ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 4

குறுந்தொடர் - பகுதி 4

“இவ்வளவு நேரம் சிநேகாதான் பேசினா. என்னைப் பற்றி நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சுக்கதான் அவ பேசினா. நீ இப்படிப் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கலை.” என்றாள்.

பதட்டத்துடன் வேகமாக தட்டச்சினான் கரன். “ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு, இவ்வளவு நேரம் இங்கே பேசினது நானில்லை, பாலா. உன்னைக் கிண்டல் செய்யுறதா நினைச்சு அப்படிப் பேசிட்டான்.” என்றான்.

சற்றுத் தாமதமாகவே பதில் வந்தது. “அப்போ அது நீ இல்லையா? சிநேகாவதான் பிடிச்சுருக்குன்னு சொன்னதும் பயந்துட்டேன்” என்றாள்.

எதற்கான பீடிகை இதுன்னு கரனுக்கும் பாலாவுக்கும் புரிந்தது. பாலா குறுக்கிட்டான்.

“நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி பேசினேன், சிநேகாவை தவறாக எடுத்துக்க வேணாம்னு சொல்லு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

அதற்கு அவள் அனுப்பிய பதிலுக்கு பதிலும் அனுப்பாமல் நிறுத்தி விட்டான். திடீரென்று தெருவில் பரபரப்பு.

சன்னலின் வழியே எட்டிப் பார்த்த பாலா கீழ் வீட்டில் தங்கி இருக்கும் முத்துவைப் பார்த்து கேட்டான் “என்ன விசயம் திடீருன்னு எல்லோரும் கூட்டமா நிக்குறீங்க?”

“கடல்ல இன்னைக்கும் ஒருத்தர் அந்த மனிதன் மாதிரி இருக்க மீனைப் பார்த்திருக்காரு, ஆனால் அது உடனே மறைஞ்சுடுச்சாம்” என்றார்.

பாலா சலித்துக் கொண்டே, “இவனுக உண்மையைத்தான் பேசுறானுகளா?” என்று கேட்டுக் கொண்டே கரனிடம் சென்றான். கரனுக்கு மீண்டும் சுயம்பு ஒரு விசயம் அனுப்பி இருந்தான்.

அதில், அந்தக் கடலுக்கு கரன் செல்ல வேண்டுமென்றும், கடலில் இருப்பது மீனல்ல தனக்குத் தெரிந்த உயிர்தான் என்றும் எழுதியிருந்தது.

இதனை வாசித்த கரன் அதிர்ச்சியில் மூழ்கியிருக்க, பாலா “டேய், யாருடா இது? என்னென்னவோ பேசுறான்? என்ன செய்யலாம்” என்று மௌனமுடைத்தான்.

என்னதான் சொல்றான்னு கேட்கலாம்டா என்றான் கரன். பாலாவும் சம்மதித்தான்.

“நீங்கள் யார்? எதற்கு உங்களுக்கு உதவ வேண்டும், இதனால் என்ன பயன்?” என்றான் கரன் சுயம்புவிடம்

பதில் உடனே வந்தது. “நான் யாரென்பதை உங்களுக்கு விளக்கும் நேரம் வரவில்லை. ஆனால் நீங்கள் உதவியைச் செய்தால் மனித இனம் தழைக்கும்” என்றான் சுயம்பு.

மேலும் ஒரு புதிரான விசயத்தைச் சொன்னான் சுயம்பு. “நீங்களும், உங்கள் மனைவி லதாவையும் சேர்ந்துதான் அந்த உதவியைச் செய்ய வேண்டும்” என்று இருந்தது.

மனைவி லதா என்பதைப் படித்தவுடன் அதிர்ச்சியுற்ற இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

கரன் பேச ஆரம்பித்தான் “நீங்க தட்டச்சுறதுக்குப் பதிலா என்னுடன் பேசுங்க, இல்லை நேரில் வாங்க” என்றான்.

அதற்கு சுயம்பு “நான் உங்களைப் பார்க்க வர முடியாது, ஆனால் நிச்சயம் நாம் சந்திப்போம், எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பன்னுங்க” என்றான்.

“உங்களுக்கெப்படி இங்கு நடப்பதெல்லாம் தெரிகிறது, லதாவைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்? அவள் என் மனைவி இல்லை” என்றான் கரன்.

“அங்கு நடப்பது எல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் லதா உங்கள் மனைவி என்று எனக்குத் தெரியும், இப்ப இல்லைன்னாலும் இனிமேல் அவங்கதான் உங்க மனைவி” என்றான் சுயம்பு.

என்ன செய்யவென்று திகைத்துப் போனவர்கள் திடீரென்று கணினியைப் பார்க்க அதில் சுயம்பு இணைப்பிலிருந்து விடுபட்டுவிட்டது தெரிந்தது,

கரனுக்கு உள்ளூர ஒரு பயம் தொக்கி நின்றாலும், என்ன செய்வதென்ற குழப்பம் மேலோங்கி இருந்தது. பாலா எதையும் கூற முடியாதவனாய் இருப்பினும் சுயம்பு சொல்வதைக் கேட்க வேண்டமென்ற முன்கூட்டிய முடிவோடு இருந்தான்.

“லதாவை என் மனைவிங்குறான், அதுக்காகவாவது அவன் சொல்றதை செஞ்சு, எப்படி லதாவை என் மனைவின்னு சொன்னான்னு கேட்கனுமே” என்றான் கரன்.

“உனக்கு அவ மேல ஆசை வந்துடுச்சு அதான் இப்படிப் பேசுற, இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம், நாம அவன் சொல்றதை செய்ய வேண்டாம்.” என்றான் பாலா. ஆனால் அதைக் கேட்கும் எண்ணத்தில் கரன் இல்லை.

அப்படி என்னதான் புதிர் போடுகிறானென்று பார்க்க ஆவலானான்.

