ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 13

குறுந்தொடர் - பகுதி 13

புத்தகத்தின் இறுதி வரியைப் படித்த கரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவனுக்கு இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் தப்பிப்பதே நல்லதென பட்டது.

"பாலா இதையெல்லாம் வாசிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பைத்தியமே பிடிட்ச்சுடும் போல இருக்கு. முதல்ல இங்கே இருந்து கிளம்பிடலாம்."

"கரா திரும்பத் திரும்ப தப்பு பன்ற. இங்க இருந்து எப்படித் தப்பிப்ப? உனக்கு நீ மட்டும் தப்பிச்சாப் போதுமா? செல்வின் உயிரெல்லாம் என்ன ஆகுறது? நாம அவனைக் காப்பாற்றியே ஆகணும். இல்லைன்னா நீ தப்பிச்சாலும் லதா கண்டிப்பா அந்தக் கொலைகாரங்ககிட்ட மாட்டித்தான் ஆகணும்"

"இப்ப என்னதான் செய்யச் சொல்ற? நம்ம யாருக்கும் இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. என்ன பண்ண முடியும்னு நினைக்குற?"

"சுயம்புகிட்ட பேசுவோம். எங்களை கொலை நடந்த அன்னைக்குக் காலையில கொண்டு போய் விட்டுடச் சொல்லுவோம். அன்னைக்கு நாம எங்கேயும் போகாம, மூன்று பேரும் வீட்டிலேயே இருந்துப்போம்."

"என்னடா சொல்ற? நாம இப்போ பழைய காலத்துக்குப் போனா, அங்க எல்லோரும் இரண்டு இரண்டு பேராதானே இருப்போம்? அப்போ என்ன பண்ணுவ?"

"நீ சொல்றதும் சரிதான். ஆனா செல்வினும் மத்தவங்களும் இப்போ உயிரோட இல்லை. அவங்களைக் காப்பாற்றி பழைய காலத்துல இருந்து இதுல கூட்டிகிட்டு வந்துட்டா?"

"இல்லை, இது எல்லாம் நம்ம கற்பனைதான், உண்மை என்னன்னு நமக்குத் தெரியாது. இதனால பல பிரச்சினை வரலாம். எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம். இறந்தவங்களை உயிரோடக் கொண்டு வருவது எல்லாம் சரிபட்டு வராது."

"அந்த புத்தகத்துல நீ மீண்டும் வருவேன்னு எழுதியிருக்க, அப்படின்னா ..........."

பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு ஒலி கேட்டது. இயந்திரம் முழுமையாக இயங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

சத்தம் கேட்ட்தும் எல்லோரும் சிமி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். அங்கே சிமி தன் தந்தை சுயம்புவிடம் பேசிக் கொண்டிருந்தான். சுயம்பு சொல்லச் சொல்ல ஒரு தலைக்கவசம் போன்ற ஒன்றைத் தலையில் மாட்டிக் கொண்டு அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தான்.

"டேய் கரா, என்னடா நடக்குது?"

"இது சுயம்புவோட குரலாத்தான் இருக்கணும், சிமியை சரி பண்ணுறாருன்னு நினைக்குறேன்."

சற்று நேரத்தில் சரியான சிமி, கரனின் அருகே வந்தான்.
"எனக்கு இப்படித்தான் அடிக்கடி நேரும். வாங்க என் தந்தையிடம் பேசுங்க"

ஒளிக்கற்றையாலேயே திரை போல் காட்சியளிக்கும் அந்த இடத்திற்கு சென்றார்கள். கரன் அங்கே வந்த குரலுக்கு சொந்தக் காரனின் முகம் பார்த்தான். தாடிக்குள் மூடி வைக்கப் பட்ட அந்த முகத்தை உற்று நோக்கினான் கரன்.
"நீங்க தான் சுயம்புவா?"

"ஆமாம், நாந்தான் சுயம்பு. நீங்க என்னை வா போ என்றே கூப்பிடலாம்"

"எனக்கு இதைப் பற்றித் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை, எங்களை எங்கள் ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விடு"

"நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். அதன் பிறகு உங்களை நானே அனுப்பி வைக்கிறேன்"

"நான் வரமாட்டேன். எனக்கு இங்கே வந்ததிலிருந்தே ஏதோ மாதிரி இருக்கு. உடனடியா எங்களை அனுப்பி வைங்க"

"உங்களை அனுப்பி வைப்பதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை, ஆனால் எனக்கு தந்த உத்தரவை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனால் நீங்கள் மூவரும் என்னுடன் சிறிது நாட்கள் இருந்துவிட்டு பின்னர் போகலாம்"

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாலா குறுக்கிட்டான்.
"இங்கு என்ன நடக்குதுன்னே புரியல. என்னோட நண்பன் செல்வின் உங்களோட சிமியால இறந்துட்டான், கூடவே இங்கு வந்த இருவரும். முதலில் அவர்களைக் காப்பாற்றி விட்டு எங்கு வேண்டுமானாலும் வருகிறோம்"

"எனது சிமியால் ஏற்பட்ட இழப்பிற்கு நான் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அவர்களைக் காப்பாற்றுவதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அது என்னால் இயலாத காரியம். நீங்கள் இங்கே வந்தால் எல்லாம் கை கூடும்"

மழை பெய்து ஓய்ந்த மௌனத்தை ஒத்திருந்த்து அந்த இடம். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். லதாவிற்கு சொல்ல எதுவுமில்லை. கரன் பாலாவின் கேள்வி நியாமென நினைத்தான், ஆனால் ஏனோ சுயம்பு பேச்சைக் கேட்க அவன் விரும்பவில்லை. பாலாவிற்கோ செல்வினைக் காப்பாற்றுவதும், மேலும் இந்த அதிசயத்தை உணரவேண்டுமென்பதே பெரியதாகப் பட்டது. கரன் பேசலானான்.
"சுயம்பு, எங்களோட உயிருக்கு நீங்க உத்திரவாதம் தருவதா இருந்தா, நாங்க உங்க இடத்துக்கு வர்றோம்."

"மெல்லிய புன்னகை செய்தான் சுயம்பு!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12

குறுந்தொடர் - பகுதி 12

கால இயந்திரத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்னர் மூவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றியது. இது வரை கால இயந்திரம் சம்பந்தப் பட்டப் படங்கள் மனதுக்குள் எல்லோருக்கும் ஓடியது உண்மை.

லதாவிற்கு எது எப்படியோ ஆனால் இதை விட்டு வெளியேறி விடுவோம் என்றுத் தோன்றியது, கரனுக்கோ இது எப்படி சாத்தியமானது என்று தோன்றியது, பாலாவிற்கோ வேறு எண்ணம்.

