்தணும்னாலும் அதை நீயே செஞ்சிருக்கலாமே. என்னை கூட்டிகிட்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

“உங்களால மட்டும்தான் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குற இடத்துக்குள்ள போக முடியும். நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போய் உங்களோட இயந்திரக் கண்டுபிடிப்பைத் தடுக்கலைன்னா, எதிர்காலத்தின் விளைவு இப்படி ஆயிடும். நீங்க அந்தக் கண்டுபிடிப்பை அழிக்குறதுனால, நீங்க வந்த இந்த இயந்திரத்துக்கு எதுவும் ஆயிடாது.”

கேள்வியின் தொடக்கம் கண்ணில் மின்னியதும் உதடுகள் உதிர்த்தன சொற்களைக் பாலாவிடமிருந்து.
“செல்வினும், இன்னும் இரண்டு பேரும் இறந்துட்டாங்களே அவங்களை எப்படிக் காப்பபத்துறது?”

“நீங்க எல்லோரும் முதல்ல உங்க காலத்துக்குப் போகணும். சரியா விபத்து நடக்குறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நீங்க போகனும்”

கரன் கேள்வியோடு முந்தினான். “அப்போ நாங்க ரெண்டு ரெண்டா இருப்போமே?!”

“ஆமாம், நீங்க ரெண்டு ரெண்டு பேரா இருப்பீங்க. அப்பந்தான் செல்வினும், மற்ற நபர்களும் உயிரோடு இருப்பாங்க. இப்போ நீங்க அங்க இருந்து 2311 ம் ஆண்டுக்குப் போய் அந்தக் கால இயந்திரத்தை அழிச்சுட்டீங்கன்னா, சிமி நீங்க இருக்க இடத்திலிருந்து மறைஞ்சுடுவான். ஏன்னா, பூமிக்கு ஆபத்து ஏற்பட்ட பிறகு நான் தனியா இருந்தனாலதான் இவனை உருவாக்கினேன். அப்போ உங்க படகை யாரும் கவிழ்க்க மாட்டாங்க. நீங்க எல்லோரும் அங்கே தப்பிச்சுடலாம்”.

“அப்படியே இருந்தாலும் நிகழ்காலத்துலேயும் 2311ம் நாங்க இருப்போமே?”

“ஆமாம், நீங்க இப்போ பயணிக்குற இந்த இயந்திரத்துக்குள்ளே இருந்து இதையும் அழிச்சுட்டீங்கன்னா, நீங்களும், இந்த இயந்திரம் எந்த எந்த காலத்துல இருக்கோ எல்லா இடத்திலும் இந்த இயந்திரம் அழிஞ்சிடும்.” பாலா சலனமாகினான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 14

குறுந்தொடர் - பகுதி 14

சில வித்தியாசமான சத்தங்கள் எழும்பின, கால இயந்திரம் காலம் கடக்க எத்தனித்தது.

கடலில் வெகு நேரம் தேடியும் இறந்த உடல்களைத் தவிர வேறு யாரையும் கண்டு பிடிக்க முடியாது காப்பாற்ற வந்த படகு திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. கரை தொடும் தூரம் வரும்போது, திடீரென கடல் நீர் மட்டம் குறைந்து.

படகில் இருந்த காவலர் ஒருவர்
“கடல்த்தண்ணி உள்வாங்குதுப்போய், சுனாமி வரும்னு நினைக்குறேன். எல்லோரும் இறங்கி ஓடிடலாமா?”

அருகிலிருந்த மீனவர் ஒருவர்
“அப்பிடித்தான் நினைக்குறேனுங்க, ஆனால் இந்த இடம் கொஞ்சம் பாறையும் சேறுமா இருக்கும், இறங்கிப் போறது ரொம்ப கஷ்டம், அதுவுமில்லாம இறங்கிப் போகும் போது தண்ணி வந்துட்டாலும் கஷ்டம்”

பேசிக் கொண்டிருக்கும்போதே படகு தரை தட்டியது. திடீரென்று காவலர் கத்தினார்.
“அதோ பாருவே பெரிய அலை வருது, சுனாமின்னுதான் நினைக்கேன்”

“இல்ல எசமான், பயப்படாதீய, ஒண்ணும் ஆகாது”