“பாலா, நான் லதாவுடன் பேசப் போகிறேன் நாளைக்கு. எங்க வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்லிடுறேன்” என்றான் முடிவாக.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 3

குறுந்தொடர் - பகுதி 3

"டேய் பாலா, இங்க வா. நான் காலையில சொன்னேன்ல சுயம்புனு ஒருத்தர் பேசுறாருனு, அவர் என்னென்னமோ சொல்றாருடா" என்று நடந்ததை விளக்கினான் கரன்.

"நம்ம பசங்கதான் யாராவது இருக்கும்டா, விளையாடுறானுக" உள்ளே சற்று யாராக இருக்குமென யோசித்துக் கொண்டே இருந்தாலும் அலட்சியமாகவே சொல்லி முடித்தான்.

கரன் விடவில்லை மீண்டும் சுயம்புவிடம் பேச்சுக் கொடுத்தான். "நீங்க யாருன்னு எனக்கு சொல்லுங்க. மேற்கொண்டு என்னிடம் உங்களைப் பற்றிய விவரத்தைச் சொல்லவில்லைன்னா இதோட பேச்சை நிப்பாட்டிக்குங்க" என்று பதட்டத்தோடு தட்டச்சினான்.

"உங்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரியலை, உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னும் உங்களுக்குத் தெரியலை. உங்களுக்கு நான் மிகவும் நெருக்கமானவன். ஆனால் இப்பொழுது எதையும் சொல்லும் நிலைமையில் நானில்லை. எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்." என்று விடுகதையோடு முடித்தான் பேச்சை.

"இல்லை, நீங்கள் என்னிடம் இப்படிப் புதிராகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நினைக்கும் ஆள் நானில்லையென எண்ணுகிறேன்" என்றான்.

சற்று நேரம் பதிலில்லை. 2 நிமிடத்திற்கு மேல் கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பதில் வந்து சேர்ந்தது.

"இந்த சூழ்நிலையில் உங்களுக்கு நான் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாது. ஆனால் இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தீர்களானால், பிறகு தானாகவே உங்களுக்கு ஒரு நாள் புரிய வரும்" என்றான் சுயம்பு.

தன்னைப் பற்றி ஏதேதோ கூறும் சுயம்புவை நம்ப முடியாதவனாக இணைப்பைத் துண்டித்தான் கரன்.

அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தவனை ஆசுவாசப் படுத்துவதற்காக பாலா கணினியில் ஒரு பாடலைப் போடுவதற்கு வந்தான். அந்த நேரம் பார்த்து லதா மின்னரட்டைக்கு கரனுக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தாள். சற்று விளையாடிப் பார்க்க எண்ணிய பாலா, அவளிடம் பேச எண்ணினான்.

"வணக்கம் கரன், எப்படி இருக்க" என்றாள்.

"இப்பந்தானே கல்லூரியில இருந்து வந்தோம், அதுக்குள்ள எதுவும் ஆகலை, நல்லாதான் இருக்கேன்" என்றான் பாலா கரன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு.

"என்ன கிண்டலா? நான் பார்க்கதான் அமைதியான பொண்ணு, இங்க எங்க தோழிங்ககிட்ட கேட்டாதான் என்னைப் பற்றி உனக்குத் தெரியும்" என்றாள்.

"இப்படியெல்லாம் சொல்லாதே, நான் பயந்துடப் போறேன். உண்மையிலேயே இவ்வளவு அமைதியா இருக்க நீயே இப்படி வாய் பேசுவன்னா, உன்னோட தோழி சிநேகால்லாம் வாய்கிழிய பேசுவாளோ" என்றான்.

"நீ கூடதான் அமைதியா இருக்க, இப்போ என்னடான்ன இந்த அளவுக்குப் பேசுற? சிநேகாவைப் பற்றியெல்லாம் ஏன் இப்போ பேசுற?" என்றாள்.

"நான் எப்பவுமே இப்படித்தான். ஆனால் கல்லூரியில மட்டும்தான் அப்படி இருப்பேன், அதுவும் பெண்கள் இருந்தா. உண்மைதான் ஒரு பொண்ணைப் பற்றி இன்னொரு பொண்ணுகிட்டப் பேசினா கோபம்தான் வரும். உண்மையச் சொன்னா, எனக்கு உன்னை விட சிநேகாவைத்தான் பிடிச்சிருக்கு" என்றான் அவளைக் கிண்டிப் பார்க்க.

கொஞ்ச நேரம் பதிலில்லை. அமைதியாக இருந்தது. ஒருவேளை ஏதாவது தவறா பேசிவிட்டோமோ என்று பாலா எண்ணினான். "என்ன பதிலில்லை" என்று மேலும் கேட்டான்.

இதைப் பார்த்துவிட்ட கரன், சற்றே கோபப்பட்டு "ஏன்டா என் பேரைச் சொல்லிப் பேசுற, அவ எதாவது தப்பா நினைச்சுடப் போறா. தள்ளிப் போடா" என்று அவனை விலக்கிவிட்டு கணினி முன் அமர்ந்தான் கரன்.

"டேய் என்னையா திட்டுற. என்னைவிட அவதானே உனக்கு முக்கியம்? பொண்ணு வந்த உடனே என்னை ஓரந்தள்ளுறியா?" தான் செய்தது தவறு என்றாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல் சின்னக் கோபத்தோடு கேட்டான் பாலா.

"அப்படி இல்லடா, நமக்குள்ள எதுவும்னா சரி, நீ எப்படி என் பேரைச் சொல்லி அந்தப் பொண்ணுகிட்ட பேசலாம். இப்போ அந்தப் பொண்ணு என்னைத் தப்பா நினைச்சுருக்கும்ல" என்றான் அவனைச் சமாதானப் படுத்தும் நோக்கத்தோடு இளகிய குரலில்.

"இருக்கட்டும் கரா, என்ன இருந்தாலும் அவ பொண்ணு, நீ எதிர்பார்க்கிறது என்கிட்ட இல்ல" என்றான் கிண்டலாக. ஆனால் உள்ளூர ஒரு சின்னக் காயம், அந்தப் பெண்ணிற்காக தன்னைத் திட்டிவிட்டானே என்று.

