ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

இனம் புரியாத வலிகள்

"ஏண்டி பாமா, இன்னைக்கு நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா? நீயே கூட்டிகிட்டுப் போய்ட்டு வரவேண்டியதானே?" என்று குளிக்கக் கிளம்பியவன் நின்று சமையலறையை நோக்கி ஒரு முறை சத்தமிட்டான்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் கண்டிப்பா வரணுமாம். அப்புறம் அங்கே ஏதாவது கேள்வி கேட்டாங்கன்னா உங்க சம்பளம், வேலை பற்றியெல்லாம், நீங்கதான் பதில் சொல்லணும்" என்று வாணலியில் தாளித்துக் கொண்டே கச்சிதமாய்ப் பேசி முடித்தாள்.

இப்படி ஒரு பனிரெண்டாம் வகுப்பை என் தலையில் கட்டி வச்சாங்களேன்னு புலம்பிகிட்டே குளிக்கக் கிளம்பினான்.

இருவருக்கும் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. பெற்றோரின் விருப்பத்திற்காகவும், கொஞ்சம் கட்டாயத்திற்காகவும் பாமாவைக் கட்டிக் கொண்டான். பாமாவும் அழகுக்கு சளைத்தவள் அல்ல, படிப்பு மட்டும்தான் குறைவு, ஆனால் சமையல், கவனிப்பு எல்லாவற்றிலும் கெட்டிக் காரி. இருவரும் மணம் முடித்துவிட்டுச் சென்னை கிளம்பியபோது ஊரே வந்து வாழ்த்தி வழியனுப்பியது. ஆனால் இப்படி படிப்பும் தன்னை விட நாகரீகமும் குறைந்த மனைவியை எப்படித் தனது நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவது என்று வெட்கிக் கொண்டு தனது திருமணத்திற்கும், திருமணத்திற்குப் பிறகும் நண்பர்கள் யாரையும் அழைத்ததில்லை. வெளியே சில இடத்துக்குச் எப்பொழுதாவது இவளைக் கூட்டிச் சென்றாலும் அதிகம் பேசிக் கொள்ளாமல் சீக்கிரம் போன வேலையை முடித்துவிட்டுத் திரும்பிவிடுவான். வீட்டு அருகிலேயே பாலர் படிப்பு முடித்த வசந்தை இன்று ஒன்றாம் வகுப்பில் சேர்த்து விடக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

குளித்து முடித்து வெளியே வந்தவன், தலையைத் துவட்டிக் கொண்டே பாமா, பாமா என்று அழைத்தான், பதிலே இல்லை. "எங்க போய்த் தொலஞ்சா? ஒரு சட்டை கூட எடுத்து வைக்காம?" என்று முணங்கிக் கொண்டே இருந்தான்.

"டேய்ச் செல்லம், இன்னைக்கு நீ பள்ளிக் கூடம் போகப் போற, உன்னை என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன்ல அம்மா, அதெல்லாம் சரியாச் சொல்லிடனும். சரியா? இப்போ நான் கேள்வி கேட்குறேன், பதில் சொல்லு பார்ப்போம்"

உன் பேர் என்ன?

"எனது பெயர் வசந்த், ஆங்கிலத்தில் மை நேம் ஈஸ் வசந்த்"

உங்க அப்பா அம்மா பேரு என்ன?

"அப்பாவின் பெயர் குமார், அம்மாவின் பெயர் பாமா, ஆங்கிலத்தில் மை ஃபாதர்'ஸ் நேம் ஈஸ் குமார், மை மதர்'ஸ் நேம் ஈஸ் பாமா"

வீட்டு தொலை பேசி எண்?

"2234 6768"

சரி நேரம் ஆயிடுச்சு, மத்ததெல்லாம் ஞாபகம் இருக்குல்ல, அம்மா இங்க நிக்குறேன், நீ உன் ஷூவைப் அந்த மாமா கிட்ட கொடுத்து பளபளப்பாக்கிட்டு வா.