“கரா இப்போ என்ன செய்யப் போறோம்?”

“இதை இங்கே இருந்து அதன் வீட்டுக்கே அனுப்பிவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்”

“எப்படிப் போவ? நம்மள தேடி வந்தவங்களும் நாம கிடைக்கலைன்னு திரும்பிப் போயிருப்பாங்க, இதை எப்படி அனுப்பி வைத்து விட்டு இங்கே இருந்து தப்பிப்ப?”

“வேற என்னதான் செய்ய முடியும்?”

“எனக்கொரு யோசனை இருக்கு, சொல்றேன் கேப்பீங்களா?”

எப்பொழுதுமே விளையாட்டுத்தனாமாய் இருக்கும் பாலாவிடம் லதாவிற்கு நம்பிக்கையில்லாமலேயே இருந்தது.
“நாம வீட்டுக்குப் போனால் போதும் பாலா, வேறெதுவும் குழப்பாம இருந்தா அதுவே போதும்”

“பயப்படாத லதா, இந்த இயந்திரத்தை வச்சு நாம நம்ம வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியும், நீ அந்தக் கொலையை பார்க்காமல் இருக்க வைக்க முடியும், ஏன் அந்தக் கொலையையே தடுக்க முடியும், செல்வினைக் காப்பாறியிருக்க முடியும், இன்னும் என்ன வேணும்னா. இது நமக்கு கிடைச்ச புதையல். இதை விட்டுக் கொடுக்கக் கூடாது”

இவன் இறுதியில் என்ன சொல்ல வருகிறான் என்பது கரனுக்கு நன்றாகவே புரிந்தது.
“இதோ பார் பாலா, நீ எல்லா விசயத்தைப் போல இதுலையும் விளையாடாத, இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, எங்கேயாவது போய் மாட்டிகிட்டா பெரிய பிரச்சினையாயிடும்”

“இந்த விளையாட்டல்லாம் சரி பட்டு வராது பாலா”

“நல்லா சிந்திச்சுப் பாரு. உன்கிட்டப் பேசி இந்த சிமியை அவர் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்ன சுயம்பு, சிமிகிட்ட பேசி அங்கே வரசொல்லி இருக்கலாமே”

“அதுதான் எனக்கும் புரியல. நான் நினைக்குறேன், சிமியைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம். நாம அதை சரி செய்தா போதும்னு நினைக்குறேன்”

“கரா, நீ இதையும் புரிஞ்சுக்கணும், நமக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”

“இல்லை இதைப் பற்றியும் சுயம்பு சொன்னாரு, இங்கே இருக்குற ஒரு சிவப்பு பெட்டியில இருக்க ஒரு வித ஸ்விட்ச் C என்ற கணினி மொழியிலதான் எழுதியிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு அவர் சொன்னாரு, அதை சரி செஞ்சுட்டா போதும்”

“அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராது கரா. படிப்புன்னா நீ பாத்துக்கோ, பொண்ணுங்கன்னா நான் பார்த்துக்குறேன்”

“இங்கேயே இருங்க நான் அதைத் தேடுறேன். நீங்களும் தேடுங்க, அது ஒரு சிவப்புப் பெட்டி”

“சரிடா கரா, நானும் லதாவும் இடது பக்கம் தேடுறோம், நீ வலது பக்கம் போ”

“ஏன்? நானும் லதாவும் போகக்கூடாதா?”

“போடா போடா, நீயே எவ்வளவு நேரம்தான் கடலை போடுவ? நானும் கொஞ்ச நேரம் கடலை போடறேனே. இது உன் ஆளுதான், கடிச்சு முழுங்கிட மாட்டேன். போடா போடா வேலையைப் பாரு.”

லதா சிரித்து விட்டாள். கரனும் அதைத் தேடச் சென்று விட்டான். ஒரு வழியாக கீழ் அறையில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்துவிட்ட கரன், அதை சரி செய்ய ஆரம்பித்தான். இதையெதையும் கண்டுகொள்ளாமல் சிமி தனக்குத் தெரிந்ததை செய்து கொண்டிருந்தான்.

லதாவும் பாலாவும் தேடிச் சென்ற இடத்தில் ஒரு படத்தில் லதாவும் கரனும் ஒன்றாய்க் கட்டிப் பிடித்து நிற்பது போல இருந்தது. ஆச்சரியம் கண்களைக் கட்டிக் கொள்ள, அருகே கரன் கையெழுத்தில் ஒரு புத்தகமும் இருந்தது. இருவரும் அதை எடுத்துக் கொண்டு கரனைத் தேடிச் சென்றனர்.

“கரா, இங்க பாரு நீங்க இரண்டு பேரும் நிக்குறா மாதிரி ஒரு படம் இருக்கு.”

ஒரு நிமிடம் இரு என்று கூறி விட்டு தனது வேலையை முடித்து விட்டு, இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இந்த பிரச்சினை சரியாயிடும் என சொல்லிக் கொண்டான்.

புத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப் புரட்டினால் அதில் ஒன்று எழுதியிருந்தது!

“நான் மீண்டும் வருவேன்!”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 11

குறுந்தொடர் - பகுதி 11

"நீ யார்? எங்க இருந்து வந்த?"

"நான் ஒரு மனிதன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நான் ஒரு குழாயில இருந்து பிறந்தவன். ஆனால் எங்க ஊர்ல உங்களை மாதிரி யாருமில்லை, நாங்க மொத்தம் 2 பேருதான் இருக்கோம்"

"உனக்குத் தமிழ் தெரியுதே! எந்த ஊர் உங்க ஊர்?"

"எனக்கு இன்னும் 11 மொழிகள் தெரியும். இந்த இடம்தான் எங்க ஊர். ஒரு இயந்திரத்துல ஏறினேன், ஆனால் திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சு"

"இது உன் ஊரா? திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சா? சரி சுயம்பு உனக்கெப்படி தெரியும்?"

"சுயம்புதான் என்னை உருவாக்கினார், அவர்தான் என் அப்பா! நீங்கள்லாம் யாரு? ஏன் இவ்வளவு தண்ணி வந்துச்சு? ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்"

பாலா குறுக்கிட்டான்.
"சிமி, நீ வந்த இயந்திரம் எங்க இருக்கு? எங்களுக்கு காட்டு"

"இருங்க, இங்கேயே வரும்"
சொல்லி முடித்துவிட்டு கையிலிருந்த ஒரு பொத்தானை அழுத்தினான் சிமி. கடல் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க ஆரம்பித்தது. அந்த அதிர்வில் லதா விழித்துக் கொண்டாள். அலறினாள்...
"கரா, இதுதான், இதுதான் என்னை கொல்லப் பார்த்தது."