"டேய், என்னடா இது. இதுக்கு ஏன் இப்படியெல்லாம் பேசுற. அவளுக்கும் நமக்கும் இடையில எந்த சம்பந்தமும் இல்ல. அவகிட்டையே சொல்லிடுறேன், இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு" என்று வேகமாகத் திரும்பினான் கணினியை நோக்கி.

அதற்குள் அங்கே ஒரு விசயம் தட்டச்சப் பட்டிருந்தது. அதை வாசித்தவன் சங்கடப் பட்டு விழித்தான். அதை வாசித்த பாலாவும் நெருக்கடியாக உணர்ந்தான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]

கடலும் 4453 ஆம் ஆண்டும் - 2

குறுந்தொடர் - பகுதி 2

“இவளுகளுக்கு வேற வேலக்கழுதையே இல்ல, எப்ப பார்த்தாலும் கெக்கபெக்கேன்னு சிரிச்சே பசங்கள சோலிய முடிக்குறது, அங்கே என்னடான்னா கடல்ல எதையோ பார்த்ததைப் பற்றி இவ்வளவு தீவிரமா பேசுறாங்க” என்று சலிப்புத் தட்டிப் பேசினான் பக்கத்திலிருந்த சுகுமார்.

“டேய் கரா உன்னைப் பத்தித்தான் பேசி சிரிக்குறாங்கன்னு நினைக்குறேன், நான் சொல்ல சொல்ல நீ கேட்க மாட்டேங்குற. லதா மேல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு” என்று பீடிகை போட்டுப் பேசினான் பாலா.

“சும்மா இருடா, லதா பக்கத்துப் பேட்சுப் பொண்ணு அவ்வளவுதான், இதுவரைக்கும் நான் அவகிட்ட சரியாப் பேசினது கூட இல்ல. அந்தப் பொண்ணு நல்லப் பொண்ணுடா, சுத்தி உக்காந்துருக்கதுதான் வெவகாரமானதுக” என்றான் கரன்.

“நடத்து கரா நடத்து. நான் சொல்றத நம்பாம அந்தப் புள்ளைக்கா பரிஞ்சுப் பேசுற” என்று எகத்தாளமா சிரித்துக் கொண்டான் பாலா.

அங்கே சற்று நேரம் அடங்கியிருந்த சிரிப்பொலி மீண்டும் எழுந்தது. தூண்டில் புழு போல வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் லதா.

“ஏய் உன் ஆளு உன்னைப் பார்க்கவே மாட்டேங்குறான், பக்கத்துல உக்கார்ந்துருக்க பாலாதான் பார்க்குறான், இது என்ன முக்கோணக் காதலாடி?” என்று வழக்கமான பெண்கள் குசும்போடு கேட்டாள் லதாவின் தோழி சிநேகா. கூட்டமே மறுபடி ஒரு முறை கிளுக்கென சிரித்தது.

“அய்யோ கடவுளே, கொஞ்ச நேரமாவது சும்மா இருங்கடி” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லதா. உள்ளுக்குள்ளே இவர்கள் இப்படிப் பேசுவது அவளுக்கு சுகமாய் இருந்தது.

வகுப்பில் நடக்கும் ஆராவாரத்தின் ஒலி கேட்டு துறைத் தலைவர் அவரது அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்ததும் வாத்தியார் சார்லஸ் பதபதைத்தார். “ஏய் பொண்ணுங்களா கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? ம். ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறுவிட்டு பாடம் எடுக்க முன்னாடி சென்றார் சார்லஸ்.

உணவு இடைவேளையில் எப்பொழுதுமே பாலா, கரன், சுகுமார், சாம் எல்லோரும் ஒரே உணவு விடுதியில்தான் சாப்பிடுவார்கள். அன்று சாம் ஒரு ஆச்சரியப் பார்வையோடே உலா வந்தான்.

“என்ன சாம், காலையில இருந்து உன்னைச் சுற்றி ஒரேக் கூட்டம். கலக்குற, அப்படி என்னத்த உங்கப்பா கடல்ல பார்த்தாரு, எங்ககிட்டையும் சொல்லேன்” என்றான் வழக்கமானக் குசும்போடு பாலா.

சற்று அலட்சியட்சத்தோடும், பெருமிதத்தோடும் பார்த்தான் சாம். “டேய் சொன்னா நம்ப மாட்டீங்க” என்று ஆரம்பித்த சாமை மடக்கிப் பேசினான் சுகுமார்.

“நீ சொன்னதை இதுவரைக்கும் நம்புனா மாதிரி பேசுற? வழக்கம்போல நம்ப மாட்டோம். நடந்ததை மட்டும் சொல்லு, கப்ஸா விடாம” என்றவுடன் அனைவரும் சாமைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தார்கள்.

“டேய், இந்த நையாண்டிதானே வேண்டாங்குறது. சொல்றத கேளுங்கடா, எங்க அப்பா நேத்து கடல்ல இருந்து திரும்பி வரும்போது வலையில ஒன்னு சிக்கியிருந்துருக்கு. இழுக்க வரலியேன்னு உள்ள போயி பார்க்கலாம்னு மூனு பேரு உள்ள குதிச்சுருக்காங்க. அதுல ஒரு மனுசன் மாதிரியே உடம்பு எல்லாம் இருக்க ஒன்னு தண்ணிக்குள்ள இருந்துருக்கு. இவங்களைப் பார்த்ததும் வேகமா போயிருக்கு. அது கடல் கன்னி மாதிரி ஏதாவதா இருக்கும்னு எங்கப்பா சொன்னாருடா” என்றான் ஆர்வமாக.

“உங்க அப்பா சரக்குப் போட்டா, நம்ம டீக்கடையில இருக்க மாஸ்டரைப் பார்த்து சிவாஜி மாதிரி இருக்கேம்பாரு, நேத்தும் என்ன, சரக்குதானா? கடலாம், கடல் கன்னியாம்” என்றான் பாலா.

“டேய் சும்மா இருடா பாலா. நீ கோச்சுக்காதடா சாம், இவன் எப்பவுமே இப்படித்தான் உண்மையை பட்டுபட்டுனு பேசிடுவான்” என்று கேலியாகப் பேசினான் கரன்.