சரிம்மா என்றவன் ஓடிச் சென்று செருப்புத் தொழிலாளர் சாமியுடன் கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசிவிட்டு வேலையையும் முடித்துக் கிளம்பினான்.

"என் செல்லப் பையா, உனக்கு ஸ்கூல்ல எடம் கெடைக்கும்பா, ராசா, போயிட்டு வாபா, இன்னைக்கு உனக்கு இலவசம்பா பாலீஷ் போட்டது" என்று சாமி பாசமோடு சொன்னார்.

"இந்தாப்பா வசந்த், இதான் நீ இன்னைக்கு போட்டுப் போகப் போற துணி, இது உன் அப்பாவோடது, வாங்கிக்கோ. உனக்கு மெய்யாலுமே சீட்டு கெடிக்கும்பா, அசத்து கண்ணா" என்று பாசத்தோடு வாழ்த்து கூறினார் இஸ்திரிக் காரர் அன்பு.

வேலையெல்லாம் முடித்துவிட்டு பாமாவும், வசந்தும் வீட்டு மாடிக்குச் சென்றனர். இதையெல்லாம் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.

"ஏண்டி உன் புத்தி எங்க போகும்? போயும் போயும் அந்த இஸ்திரிக் கடைக்காரன், செருப்புத் தைக்கிறவன் கிட்டல்லாம் ஏண்டி பேசுற, அதுவும் வசந்தை வேறப் பேசவிடுற. அவங்க கிட்டல்லாம் தூர நின்னே பழகணும். புரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியாது, தெண்டக் கருமம்" என்று வழக்கம் போல திட்டிவிட்டு தன்னுடைய சட்டைத் துணியை வாங்கிக் கொண்டு உடை மாற்றப் போனான் குமார்.

மூவரும் பள்ளிக்கூடத்திற்குப் போனார்கள். தலைமை ஆசிரியர் ஒவ்வொரு மாணாக்கராய் அழைத்து பேசிப் பார்த்து பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார். வசந்த்துடைய நேரம் வரவும் மூவரும் உள்ளே சென்றனர். சில பல கேள்விகள் பெற்றோரிடம் கேட்டு முடித்தார் தலைமை ஆசிரியர். மேலும் வசந்திற்கு பாமா சொல்லிக் கொடுத்த கேள்விகளையும் கேட்டார், அதற்கு கச்சிதமாகப் பதில் சொன்னான் வசந்த்.

"பையனோட அம்மா கம்மியா படிச்சுருக்காங்களே, குழந்தைக்கு வீட்டுப் பாடம் எப்படிச் சொல்லிக் கொடுப்பாங்கன்னு யோசித்தேன். ஆனால் அழகா சொல்லிக் கொடுத்துருக்காங்க. பாராட்டுக்கள். மேலும் உங்க பையனை இங்கே சேர்ப்பதற்குக் காரணமே அவனுடைய ஒழுங்குதான். அழகா இஸ்திரி செஞ்ச சட்டை, கால்ச்சட்டை, முகம் தெரியுற அளவுக்கு பளபளப்பா ஷூ. நீங்களும் நல்ல ஒழுங்கான ஆடையோடு வந்திருப்பதே, நல்ல குடும்பம் என்பதை எனக்குப் புரிய வைக்கிறது. இதுக்காகவே உங்கப் பையனைச் சேர்த்துக்கிறேன்" என்று தெளிவாகப் பேசி முடித்தார் தலைமை ஆசிரியர்.

"இந்த சட்டை, ஷூ, நீ சொல்லிக் கொடுத்த கேள்வி பதில் இதனாலதான் இடம் கிடைச்சுருக்கு, அப்புறம் ஏம்மா அப்பா உன்னையும், சாமி, அன்பு மாமாவையும் திட்டிகிட்டே இருக்காரு" என்று வெகுளித் தனமா கேட்டு முடித்தான் வசந்த்.

வெட்கித் தலை குனிந்தான் குமார்.

0 comments:

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்