"லதா அமைதியா இரு, இது நம்மள கொல்ல வரல. பயப்படாத"

சிமி திடுக்கிட்டான், கொஞ்சம் கோபமாக பார்த்தான். சட்டென முகம் மாறியது
"இவங்க, இவங்களையும் நான் பார்த்திருக்கேன்"

"என்ன சொல்ற சிமி, இவளையும் பார்த்திருக்கியா? எங்க பார்த்த"

அதற்குள் மேலே எழுந்து வந்த ஒரு சாய்வு பட்டு படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரையும் சிமி, கடலிலிருந்து வெளியே வந்த அந்த இயந்திரத்திற்கு கூட்டிச் சென்றது.

உள்ளே எங்கெங்கும் வெள்ளை ஒளியால் நிரப்பப் பட்டிருந்தது. அது சட்டென தனது கதவுளைப் பூட்டிக் கொண்டு ஆழத்திற்கு விரைந்து சென்றது.

பாலா ஒருவித படபடப்புடன் சிமியிடம் பேசினான்.
"நாங்க வந்த படகை இடித்தது நீதானா? உன்னால எத்தனை பேரு செத்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?"

சற்றே கோபமடைந்தான் சிமி.
"என்னிடத்தில் நீங்க என்ன பன்றீங்க, என்னைக் கொல்லதானே வந்தீங்க? அதனாலதான் நானே முந்திகிட்டேன்."

பாலாவைக் கண்ணைக் காட்டி சமாதானப் படுத்தினான் கரன்.
"சிமி, எங்களையேன் கொல்லவில்லை?"

"அதான் சொன்னே உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு!"

"உன்னை இங்கேயிருந்து உன் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்"

"இதுதானே என் ஊர், நான் அப்பாவைத்தான் தேடிட்டு இருக்கேன்"

"இது இல்லை உன் ஊர், நீ வேறு இடத்திலிருந்து இங்கே வந்துட்ட"

"இல்லை, நான் இதுக்குள்ள ஏறி உட்கார்ந்து தூங்கிட்டேன். முழிச்சுப் பார்த்தால் இங்கே நிறைய தண்ணீர்"

சிமியுடன் பேசிக் கொண்டிருந்த கரனைத் தடுத்தான் பாலா.
"என்ன சொல்ற? இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் கரா?"

"அன்னைக்கு நீ தூங்கிட்டதுக்கு அப்புறம் சுயம்பு என்னிடம் பேசினார். அவர் சொன்னது இதுதான். கடலில் கண்ட உயிரனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டுமாம்"

பாலா எப்பொழுதுமே கரன் பேச நினைப்பதை அவன் கண்கள் வழியாகவே வாசித்துவிடுவான். அவன் சொன்னதில் உண்மையில்லை என்பதை அறிந்த பாலா, கரனைத் தனியாக கூப்பிட்டுப் பேசினான்.

"டேய், உண்மைய சொல்லு, அவரு என்ன சொன்னாரு?"

"பாலா, நாம இங்க இருந்து சீக்கிரமா போகணும்னா, நான் சொல்றதைக் கேளு. சிமியை இங்க இருந்து அனுப்பி வச்சிடலாம். சிமிக்கு தற்காலிகமா கொஞ்ச நினைவுகள் அழிஞ்சு போச்சாம். உண்மைய சொன்னா சிமியை சுயம்பு அனுப்பினதே என்னையும், உன்னையும், லதாவையும் அங்கே கூட்டிகிட்டுப் போகத்தான்"

"என்னடா சொல்ற? எங்க கூட்டிகிட்டுப் போகணும்?"

"டேய், பாலா. நான் சுயம்பு சொல்லும்போதெல்லாம் நம்பலை. ஆனா இங்க வந்த உடந்தான் தெரியுது, அவர் சொன்னது உண்மைன்னு. நாம இப்போ நிக்குறது ஒரு கால இயந்திரத்துல! இந்த இயந்திரம் 4453 ம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறது!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 10

குறுந்தொடர் - பகுதி 10

கரன் வேகமாகத் உள்ளே இறங்கினான், பாலாவும் கரனும் அந்தப் பாய்மரப் படகை விடுவித்தனர்.

"கரா லதா எங்கே?"

"பாலா, அங்கே தெரியுது அந்தத் தக்கை!"
சற்று தூரத்தில் அந்தத் தக்கை மிதப்பது தெரிந்தது.

வெகு வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கரன், பாலாவும் அந்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அங்கே லதா இல்லை, வெறும் தக்கை மட்டுமே மிதந்து கொண்டிருந்தது.

கரனும், பாலாவும் உள்ளே மூழ்கித் தேடினர், லதாவைக் காணவில்லை.

"கரா, அங்கே தெரியுறது லதாதான்னு நினைக்கிறேன், வாடா"
பாலாவும் கரனும் விரைந்தனர்.

"லதா, லதா என்னைப் பாரு, என்னைப் பாரு" கரன் கதறிக் கொண்டிருந்தான்.

பாய்மரப் படகில் ஏற்றிவைத்தான் பாலா. அசைவின்றிக் கிடந்தாள் லதா.

"கரா, அவ தண்ணியக் குடிச்சுட்டான்னு நினைக்குறேன், அவ வயித்த அழுத்து"

கரன் அவள் வயிற்றை அழுத்தினான், சிறிது சிறிதாக அவள் தண்ணீரைத் துப்பினாள். உள்ளங்கையை சூடுபறக்கத் தடவினான்.
"லதா, லதா என்னைப் பாரு, லதா, லதா"

மெல்ல மெல்ல கண்விழித்தாள் லதா, சுற்றி என்ன நடக்கிறதென்பதே புரியாதவளாய் திகைத்தாள். அவளுக்குத் தெரிவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கரன் தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். காலை யாரோ தேய்த்து விடுவது போலிருந்தது. அது பாலாதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

"லதா உனக்கெதுவும் ஆகல, என்னைப் பாரு, என்னைப் பாரு"

முழுதாய் கண் திறந்தவள், கரனை கட்டிப் பிடித்து அழுதாள்.
"அ........து அ........து, எனக்குப் பயமா இருக்குக் கரா, எனக்கு பயமா இருக்கு"

"லதா என்னைப் பாரு, என்னது அது? எதுக்கு கீழ விழுந்த? என்ன ஆச்சு?"