உங்க கூடல்லாம் சகவாசம் வச்சுகிட்டதுதாண்டா தப்புன்னு புலம்பினான் சாம்.

மாலை 5 மணிக்கு வகுப்பு முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். பாலாவும் கரனும் கொஞ்சம் பொறுமையாக இடத்திலேயே அமர்ந்திருந்தனர். லதாவும், அவளது தோழி சிநேகாவும் இறுதியாக கிளம்பினார்கள். கரனைக் கடக்கும்போது சிநேகா செய்த கிண்டலில், “ஏய் சும்மா இருடி, எப்ப சொல்லனும்னு எனக்குத் தெரியும். வாடிப் போகலாம்” என்று வெட்கத்தில் சிவந்து கொண்டே லதா கரனையும், பாலாவையும் கடந்து சென்றாள்.

“டேய், இது அதுதாண்டா. கலக்குடா கரா. பொண்ணைப் பத்திப் பேசினாலே எரிஞ்சு விழற உனக்குப் போயி பொண்ணு மாட்டுது பாரு. எனக்கும் எதையாவது ஏற்பாடு செஞ்சுக் கொடேன்” என்று வழக்கமானக் கிண்டலோடு கரனைக் கேலி செய்தான் பாலா.

“அப்பவே போயிருக்கலாம், நீ சொன்னேன்னு உட்கார்ந்தேன் பாரு என்னை அடிச்சுக்கனும்” என்று பதில் சொல்லிகொண்டே இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர். வீட்டிற்குச் சென்று கணினியைப் பார்த்தான் கரன்.

“உங்க கிட்ட நேரடியாப் பேசனும், கடல்ல நடந்த விசயம் இன்னைக்கு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைப் பற்றித்தான் பேசனும்” என்று கூறி நின்றது சுயம்புவின் மின்னரட்டை. கரன் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]

கடலும் 4453 ஆம் ஆண்டும்

குறுந்தொடர் - பகுதி 1

"காலையில 8 மணி ஆயிடுச்சு, சீக்கிரம் எந்திருச்சு கிளம்புடா, நீ கிளம்பிட்டு என்னையும் எழுப்பி விடு" என்று படுக்கையில் புரண்டபடியே முணங்கினான் பாலா.

"ஏன்டா காலையிலேயே உயிரை வாங்குற, என்னை எழுப்புறதுக்கு நீ போய் கிளம்பிட்டு பிறகு என்னை எழுப்பியிருக்கலாம்ல" என்றபடியே திரும்பிக் குப்புறப் படுத்துக் கொண்டு பேசினான் கரன்.

"அதான் இப்போ எந்திருச்சுட்டல்ல, போய் கிளம்புடா" என்று கூறிவிட்டு திரும்பவும் தனது தூக்கத்தைத் தொடர்ந்தான் பாலா.

இவன் எப்பவுமே இப்படித்தான் சோம்பேறி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், இவன் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியவில்லை என்ற எண்ணத்தோடு துண்டோடு குளியலறைக்குக் கிளம்பிவிட்டான்.

பாலாவும், கரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளில் இருந்தே இரண்டு வருடமாக இருவரும் இணை பிரியாத பறவைகள். பல விசயத்திற்கும் ஒத்துப் போகாத எண்ணம் இருந்தாலும் இருவரையும் சேர்த்து வைத்திருப்பது என்னவோ விட்டுக் கொடுத்தலும், அன்பும்தான். மிகவும் சிறிய அளவிலான அந்த அறையில் ஒரே மெத்தைதான். மெத்தைக்கு அருகே இருந்த சிறிய சன்னலின் வழியே காலைப் பொழுதின் மஞ்சள் வெயில் உள்ளே வந்தது. எப்பொழுதுமே சண்டையிடுவது போல காட்சியளிக்கும் இருவரின் நட்பே எந்தச் சண்டைக்குப் பிறகும் இதுவரை பேசாமல் இருந்ததில்லை.

தன்னை மட்டும் எழுப்பிவிட்டு இவன் மட்டும் ஏன் இன்னும் தூங்கவேண்டுமென்று மூலையில் இருந்த கணினியில் சத்தமாகப் பாட்டை ஓடவிட்டுவிட்டு குளியலறைக்குச் சென்றான் கரன்.

எழுந்து அதை நிறுத்திவிட்டுத் தூங்குவதற்கு சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு அப்படியே கண்மூடிப் படுத்துக் கொண்டான், சின்ன ஊடலோடு. பாலாவுக்கு எப்பொழுதுமே கரன் இதுபோல செய்யும் சேட்டைகள் பிடித்திருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்வதில்லை.

குளியலறை விட்டு வெளியே வந்த கரன், பாலாவைக் கிளம்பச் சொன்னான். ம்ஹீம் என்று உதட்டை ஒரு ஓரமாக வைத்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து போனான் பாலா.

"போடா டேய், போடா. போய் கிளம்புற வேலையைப் பாரு. எங்களை மட்டும் எழுப்பி விட்டல்ல" என்று சிரித்துக் கொண்டே பேசிவிட்டுத் தலைவாரிக் கொண்டிருந்தான் கரன்.
தன்னுடைய கணினியில் மின்னரட்டைப் பகுதிக்குச் சென்றான். புதிதாய் அவனுக்கு ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. அந்தப் பெயரில் இதுவரை அவன் யாரையும் சந்தித்ததில்லை. சரி தன்னைப் பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கக் கூடுமென விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டான்.

"காலை வணக்க்ம்" என்று அவன் ஏற்றுக் கொண்டதும் வந்தது.

நீங்க யாரு, இது வரை உங்களை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் என்றான்.

"என் பெயர் சுயம்பு, என்னை உங்களுக்கு இன்னமும் தெரியாது, ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்களைச் சந்திக்கும் இந்த நாளுக்காக நான் வெகுநாட்களாக காத்திருக்கிறேன்" என்றது.

சற்றே ஆச்சரியமடைந்த கரன், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, "ஆச்சரியமா இருக்கு, என்னைப் பார்க்க பல நாட்களாக் காத்திருக்கீங்களா?" என்றான்.