வந்த அலை அப்படியே படகைத் தூக்கிக் கொண்டு கரையருகே சென்றது. கடலின் சீற்றமும் குறைந்து, கடல் உள்ளுக்கும் வெளியேவுமாக சற்று நேரத்தில் அடங்கிப் போனது. செல்வினின் தாயார் கடற்கரையில் கதறிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் முழுதும் ஒளியாய் இருந்த இடத்திலிருந்து மெல்லியதாய் ஒளி குறைய ஆரம்பித்தது. சுற்றிலும் முழு இருட்டு. கதவு பொறுமையாகத் திறந்தது. சிமி ஆர்வத்தோடு இறங்கினான்.
“வாங்கஎல்லோரும் வாங்க இதுதான் என் இடம்”

ஒரு கதவைத் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தனர். அறையிலிருந்து வந்த வெளிச்சம் ஜன்னல் வழியே வரும் காலை நேரத்து வெளிச்சமாய் படர்ந்தது கால இயந்திரத்தின் மேல்.

லதாவின் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் வெளியே கேட்டது!
“கரா இது என்ன இடம்?”

“என்னன்னு தெரியல, இது நிச்சயமா 4453ம் ஆண்டுதான்”

அங்குள்ள எந்தப் பொருளுமே பார்த்திராதப் பொருளாய் இருந்தது. அங்கிருந்த ஒரு அறைக்கு சிமி மூவரையும் அழைத்துச் சென்றான். மெல்லிய சத்தத்தோடு கதவு திறந்தது.

“இது என்ன இடம் சிமி? இதுதான் 4453ம் ஆண்டின் மிச்சம்னு எங்கப்பா சொல்லுவாரு”

“இதுதான் என் தந்தையினுடைய அறை, இதோ அவர் வர்றாரே!”

அடர்ந்த தாடியுடன் அதே முகம், இயந்திரத்தில் பார்த்த அதே முகம். கரனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“நீங்க ........தான் சுயம்புவா?”

“ஆமாம்ப்பா. நீங்க என்னை வா போன்னே கூப்பிடலாம்னு ஏற்கனவே சொன்னேனே”

“நீங்க என்னை விட வயசானவரா இருக்கீங்க, உங்களையெப்படி வா போன்னு கூப்பிடுறது?”

“எத்தனை வயசானாலும் நான் உங்க பையந்தானே! நீங்க என் அப்பாதான், இவங்க என் அம்மாதான்”

லதாவும், கரனும் திருமப்த் திரும்பப் பார்த்துக் கொண்டனர். “நீங்க என் பையனா?”

“ஆமாம் அப்பா. நீங்க மீண்டும் என்னிடம் வருவேன்னு சொன்னீங்க, அது உங்களுக்கு தெரியாது”

“என்னதான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விளக்குறீங்களா?“

“நிச்சயமா சொல்றேன். நீங்க இப்போ இருக்குறது 4453ம் ஆண்டில். இது நீங்க கண்டு பிடிச்ச கால இயந்திரம்தான். உங்களுக்கும், அம்மாவிற்கும் திருமணம் ஆனது 2010ல். 2311ல் சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், வெடித்துச் சிதறிய பாறைகளும் பூமியில் மோதின. அந்த சிக்கலில் மனிதர்களில் பல பேர் அழிந்தனர். எல்லா நாடுகளும் பொடிப் பொடியாச்சு. தொடர்ந்து இருந்து வந்த கதிவீச்சில் மிஞ்சியிருந்த பெண்களின் கருப்பை வெகுவாக பாதித்தது. தொடர்ந்து பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த ஆபத்திலிருந்து தப்பித்ததில் நானும், சிமியும் உண்டு. அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மா, பாலா மாமா, சிநேகா அத்தை எல்லோருமே இறந்துட்டீங்க. அப்போ இந்த உலகத்துல மிச்சம் எத்தனை பேர் இருந்தாங்கன்னு தெரியல.”

பாலாவின் கண்களில் கேள்விக் குறிகளும், ஆச்சரியக் குறிகளும் தெரிந்தன.
“நீ எந்த சிநேகாவைச் சொல்ற?”

“உங்களோடு படிக்கும் சிநேகாவைத்தான் சொல்கிறேன். உங்களோட மனைவி”

“இதை நான் பொய்யாக்கிட்டா? இப்போ எனக்கு விசயம் தெரியுமே. நான் இனி அவளைத் திருமணம் செஞ்சுக்கலைன்னா?”

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்! இப்போ எதிர்காலம் உங்க மூணு பேர் கையில”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்