"அது, அது வந்து, அது என்னதுன்னு தெரியலை, என்னை கீழே தள்ளிவிட்டுடுச்சு. அது வந்துடும்னு நினைக்குறேன், எனக்குப் பயமா இருக்கு"

"எதுவும் ஆகாது, தைரியமா இரு லதா, நானும் கரனும் இருக்கோம்ல, உனக்கெதுவும் ஆகாது"

படகிருந்த தடமென்று எதுவுமே இன்றி வெகு அமைதியாக இருந்தது கடல். இருட்டி விட இன்னும் கொஞ்ச நேரமே பாக்கி இருந்தது.
"கரையிலிருந்து காப்பாற்ற ஆட்கள் வந்தாலும் எப்படியும் 2 மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பொறுத்திரு லதா" பாலா.

"எனக்கென்னமோ, படகை ஓட்டைப் போட்டதே அதுதான்னு தோணுது, இல்லைன்னா இந்தக் கடல்ல படகு ஏன் கவிழணும்? அது திரும்பவும் எப்போ வேணும்னாலும் வரும் பாலா"

"அதெல்லாம் வராது பயப்படாத லதா"

"பாலா, பாலா பின்னாடி..."
வேகமாக தண்ணீரைக் கீறியபடி வந்தது ஏதோ ஒன்று, பாயமரப் படகை வேகமாக தள்ளிய படி, நீண்ட தூரத்திற்குப் போனது.

"கரா தண்ணியில குதிச்சுடாத, தைரியமா இரு"

"பாலா நீ விழுந்துடாத கெட்டியமா புடிச்சுக்கோ"

லதா மயங்கி விழுந்தாள். கரன் அவளைப் பிடித்துக் கொண்டான்.

சட்டென அந்த உருவம் தள்ளுவதை நிறுத்தி விட்டு, படகு மேலே தவ்வியது! அது மனிதன்தான், கொஞ்சம் பெரிய உருவம்.

"பாலா அசையாமல் இரு, அப்படியே இரு"

கரன் இப்படிச் சொன்னதும் அந்த உருவம் கரனை நோக்கித் திரும்பியது. கரனை உற்றுப் பார்த்தது.

"உனக்கு என்ன வேண்டும்? எங்களை எதுவும் பன்னிடாத, சுயம்பு உன்னைப் பற்றிச் சொல்லி இருக்காரு. உனக்கு என்ன வேண்டும்?"

கரனை இன்னும் அருகே வந்து உற்றுப் பார்த்தது. பாலா அதை அடிப்பதற்கு வேகமாக எழுந்தான்.

"பாலா வேண்டாம், இரு இரு, நான் பேசுறேன்"
சட்டென திரும்பிய உருவத்தை திசை திருப்பினான் கரன்.
"உன்னை உங்க ஊருக்கு நான் திருப்பி அனுப்புறேன், சொல்லு எங்க வச்சிருக்க? என்னை அங்க கூட்டிகிட்டுப் போ!"

"என் பெயர் சிமி" என்றது அந்த உருவம்!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 9

குறுந்தொடர் - பகுதி 9

லதாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவள் கண்கள் கரனின் கண்களை விட்டு அகலாமல் நிலை குத்தி நின்றது. கரன் மெல்ல புன்னகை உதிர்த்தான்.

“கரா என்னோட மிச்ச வாழ்க்கை இனி உன்னோடுதான்”

கரனின் மனதில் கோடிப் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

படகும் சற்றே பெரிய அலையில் சிக்கியது போல குலுங்கியது. படகை ஏதோ வெகு வேகமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. அது அந்த கடலில் பார்த்த மனிதன் போன்ற உருவம்தான். கரனும், லதாவும் கீழே விழுந்தனர்.

படகு ஓரத்தில் நின்று கொண்டிருந்த செல்வினும், சென்னையிலிருந்து வந்த இருவரும் கடலில் விழுந்தனர். செல்வின் தலையில் அடிபட்டு குருதி வழிந்தோடியது. பாலா சட்டென கடலில் பாய்ந்தான்.

படகின் கீழே தண்ணீர் நிறைய ஆரம்பித்தது!

“லதா இங்கேயே இரு, கெட்டியாப் பிடிச்சுக்கோ, திரும்பி வந்துடுவேன்”

“கரா எனக்குப் பயமா இருக்குடா”

கரனும் கடலில் பாய்ந்தான். பாலா செல்வினை பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பாய்மரப் படகில் ஏற்றினான்.

கரன் எவ்வளவு தேடியும் மற்ற இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“செல்வின், செல்வின். என்னைப் பாருடா. உனக்கு ஒண்ணுமில்லை, என்னைப் பாருடா” பாலா.
செல்வின் தலையில் படகின் கீழ்புறத்தில் சற்றே நீட்டிக் கொண்டிருந்த இரும்புத் துண்டு பலமாக அடித்ததில் இறந்திருந்தான்.

கரன் பின்புறம் போய் செல்வினின் நாடியைப் பார்த்தான். உயிரில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். பாலாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.

“செல்வின் செத்துட்டான்டா, மிச்ச இரண்டு பேரையும் தேடிட்டேன், கிடைக்கலை. நான் எதற்கும் இன்னொரு தடவை பார்த்துட்டு வர்றேன்”

பாலா நடப்பது எதுவும் புரியாதவனாய் துளிக் கண்ணீரோடு திகைத்துப் போய் பாய்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடலில் மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தான். யாரையும் கண்டு பிடிக்க முடியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“கரா, இங்க படகுல ரொம்ப வேகமா தண்ணீர் வருது. எனக்குப் பயமா இருக்குடா” பதறினாள் லதா.
இருவரும் மேலே ஏறினார்கள். படகில் மூவரைத் தவிற வேறு யாருமில்லை. எப்பொழுதுமே படகு ஓட்டத் தெரிந்தவர்கள் இரண்டு பேரோடவாவதுதான் படகை எடுக்க வேண்டும் என்று செல்வினின் தந்தை சொல்லுவார். ஆனால் செல்வின் எப்பொழுதுமே அவன் தந்தைப் பேச்சைக் கேட்பதில்லை.

“பாலா இப்போ என்ன பன்றதுடா? கரையிலிருந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். என்ன பன்றதுடா”

“கரா அவசரப் படாதே, நிச்சயம் தப்பிச்சுடலாம். படகு மூழ்குறதுக்குள்ள இங்கே இருந்து கரையில இருக்க யார்கிட்டையாவது பேசிட்டா போதும். பின்னாடி பாய்மரப் படகு இருக்கு. கவலைப் படாத தப்பிச்சுடலாம்.”