கிளம்பி விட்டு வெளியே வந்த பாலா "யாரு கூடடா சேட் பன்ற? ஏதாவது பொண்ணாடா? அப்படியே நீ பேசி என்னத்தைக் கிழிக்க போற, என்னிடமாவது கொடு" என்றான். கரனுக்கு அவ்வளவாக பெண்களுடன் பழக்கமில்லை. பாலா வாய்ப்பேச்சில் பேசினாலும், செயலில் பெண்களிடம் ஒன்றுமில்லை.

"சரி, எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது, நாம் பிறகு சந்திக்கலாம்" என்று விடைபெற்றுக் கொண்டான் கரன் சுயம்புவிடமிருந்து. பாலாவிடம் நடந்ததைச் சொன்னான்.

9 மணிக்கு ஆரம்பிக்கும் கல்லூரிக்குச் சரியாக 8.45 க்கு இருவரும் கிளம்பினர்.

"இன்னைக்கும் காலையில சாப்பாடு கிடையாதா?" என்று சலித்துக் கொண்டான் பாலா.

வகுப்புக்குச் சென்றதும், முதல் பாடவேளை வாத்தியார் உட்பட சில மாணவர்களும் சேர்ந்து ஆவலோடு சாம் என்ற பையனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவனிடம் கரன் அங்கு என்ன நடக்கிறதென்றான்.

"ஏதோ அவங்க அப்பா கடல்ல பார்த்தாராம் ,அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்" என்று அலட்சியத்தோடு சொன்னான். என்னவா இருக்கும், சரி அப்புறமா கேட்டுக்கலாமென்று கரனும், பாலாவும் அமர்ந்தனர்.

சற்றுத் தள்ளி பெண்கள் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் சலசலப்பில் லதா மட்டும் வெட்கித் தலை குணிந்தாள்.

அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து>>

இனம் புரியாத வலிகள்

"ஏண்டி பாமா, இன்னைக்கு நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா? நீயே கூட்டிகிட்டுப் போய்ட்டு வரவேண்டியதானே?" என்று குளிக்கக் கிளம்பியவன் நின்று சமையலறையை நோக்கி ஒரு முறை சத்தமிட்டான்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் கண்டிப்பா வரணுமாம். அப்புறம் அங்கே ஏதாவது கேள்வி கேட்டாங்கன்னா உங்க சம்பளம், வேலை பற்றியெல்லாம், நீங்கதான் பதில் சொல்லணும்" என்று வாணலியில் தாளித்துக் கொண்டே கச்சிதமாய்ப் பேசி முடித்தாள்.

இப்படி ஒரு பனிரெண்டாம் வகுப்பை என் தலையில் கட்டி வச்சாங்களேன்னு புலம்பிகிட்டே குளிக்கக் கிளம்பினான்.

இருவருக்கும் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. பெற்றோரின் விருப்பத்திற்காகவும், கொஞ்சம் கட்டாயத்திற்காகவும் பாமாவைக் கட்டிக் கொண்டான். பாமாவும் அழகுக்கு சளைத்தவள் அல்ல, படிப்பு மட்டும்தான் குறைவு, ஆனால் சமையல், கவனிப்பு எல்லாவற்றிலும் கெட்டிக் காரி. இருவரும் மணம் முடித்துவிட்டுச் சென்னை கிளம்பியபோது ஊரே வந்து வாழ்த்தி வழியனுப்பியது. ஆனால் இப்படி படிப்பும் தன்னை விட நாகரீகமும் குறைந்த மனைவியை எப்படித் தனது நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவது என்று வெட்கிக் கொண்டு தனது திருமணத்திற்கும், திருமணத்திற்குப் பிறகும் நண்பர்கள் யாரையும் அழைத்ததில்லை. வெளியே சில இடத்துக்குச் எப்பொழுதாவது இவளைக் கூட்டிச் சென்றாலும் அதிகம் பேசிக் கொள்ளாமல் சீக்கிரம் போன வேலையை முடித்துவிட்டுத் திரும்பிவிடுவான். வீட்டு அருகிலேயே பாலர் படிப்பு முடித்த வசந்தை இன்று ஒன்றாம் வகுப்பில் சேர்த்து விடக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

குளித்து முடித்து வெளியே வந்தவன், தலையைத் துவட்டிக் கொண்டே பாமா, பாமா என்று அழைத்தான், பதிலே இல்லை. "எங்க போய்த் தொலஞ்சா? ஒரு சட்டை கூட எடுத்து வைக்காம?" என்று முணங்கிக் கொண்டே இருந்தான்.

"டேய்ச் செல்லம், இன்னைக்கு நீ பள்ளிக் கூடம் போகப் போற, உன்னை என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன்ல அம்மா, அதெல்லாம் சரியாச் சொல்லிடனும். சரியா? இப்போ நான் கேள்வி கேட்குறேன், பதில் சொல்லு பார்ப்போம்"

உன் பேர் என்ன?

"எனது பெயர் வசந்த், ஆங்கிலத்தில் மை நேம் ஈஸ் வசந்த்"

உங்க அப்பா அம்மா பேரு என்ன?

"அப்பாவின் பெயர் குமார், அம்மாவின் பெயர் பாமா, ஆங்கிலத்தில் மை ஃபாதர்'ஸ் நேம் ஈஸ் குமார், மை மதர்'ஸ் நேம் ஈஸ் பாமா"

வீட்டு தொலை பேசி எண்?

"2234 6768"

சரி நேரம் ஆயிடுச்சு, மத்ததெல்லாம் ஞாபகம் இருக்குல்ல, அம்மா இங்க நிக்குறேன், நீ உன் ஷூவைப் அந்த மாமா கிட்ட கொடுத்து பளபளப்பாக்கிட்டு வா.

சரிம்மா என்றவன் ஓடிச் சென்று செருப்புத் தொழிலாளர் சாமியுடன் கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசிவிட்டு வேலையையும் முடித்துக் கிளம்பினான்.

"என் செல்லப் பையா, உனக்கு ஸ்கூல்ல எடம் கெடைக்கும்பா, ராசா, போயிட்டு வாபா, இன்னைக்கு உனக்கு இலவசம்பா பாலீஷ் போட்டது" என்று சாமி பாசமோடு சொன்னார்.

"இந்தாப்பா வசந்த், இதான் நீ இன்னைக்கு போட்டுப் போகப் போற துணி, இது உன் அப்பாவோடது, வாங்கிக்கோ. உனக்கு மெய்யாலுமே சீட்டு கெடிக்கும்பா, அசத்து கண்ணா" என்று பாசத்தோடு வாழ்த்து கூறினார் இஸ்திரிக் காரர் அன்பு.

வேலையெல்லாம் முடித்துவிட்டு பாமாவும், வசந்தும் வீட்டு மாடிக்குச் சென்றனர். இதையெல்லாம் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.

"ஏண்டி உன் புத்தி எங்க போகும்? போயும் போயும் அந்த இஸ்திரிக் கடைக்காரன், செருப்புத் தைக்கிறவன் கிட்டல்லாம் ஏண்டி பேசுற, அதுவும் வசந்தை வேறப் பேசவிடுற. அவங்க கிட்டல்லாம் தூர நின்னே பழகணும். புரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியாது, தெண்டக் கருமம்" என்று வழக்கம் போல திட்டிவிட்டு தன்னுடைய சட்டைத் துணியை வாங்கிக் கொண்டு உடை மாற்றப் போனான் குமார்.

மூவரும் பள்ளிக்கூடத்திற்குப் போனார்கள். தலைமை ஆசிரியர் ஒவ்வொரு மாணாக்கராய் அழைத்து பேசிப் பார்த்து பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார். வசந்த்துடைய நேரம் வரவும் மூவரும் உள்ளே சென்றனர். சில பல கேள்விகள் பெற்றோரிடம் கேட்டு முடித்தார் தலைமை ஆசிரியர். மேலும் வசந்திற்கு பாமா சொல்லிக் கொடுத்த கேள்விகளையும் கேட்டார், அதற்கு கச்சிதமாகப் பதில் சொன்னான் வசந்த்.

"பையனோட அம்மா கம்மியா படிச்சுருக்காங்களே, குழந்தைக்கு வீட்டுப் பாடம் எப்படிச் சொல்லிக் கொடுப்பாங்கன்னு யோசித்தேன். ஆனால் அழகா சொல்லிக் கொடுத்துருக்காங்க. பாராட்டுக்கள். மேலும் உங்க பையனை இங்கே சேர்ப்பதற்குக் காரணமே அவனுடைய ஒழுங்குதான். அழகா இஸ்திரி செஞ்ச சட்டை, கால்ச்சட்டை, முகம் தெரியுற அளவுக்கு பளபளப்பா ஷூ. நீங்களும் நல்ல ஒழுங்கான ஆடையோடு வந்திருப்பதே, நல்ல குடும்பம் என்பதை எனக்குப் புரிய வைக்கிறது. இதுக்காகவே உங்கப் பையனைச் சேர்த்துக்கிறேன்" என்று தெளிவாகப் பேசி முடித்தார் தலைமை ஆசிரியர்.

"இந்த சட்டை, ஷூ, நீ சொல்லிக் கொடுத்த கேள்வி பதில் இதனாலதான் இடம் கிடைச்சுருக்கு, அப்புறம் ஏம்மா அப்பா உன்னையும், சாமி, அன்பு மாமாவையும் திட்டிகிட்டே இருக்காரு" என்று வெகுளித் தனமா கேட்டு முடித்தான் வசந்த்.

வெட்கித் தலை குனிந்தான் குமார்.

எல்லாம் கடவுள் செயல்

"இங்கே சந்தானம் வீடுன்னா எதுப்பா?" என்று சிதம்பரத்தின் அக்ரகாரத் தெருவின் முதல் வீட்டில் முதுகைச் சொரிந்து கொண்டிருந்த முதியவரிடம் கேட்டார் கூரியர் காரர்.

"எது சகுனம் சந்தானம் வீடா, இந்தத் தெருமுனையில் இருக்கிற அந்த நீல நிற வீடுதான்" என்று ஒரு ஏளனப் பார்வையோடு சலிப்போடு பதில் சொன்னார் முதியவர்.

தெரு முழுக்க சின்னச் சின்னக் கோலங்கள் இருந்த வீடுகளிடையே சற்று வித்தியாசமாக மார்கழி மாதக் கோலம்போல் பெரியதாய் இடப் பட்டிருந்த அந்த நீல நிற வீட்டு வாசலை அடைந்தார். "சந்தானம் இருக்காரா?"

வீட்டின் உள்புறம் அமர்ந்திருந்த 70 வயது பாட்டி எழுந்து வந்து "யாருடா நீ அம்பி, என் புள்ளைய பேர் சொல்லிக் கூபிடறவன். இந்தத் தெருவிலேயே என்னைத் தவிர என் புள்ளையாண்டான யாரும் பேர் சொல்லிக் கூப்பிடறதில்லைடா." என்று நீட்டி முழக்கிக் கொண்டிருந்த பாட்டியை சற்றே ஓரம் தள்ளிவிட்டு அழகிய வளையல்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பளிங்குக் கரங்களை நீட்டினாள் செல்லம்மா.

"கூரியர் தானே, என்னிடம் கொடுங்கள், அவர் என் தோப்பனார்தான்".

இந்தப் பேரழகியைக் கட்டிக்கப் போறவன் எந்தப் புண்ணியவானோன்னு மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு. "இந்தாம்மா, உங்க அப்பா கிட்ட கொடுத்துடு. இதுல ஒரு கையெழுத்துப் போடு" என்றார். போகின்ற தருவாயில் அந்த தேவதை இருக்கும் வீட்டை ஒரு முறை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு நடையைக் கட்டினார்.