கரனும் லதாவும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.
“லதா பயப்படாத, எப்படியும் தப்பிச்சுடலாம்”

பாலா அடிக்கடி செல்வினுடன் கடலுக்கு வந்திருப்பதால், அவனுக்கு படகிலிருந்து எப்படி கரைக்கு சமிக்ஞை அனுப்புவதென்பது தெரியும். அவசர அவசரமாக தாங்கள் இருக்கும் திசையையும், கிளம்பிய இடத்தையும் சொன்னான்.

படகு சுக்கான் அறை வரை தண்ணீர் வரத் தொடங்கியது. லதாவிற்கு நீச்சல் தெரியாது. இருந்த ஒரு மிதக்கும் தக்கையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் குதிக்கச் செய்தார்கள்.

கரன் லதாவை இழுத்துக் கொண்டு பின்னால் இருந்த பாய்மரப் படகுக்குப் போனான். பாலா சுக்கான் அறையை விட்டு வெளியே வந்து பாய்மரப் படகு நோக்கி குதித்தான்.

“பாலா அந்த முடிச்சைக் கழட்டுடா. இல்லைனா இதையும் உள்ளே இழுத்திடும்”

“நீ அங்கேயே இரு, நான் கழட்டிடுறேன்.”
பாலாவின் கைகள் நடுக்கத்துடன் கயிறை கோர்த்து வைத்திருந்த அந்த இரும்பு வளையத்திலிருந்து வெளியேற்றப் பார்த்தான். அது கழற்ற வரவில்லை. சிக்கிக் கொண்டது போலிருந்தது.

படகு மேல் முனை வரை முழுக ஆரம்பித்த்து.
“கரா இங்க வாடா இதை இழுத்துப் பிடி”

“இதோ வந்துட்டேன்டா, லதா எதுவா இருந்தாலும் இந்த தக்கையை விட்டுடாத, கெட்டியா பிடிட்ச்சுகோ.”
கரன் தண்ணீருக்குள் தாவினான். படகு மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டே போனது. கயிறை அதிலிருந்து எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பாலா. கரன் அங்கே போய் அதை விடுவிப்பதற்குள், படகு வேகமாக அமிழ்ந்தது.
லதா பாய்மரப் படகிலிருந்து கவிழ்ந்தாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 8

குறுந்தொடர் - பகுதி 8

பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் லதாவை நல்ல படியாகவே பாட்டி வீட்டில் விட்டு வளர்த்தார்கள். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் முதல் முறை பாட்டி வீட்டிலிருந்து வெளியூருக்குக் கிளம்பினாள் லதா. படகும், அங்கே வீசும் மீன் வாடையும் அவளுக்கு ஒத்து வராததாகவே இருந்தது. எப்படி ஒரு நாள் தங்கப் போகிறேன் என்ற கேள்வி அவளைக் குடைந்தெடுத்தது. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் இருப்பது மேலும் அவளுக்கு ஒரு தவிப்பை ஏற்படுத்தியது. யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியாத சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக குமுறிக் கொண்டிருந்தாள்.

"கரா, நாம எப்போ திரும்பிப் போவோம்"

"தெரியலையே. டேய் பாலா எப்போடா கரைக்குப் போவோம்?"

"நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு செல்வின் வீட்டுக்குப் போயிடலாம். அவங்க அப்பாவைக் கூட்டிகிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்குப் போயிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடலாம். இங்க படகுலையே எல்லா வசதியும் இருக்கு. கீழ போனா குளிக்குறதுக்கே வசதி இருக்கு"

லதாவிற்கு சற்றே நிம்மதி பிறந்தது. இருந்தாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வும், கரனைத் தவிர வேறு யாருடனும் எதையும் பேச முடியாத சூழலும் அவளை ஏதோ செய்தது.

கரனுக்கு அவளது சூழலை உணர முடிந்தது. அவளைக் காதலிக்கப் போவதில்லை என்று அவளிடம் சொல்ல வேண்டுமென்றுதான் காலையில் புறப்பட்டான், ஆனால் இப்பொழுது அவனுள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அலையோடு அலையாக அலை பாய்ந்திருந்தது.

கொஞ்ச நேரம் உலவிய மௌனத்தை உடைத்தான் பாலா.
"ஆமாம், சிநேகா எப்படி இருக்கா?"

பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது லதா. இருந்தாலும் இந்தச் சூழலில் இப்படி அநாவசியமாக பேசுவது அவளுக்கு பொறுமையிழக்கச் செய்தது. பாலாவை ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு
"இருக்கா, நல்ல வேளை அவளை யாரும் சரியாப் பார்க்கலைன்னு நினைக்குறேன், என்னை மட்டும்தான் துரத்தினாங்க"

"நல்ல பொண்ணுங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது"

"டேய், பாலா சும்மா இருடா, விளையாடுறதுக்கு இதுவா நேரம்? அவளே நொந்து போய் இருக்கா, அவகிட்ட போயி கிண்டல் பன்னுற"

"என்னடா, அவகிட்ட பேசினா இங்க இருந்து பதில் வருது? ம்......ம்....... நடக்கட்டும். சரி லதா, அப்படியே நானும் சிநேகாவும் பேசுறதுக்கு ஏற்பாடு செஞ்சுக் கொடு, சும்மா கடலை போடத்தான்"

"உனக்கு எப்பவுமே விளையாட்டுதானா பாலா? நேத்து என்னடான்னா அப்படி செஞ்சுட்ட"

"என்ன செஞ்சுட்டேன் லதா? சிநேகா எதாவது சொன்னாளா?"

"ம்........... அவ ஒன்னும் சொல்லல, ஆனா உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"

"இது என்ன புதுசா இருக்கு, என்ன விசயம்? அதுக்கு முன்னாடி சிநேகா எதைத் தெரிஞ்சுக்குறதுக்கு கரன்கிட்ட பேசினா?"

"அது... அது..... வந்து......" லேசா வெட்கப் படத் துவங்கிய இதழில் பேச்சே வரவில்லை.

எந்த ஆணுக்கும் தன்னை ஒரு பெண் அவளாகவே காதலிக்கத் துவங்குவது வித்தியாசமான அனுபவம்தானே. கரனுக்குள்ளே ஏதோ செய்தது. வெளியே அவன் அவளைக் காதலிக்க மாட்டேனென்று சொல்லி வந்தாலும், உள்ளூற இப்பொழுது அவள் சொல்லப் போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.

"சும்மாதான் பேசினா...... வேற ஒன்னுமில்லை. தேவைன்னா அவகிட்ட கேட்டுக்கோ"
சொல்லி விட்டு குணிந்து கொண்டாள்.