"பாழாப் போறவன் கண்ணுல கொள்ளியைத்தான் வைக்கணும். எப்படி வெறிச்சுப் பார்த்துட்டுப் போறான் பாரு. அவன் நின்ன இடத்தைக் ஜலம் ஊத்தி அலம்பிதான் விடணும். இதுக்குத்தான் வயசுக்கு வந்தப் பொண்ணை சீக்கிரம் தாரவாத்துக் கொடுத்துடுன்னா கேக்குறானா சந்தானம்" என்று புலம்பிக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தாள் பாட்டி.

கூரியரில் வந்திருந்த புகைப் படத்தையும், தகவலையும் பார்த்துவிட்டு, தன் மனைவியைக் கூப்பிட்டார் சந்தானம். "ஏண்டி மைதிலி, நம்ம பொண்ணுக்கு வரன் தேடி வந்திருக்குடி. பையன் 3 வருஷமா ஆஸ்திரேலியாவில் இருக்கானாம். விலாசமும், புகைப் படமும் இதுல இருக்குப் பாருடி. ஆனால் அவா இங்க வரலையாம். அவா வீட்டுக்கு நாம போகணுமாம். ஆஸ்திரேலியாவில் இருக்கப் பையனை அவங்க வீட்டுல இருந்தே கணினியில பார்க்கலாமாம். என்ன இழவோ, பொண்ணு வீட்டுக் காராவை, மாப்பிள்ளை வீட்டுக்குக் கூப்பிடற சம்பிரதாயம்?" என்று சத்தமாகப் பேசிவிட்டு கோவிலுக்குப் புறப்பட்டார் சந்தானம்.

செல்லம்மா படபடத்தாள், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப்போட்டக் கல்யாணம் நடந்திடுமா என்று யோசித்தாள். எதிர்வீட்டில் இருக்கும் சுப்பிரமணியைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு அவளுக்கு ஆசை. ஆனால் சுப்பிரமணிக்கு சுத்தமா கடவுள் நம்பிக்கை இல்லை. மீசையும், தாடியுமா கடவுளைக் கும்பிடாமல் அவன் அலையுறது சந்தானத்திற்கு சுத்தமா பிடிக்காது. "கடவுளே எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நீதான் நிறுத்தனும். நான் இன்னும் என் காதலை சுப்பிரமணியிடம் சொல்லவே இல்லை. ஆனால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். இதுக்கு நீதான் துணை நிற்கணும்" என்று வேண்டிக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டுக்கு மறுநாள் இவர்கள் கிளம்புவது சுப்பிரமணிக்குத் தெரிய வந்தது.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பின சந்தானம், மைதிலி, இன்னும் சில சொந்தக் காரர்கள் வாசலுக்கு வரவும் எதிரே தனியாய் வந்த சுப்பிரமணியைப் பார்த்ததும் விருட்டென வீட்டுக்குள் போனார் சந்தானம்.

"என்ன இழவோ, காலையிலேயே ஒத்தப் பிராமணனா எதிர்க்க வர்றான், அதுவும் இந்த சமயத்துல. போற காரியம் விளங்குமோ? வேற எவனா வந்தாலும் ஒரு சொம்பு ஜலத்தைக் குடிச்சுட்டுப் போயிடுவேன். இந்த நாத்திகனா வரணும். அரை மணி நேரம் கழிச்சுப் போலாம்டி எல்லோரும் ஆத்துக்குள்ள வாங்கோ" என்று சத்தம்போட்டு பேசிவிட்டு உள்ளே அமர்ந்துகொண்டார் சந்தானம்.

ஒரு கால் மணி நேரம் கழித்து வந்த செல்லம்மாவின் பெரியப்பா மகன் சிவா, "சித்தப்பா, நீங்க பார்த்திருக்க பையன் அந்த அளவுக்கு நல்லவன் இல்லை. அவனுக்குப் பொம்மனாட்டிகள் பழக்கம் கூட இருக்காம், அவன் படிச்ச கல்லூரியில படிச்ச என் நண்பனிடம் விசாரிச்சேன்" என்று ஒரு குண்டைப் போட்டான்.

"என்னடா சொல்ற, கொஞ்சம் தாமதமா வந்திருந்தா அவா ஆத்துக்குப் போயிருப்போமேடா கடங்காரா. நல்ல வேளை இப்போவாவது வந்தே. எதிர்க்க வந்த சுப்பிரமணிக்கும், என் கடவுள் சுப்பிரமணிக்கும்தான் நன்றி சொல்லனும்" என்று சொல்லி விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டார் சந்தானம்.

"டேய் சுப்பிரமணி, நீ சொன்னதை நான் அங்கே சித்தப்பாகிட்ட சொல்லிட்டேண்டா. உன்னால இந்த நிச்சயம் நின்னுடுச்சு. உனக்கு நல்லா தெரியும்ல, அந்தப் பையன் அப்படித்தானான்னு" என்று கேட்டான் சிவா.

"அவன் என் கல்லூரியில படிச்சவந்தான். எனக்கு நல்லாவே தெரியும். நீ வர்றதுக்கு நேரம் ஆச்சுன்னுதான் அவா எதிர்க்க வந்து கொஞ்சம் நேரம் கடத்தினேன்" என்றான் சுப்பிரமணி.

"சுப்பிரமணியை எதிர்க்க வரவழைச்சு அவகாசம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி கடவுளே. எப்படியாவது இனியும் காலம் கடத்தாம ஆத்துல சொல்லிடணும். எல்லாம் கடவுள் செயல்" என்று மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டாள் செல்லம்மா.

எலும்புகளின் தேடல்கள் - அறிவியல் புனைவுக் கதை

"சங்கர், நீங்களும் உங்க மூன்று பேர் கொண்ட குழுவும் இன்னைக்கு இரவு விமானத்தில் ரஷ்யா போகனும்" என்றார் இந்திய உளவுத் துறை அதிகாரியில் ஒரு முக்கியப் பிரமுகரும் தமிழருமான மாறன்.

தானும் தனது குழுவும் ஏற்கனவே சேமித்த சில தகவல்களின் படி ஒரு முடிச்சு கிடைத்திருக்கிறது. அதை அங்கே சென்று உறுதிப் படுத்தி விட்டு வருகிறோம் என்று சங்கர் வாக்களித்தார்.