"இதெல்லாம் சரியா வரலியே, என்னைப் பற்றி உனக்குத் தெரியும்னு நினைக்குறேன். என்கிட்ட பொய் சொல்ல நினைச்சா, நான் கண்டு புடிச்சுடுவேன்"

"டேய்! விடுடா, வா நாம அந்தப் பக்கம் போகலாம், அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்"
இந்தச் சூழ்நிலையில் பாலாவை அங்கேயிருந்து நகர்த்திக் கொண்டு செல்வதில்தான் கரன் ஆர்வமானான்.

கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்தார்கள் பாலாவும் கரனும். மீண்டும் லதா இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே லதா இல்லை. படகில் வலைகள் குமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்தில் கரியால் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. அதை குணிந்து வாசித்தான் பாலா.
"கரன், நான் உன்னை ஒன்றரை வருசமா காதலிக்குறேன். இதுதான் உண்மை. ஆனால் எனக்கு எப்படிச் சொல்லன்னு தெரியலை"

கரனும், பாலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலா சம்மதச் சமிக்ஞையோடு சிரித்தான். கரன் முகம் ஒளியானது!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 7

குறுந்தொடர் - பகுதி 7

அலையின் போக்குக்கெல்லாம் ஆடியபடியே நகர்ந்து சென்றது படகு. படகில் செல்வினுடன் சேர்த்து ஐவர் இருந்தனர்.

செல்வின் பாலா அருகில் வந்தான்.
"வாடா பாலா, எப்படி இருக்க?"

திடீரென்று மூவரை ஓரிரவு படகில் தங்க அழைத்தது அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வழக்கமாக அவன் அப்பாவுடன் செல்லும் போது கண்ணில் படும் நண்பனையும் சேர்த்து அழைத்துச் செல்வதே அவனுக்கு வழக்கம்.

செல்வினின் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாய் இருந்தான் பாலா. சற்றுத் திரும்பி கரனைப் பார்த்தான். கரன் இன்னும் லதாவின் அருகிலேயே மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தான். பாலா சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, செல்வினைக் கூப்பிட்டுக் கொண்டு படகின் அடுத்த புறம் சென்றான்.

பாலா நடந்ததையெல்லாம் செல்வினிடம் சொன்னான்.
"என்ன செய்யனு தெரியல, இவளை வேற இங்கே கூட்டிகிட்டு வந்தாச்சு, இனி என்ன ஆகும்னு தெரியலை".

பெரிய ஆச்சரியத்தோடோ அல்லது அதிர்ச்சியோடோ இதைக் கேட்கவில்லை செல்வின்.
"விடுடா இதெல்லாம் பெரிய விசயமா, எம்.எல்.ஏ எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்தான், அவர் பையன் எனக்குத் தெரிஞ்சவன்தான், கவலையை விடு. அந்தப் பொண்ணை சமாதானப் படுத்தி இதைப் பத்தி யாருகிட்டையும் வாயைத் திறக்க மாட்டேன்னு சொல்லச் சொல்லு".

பாலாவிற்கு வயிற்றில் பால்வார்த்தது போலிருந்தது.
"அவளை எப்படியாவது பேசி சமாளிச்சுட்றேன்டா, நீ இப்படி சொன்னதே போதும். நாளைக்கு நீயும் உங்கப்பாவும் அவ பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சிடுங்கடா"

"சரிடா, நான் பாத்துக்குறேன். நீ கவலை படாதே. ஆமாம், அந்தப் பொண்ணு கரனோட ஆளா? கரன் கலக்குறானே!"

"இல்லடா, அவன் என் நண்பன். நீ நினைக்குறா மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை"

"அப்படின்னா சரி. அப்புறம் என் படகை அசிங்கப் படுத்திடப் போறாங்கன்னுதான் பயந்தேன்"

"அடிங்கு உன்னை. இல்லைன்னாலும் இவரு ஒன்னுமே பன்னதில்லை. டேய், என்கிட்டேவா நீ பொய் சொல்லுற?!"

"விடுடா, விடுடா. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"

"சரி யாருடா மத்தவங்கல்லாம்? ங்கே னு இருக்கானுக"

"அவனுக சென்னையிலிருந்து வந்துருக்கானுக, ஏதோ கடல்ல ஆராய்ச்சி செய்யணுமாம். அதுவும் ராத்திரியில தான் செய்யணுமாம். வெளக்கெண்ணெய்க இதுக்கே நான் இரண்டு மடங்கு சொன்ன விலைக்கு ஒத்துக்கிட்டானுக, படிச்சவங்கன்னாலே புத்தி இருக்காது போலடா"

"டேய் எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதடா. சரி இங்கேயே இரு கரன் என்ன பன்றான்னு பார்த்துட்டு வர்றேன்"

பாலா அங்கே போகவும் லதா பேச்சை நிப்பாட்டினாள்.

"என்னடா கரா, பேசி முடிச்சாச்சா? சரி நீ ஓரம்போ நான் கொஞ்ச நேரம் பேசிக்குறேன்"

கரனுக்கு பாலா இப்படி பேசுவது புதிதாக தெரியவில்லையெனினும் இந்த சமயத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்த்து அவனுக்கு.
"ஏன், நானிருக்கும்போது பேச மாட்டியா"

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் கரா, நீ போயி செல்வின் கிட்ட பேசிகிட்டு இருடா"
"என்னடா லந்தா, நானிங்கதான் இருப்பேன். சொல்லு. அப்படி எனக்குத் தெரியாம என்னத்தைக் கேட்கப் போற?"

"சரி விடு. எனக்கு எல்லாம் புரியுது"
அப்படியே அங்கு செல்வின் சொன்னதை லதாவிடம் சொன்னான்.

தப்பித்தால் போதுமென்ற பயத்தில் உண்மையை காவல் துறையிடம் சொல்ல அவளுக்கு தோன்றவில்லை. மேலும் இங்குள்ள காவல்துறை அதிகாரிகளால் இவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதும் ஊரறிந்த விசயம்.

"அவங்க சொல்றா மாதிரி கேட்டுக்குறேன். யாருகிட்டையும் எதுவும் சொல்ல மாட்டேன். எந்தப் பிரச்சினையும் வராதுல்ல பாலா"

"இது எல்லாத்தையும் நாந்தான் ஏற்பாடு செய்யுறேன். என்னை அப்போ அப்போ கவனிச்சுகிட்டு, நான் கேட்குறத வாங்கிக் கொடுத்தன்னா எந்தப் பிரச்சினையும் இல்ல. இனி எல்லாம் உன் கையிலதான் இருக்கு"

"ரொம்ப ஓவர்டா இதெல்லாம். எதுவா இருந்தாலும் செல்வினுக்கு நன்றி சொல்லணும்"
படகில் உடன் வந்த சென்னைக் காரர்கள் கடலில் வந்துபோன அந்த வித்தியாசமான உயிரைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.


முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 6

குறுந்தொடர் - பகுதி 6

கார்மேகம் வழிந்தோடிய பின் வெறிசோடிக் கிடக்கும் வானம் போல், கண்ணீரால் கவலை கழுவி முடித்தாள், வார்த்தை கோர்த்து எடுத்தாள்.

“லதா, விட்டா இதான் சாக்குன்னு அவன் மேலையே சாஞ்சுகிட்டு இருக்க” என்று கிண்டல் செய்தான் பாலா, உண்மையில் அவளைத் தேற்றுவதற்குத்தான் சீண்டினான்.

குளியலறையை யாரோ எட்டிப் பார்ப்பது போல தாவினாள். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். சொற்களை சொற்றொடர்களாக்கினாள்.

“நம்ம கல்லூரியில திடீருன்னு ஸ்ட்ரைக் செஞ்சாங்க நம்ம சீனியர்ஸ், காலையில 8 மணிக்கே வந்து சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மூன்றாவது வருசம் படிக்குற பசங்கள்ல இரண்டு கோஷ்டிக்கும் இடையில மோதல். நான் விடுதியில இருந்து வந்துகிட்டு இருந்தேன் அப்போ இரண்டு பசங்க எதிர்க்க வந்த மூன்று வண்டியையும் கவிழ்க்கனும்னு பேசிகிட்டாங்க. அதே மாதிரி அதை கவிழ்த்துட்டாங்க. எனக்கும் சிநேகாவுக்கும் கையும் ஓடல காலும் ஓடல”

எழுந்த சூரியனை மீண்டும் கடலே விழுங்குவது போல மீண்டும் கண்கள் கண்ணீரில் மூழ்கின.

“அழாம சொல்லு, கவிழ்த்தவங்க யாரு? செத்தவங்க யாரு? உன்னை எதுக்கு துரத்துறாங்க?” கரன்

“கவிழ்த்தவங்க நம்ம கல்லூரிப் பசங்க, ஆனால் செத்தது யாருன்னு எனக்குத் தெரியாது. அதை நான் பார்த்துட்டேன்னு என்னைத் துரத்துறாங்க. நானும் சிநேகாவும் கல்லூரிக்குத்தான் ஓடினோம். திரும்ப அங்கேயும் இவங்க வந்து துரத்த ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் இந்தப் பக்கம் ஓடினேன், சிநேகா என்ன ஆனான்னு தெரியலை” சொல்லி முடிக்கும் முன் சில தடவை எச்சில் முழுங்கி பல தடவை எழுத்துக்களை முழுங்கினாள் லதா.

“யாரு உன்னைத் துரத்துறாங்க? எந்தப் பசங்க” பாலா.

“துரத்துறப் பசங்கள்ல ஒருத்தன் நம்ம கல்லூரி முதல்வரோட பையன், இன்னொருத்தன் இந்த ஊரு எம்.எல்.ஏ பையன்” சொல்லும்பொழுதே நடுங்கிற்று அவள் சொற்களும் ஈரக்குலையும்.

பாலாவிற்கு உடனடியாக தோன்றிய எண்ணம் ‘வசமா சிக்கிட்டோம்’, இனி எப்படி இவளிடமிருந்து தன்னையும் கரனையும் காப்பாற்றிக் கொள்வதென்று. உண்மையில் யாரும் சினிமாக் கதாநாயகர்கள் இல்லைதான்!

கரன் அதிர்ந்துதான் போனான், அவனுக்கு எதுவும் புரியவில்லை

மழை மேகம் சூழும் தருணம் ஏற்படும் அமைதியை சடாறென்று இடி உடைப்பது போல் சிறிது நேரம் நிலவிய மௌனத்தை லதா உடைத்தாள்.

“என்னால நீங்க இரண்டு பேரும் சிரமப் பட வேண்டாம், நான் எப்படியாவது தப்பிச்சுப் போயிடுறேன்” லதா.

உள்ளூர ஏதோ இருண்ட குகையில் திக்கு தெரியாமல் அலையும் தருணம் ஒரு வெளிச்சம் வரும் பாதை தெரிவது போல தோன்றினாலும், அவனுடைய தன்மானமும், இத்தனை நேரம் அவள் அவனை மீது சாய்ந்திருந்த போது தனது மார்பில் பதிந்த சூடும், அவனை இப்படிக் கூறச்செய்த்து.

“அப்படி இல்ல, நீ தப்பிக்குறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்” என்றான் கரன்.

பாலாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏன் இவன் வீணா அவகிட்ட இப்படி சொல்லணும் என்ற எண்ணம் பாலாவை சூழ்ந்து நின்றது. மறுபுறம் கரனை விட்டுவிட்டு தன்னால் செல்லமுடியாது என்றும் தோன்றியது.

தூரத்திலிருந்து ஒருவர் கையசைப்பதைப் போன்று பாலாவிற்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர்தான் என்று அவனுக்குப் புரிந்தது. அது வேறு யாருமில்லை, அவன் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன்தான். கடலுக்குள் செல்ல முற்பட்ட அந்தப் படகில் இருப்பவன் பாலாவிற்கும் பழக்கமான செல்வின்தான்.

“நாங்களும் வரமுடியுமா” என்றான் பாலா

இப்பொழுது அந்த படகு இவர்கள் நிற்கும் கரைக்கு கொஞ்ச தூரத்தில் நின்றது. செல்வின் படகின் முன்முனைக்கு வந்தான்.

“நாங்க திரும்பி வர்றதுக்கு ஒரு நாள் ஆயிடும், அதுவரைக்கும் எங்க கூட இருப்பீங்களா” என்றான்.

லதாவிற்கு அது சரியெனப் படவில்லை. அவளுக்கு கடலென்றால் கொஞ்சம் பயமுண்டு.

“கரா, வேண்டாம் கடலுக்குப் போக வேண்டாம், எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.

லதாவை சமாதனப் படுத்தினான் கரன். “ஒரே நாள்தான், நானும் பாலாவும் நிறைய தடவை இந்த மாதிரி போயிருக்கோம். எந்தப் பிரச்சினையும் இல்ல. மற்றதெல்லாம் நாம அங்க போய் யோசிக்கலாம்” என்றான் கரன்.

அப்பொழுது உள்ளே செல்ல எத்தனித்தது ஒரு பாய்மரப் படகு. அதில் மூவரும் ஏறிக்கொண்டு ஓங்கியடித்த அலைகளில் மேலெழும்பி கீழிறங்கியென ஒருவழியாக படகைச் சென்று அடைந்தவுடன் லதா ஓவென்று வாந்தி எடுத்தாள். தலையைப் பிடித்து விட்டான் கரன்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 5

குறுந்தொடர் - பகுதி 5

வழக்கம்போல இல்லாதிருந்தது இந்த விடியல் கரனுக்கு. அவளிடம் என்ன சொல்ல? அவள் என்ன சொல்லுவாள்? அவளிடம் வேண்டாமென்று சொல்லி, அவள் புரிந்து கொள்வாளா? நாம் ஏன் காதலிக்கக் கூடாது? அப்பா, அம்மா இன்னும் பல பல சிந்தனைகள் அவன் மீது விழுந்து வழிந்து கொண்டிருந்தது குளியலறை தண்ணீர்த் தூறலோடு சேர்ந்து.

வழக்கமாக அரட்டை அடித்துக் கொண்டு போகும் கரனும், பாலாவும் மௌனமாகவே கல்லூரிக்கு கிளம்பினார்கள். வண்டியை நிதானத்தோடே ஓட்டினான். சட்டென்று வெகு வேகமாக மூன்று வண்டிகள் அவர்களைக் கடந்து சென்றது. அதில் இரண்டு வண்டியில் மூன்று மூன்று பேராக அமர்ந்திருந்தனர்.

“என்னடா இந்த வேகத்துல போரானுக, விட்டா போய்ச் சேர்ந்துருவானுக போலிருக்கு” என்றான் பாலா.

சற்று தூரம் கடந்து வந்த ஒரு வளைவருகில் கரனின் வாகனம் திரும்பியது. அங்கே முன்னே வேகமாக சென்ற மூன்றில் இரண்டு வாகனம் விழுந்து கிடந்தது. ஒரே ஒரு வாகனம் குருதி சொட்ட சொட்ட ஒருவனை நடுவில் வைத்துக் கொண்டு வேகமாக எதிரே பறந்தது.

“அய்யய்யோ, அடி பட்டிருச்சுடா இவனுகளுக்கு. இறங்கு என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றான் கரன் மெதுவாக வண்டியை நிறுத்தி.

“படுபாவிகளா, சாவதுக்குத்தான் இம்புட்டு வேகமா போனானுகளா” என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த உடல்களில் உயிர் ஒட்டியிருக்குதாவென்று பார்க்கச் சென்றனர்.

மூன்று பேர் இரண்டு சடலங்களை மடியில் போட்டுக் கொண்டு அழுதுகொண்டே இருந்தனர். அதுல ஒருத்தன் அவனுகள சும்மா விடக்கூடாதுடா, நம்ம பசங்களுக்குப் போன் பண்ணுடா என்று அலறினான்.

சற்று தூரத்தில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் வேகமாக கல்லூரியைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர்.

“டேய், இது வேற ஏதோ பிரச்சினை மாதிரி இருக்குடா, வாடா போயிடலாம்” என்றான் பாலா பதறியபடியே.

“ஆமாம்டா, என்ன பன்றதுன்னே புரியல, வா போய்டலாம்” கரன்.

கல்லூரி அருகே பெரிய கலவரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். எதிரே வந்த பாலாவின் நண்பன் “மச்சான், இந்த வண்டிய எங்க வீட்டுல விட்டுடா, நான் நம்ம பசங்க வேன்ல போலீஸ் ஸ்டேஷன் போறேன்டா” என்றான் பதட்டமாக.

வேறெதுவும் பேச முடியாத அவசர நிலை பாலாவிற்குப் புரிந்தது. வண்டியை வாங்கிக் கொண்டான். சற்று தொலைவில் லதா வேகமாக ஓடிவந்தாள், கரனைப் பார்த்ததும் அழுகை பீரிட்டு வந்தது அவளுக்கு. இன்னும் வேகமாக ஓடிவந்தாள்.

“கரா வண்டியை எடு, என்னை காப்பாத்து, எங்கேயாவது போ” என்றாள் பதட்டமாக. கரனுக்கு கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை.

“கரா சொல்றத கேளு அங்க இரண்டு பேரு என்னைத் துரத்துறாங்க, சீக்கிரம் போடா, என்னைக் காப்பாத்து” என்று கதறினாள். தூரத்தில் இரண்டு பேர் ஒரு சின்ன வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

“டேய் வாடா போயிடலாம். நீ கரன் வண்டியில ஏறு” பாலா.

இரண்டு வண்டியும் சீறத் தொடங்கின. “டேய் பக்கத்து ஊருக்குப் போயிடலாம் குறுக்குப் பாதை வழியா, இல்லைனா அவனுங்க ஆளு யாராவது எதிர்க்க வரப் போறாங்க” என்றான் கரன். இதயம் பல மடங்கு துடிக்கத் தொடங்கியது கரனுக்கும் பாலாவிற்கும்.

மூவரும் சற்று நேரத்தில் மறைந்தனர். பின்னால் துரத்தி வந்தவர்களால் அவர்களைத் தொடர முடியாமல் திரும்பி விட்டனர்.

கொஞ்ச தூரம் போனதும் பாலா கரனை வண்டியை கடல்புறமாக ஓட்டச் சொன்னான்.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினான் கரன்.

படபடப்போடு இறங்கினர் மூவரும். ஒருவரையொருவர் மூச்சிளைக்க பார்த்துக் கொண்டனர்.

“என்ன ஆச்சு, அங்க என்னதான் நடக்குது?” கரன்

“எனக்கு பயமா இருக்கு கரா, என்னென்னமோ நடக்குது” என்று அழத் தொடங்கினாள், கொஞ்சமாக கரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

எதுவுமே புரியாதவனாய் கரன் பார்த்துக் கொண்டிருக்க, பாலா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி அழாத, முதல்ல விசயத்தை சொல்லு, என்னதான் நடக்குதுன்னு கேக்குறன்ல” என்றான் கொஞ்சம் சத்தமாக கரன்.

கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது லதாவிற்கு. பாலா பார்வையிலேயே கரனை சமாதானப் படுத்தினான். கரன் மெல்லிதாய் அவள் கை மேல் கை வைத்தான், லேசாகத் தட்டிக் கொடுத்தான். லதா படாரென்று கரன் மார்போடு சேர்ந்து கொண்டு அழுதாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்