"இது உலகளாவியப் பிரச்சினை, எங்கே எப்போ அடுத்து அந்தப் பிரச்சினை வெடிக்கும்னு தெரியலை. ஏற்கனவே நாம நிறைய இழந்துட்டோம். நியாபகம் இருக்கட்டும் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப் பட்டிருப்பவர் உலக பணக்காரர்களின் பட்டியலின் இருப்பவர்" என்று அறிவுரை கூறினார்.

சரியாக இன்றிலிருந்து ஒரு மாதம் முன்பு குமரி மாவட்டத்தில் சரமாரியாக மக்கள் நோயுற்று இறந்திருக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களின் உடலிலுள்ள இரத்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கியதே. மேலும் குமரிக் கடலில் பல இலட்சம் மீன்களும் இறந்தது. இதை போல் தென் ஆப்ரிக்காவிலும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. இது போன்று இதுவரை உலகம் முழுதும் 27 இடத்தில் நடந்துள்ளது. இது இன்னும் எங்கு தொடரலாம் என்ற ஆய்வறிக்கை ஒன்றைப் பற்றிப் பேசுவதற்காகவே சங்கர் ரஷ்யாவிற்கு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு சங்கரும் அவரது குழுவும் ஒரு வாரத்திற்கு முன்பு பயணிக்க ஆரம்பித்த போது, திடீரென்று ஒரு லாரி பலமாக மோதி இருவர் உயிரழந்தனர். சங்கரும் அவருடன் உள்ள மூவரும் உயிர் தப்பினர். ஒரு வாரம் கழித்து இன்று மீண்டும் செல்கிறார்.

"சார், இந்தக் குழுவுல நாம இப்போ நாலு பேருதான் இருக்கோம். மீதி இரண்டு பேர் இறந்ததற்கு ஒரு வேளை அந்த லாசன் தான் காரணமாக இருக்குமா?" என்றார் முகில்.

"இது பற்றி சி.பி.ஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைக்கிறேன்" என்று சங்கர் கூறும் போது விமானம் கிளம்பியிருந்தது, நால்வரும் சிறு கலக்கத்தினுடனே சென்றனர்.

தான் சேகரித்த விசயங்களை உலகின் பல இடங்களிலிருந்து கூடிய அதிகாரிகளிடமும், லாசன் தற்பொழுது வசிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளுக்கும் சொல்ல ஆரம்பித்தார் சங்கர்.

"இது வரைக்கும் திடீர் மரணங்கள் இப்படி நடந்த எல்லா இடத்திலும், ஏதோ தொற்று நோய்தான் காரணம் என்று பலரும் அந்த கிருமியைத் தேடி அலைகின்றனர். ஆனால் இது எந்தக் கிருமியாலும் வந்ததல்ல. இது லாசன் என்பவரின் ஆராய்ச்சியால் வந்த விணை. அவர் நடத்தும் மியூஸியம் ஒன்றும் அவரது தொழிலில் முக்கியமான ஒன்று. அது சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்து இருக்கிறது. இதற்குக் காரணம் லாசன் நிறுவணம் கண்டு பிடித்த டினோசர்களுக்கும் முந்தைய உயிரனங்களின் எலும்புகளும், ஆதி மனிதனின் எலும்புகளும், இன்னும் பலப்பல.... இவையெல்லாம் நடந்து முடிந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர் சில இடங்களில் எலும்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் குமரியை ஒட்டிய கடல் பகுதியிலும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று சில அரிய உயிரினங்களின் எலும்புகளைக் கைப்பற்றி அங்கே வைத்திருக்கிறார்."

இடையே குறுக்கிட்ட இங்கிலாந்திலிருந்து வந்த அதிகாரி, அவர் எலும்புகள் எடுக்காத இடத்திலும் பல பேர் இறந்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு சங்கர், லாசன் எலும்புகள் எடுத்த இடங்களின் பட்டியலும், உலகில் இது வரை இது போன்ற மரணம் நிகழ்ந்த 27 இடங்களின் பட்டியலையும் அளித்தார். அதில் அவர் 28 வதாக ஒரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

"இந்த கேள்விக்கான விடை அவர் சமீபத்தில் தனக்கான ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதுதான். அவர் அந்த செயற்கைக்கோளை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னால் செலுத்திக் கொண்டார். அந்த செயற்கைக் கோள் மூலம் எக்ஸ்ரே போன்ற ஏதோ ஒரு புதிய கதிர்வீச்சு மூலம் அவர் உலகின் பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளார். இவற்றில் மக்கள் வாழும் பகுதியும் அடங்கும். தரையைத் துளைத்துச் சென்று அங்கே எலும்புகள் எங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அவர் கண்டு பிடித்திருக்க வேண்டும். அந்தக் கதிர்வீச்சின் காரணம்தான் பொறுமையாகச் செயல் பட்டு அந்த ஊர் மக்களை சில ஆண்டுகள் கழித்து கொன்றிருக்க வேண்டும். என்னுடைய கணக்கு சரியென்றால் அவர் 11 வதாக எலும்பு எடுத்த இடம் ரஷ்யாவில் உள்ள பனி அதிகமும், மக்கள் குறைவாகவும் வசிக்கும் ஒரு பகுதியின் இந்தப் பட்டியலில் இறுதியாக இருக்கும் இடம்தான். அடுத்த மரணம் அங்கேதான் நிகழும், அது கணக்குப் படி ஒரு மாதத்திற்குள் நிகழும்" என்று சொல்லி முடித்தார் சங்கர்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகளில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அது ரஷ்யாவைச் சேர்ந்த அந்த கிரமாத்திலுள்ள 700 பேர் இதே போன்று திடீரென மரணித்திருக்கின்றனர் என்றது.

இன்னும் எத்தனை நாள் இப்படி?

கற்பனைகளிலேயே ஒருமாத காலமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த முத்தங்களை உண்மையாக்கும் தினம் இன்று என மீண்டும் கற்பனையோடே, ஊருக்குச் சென்று திரும்பியக் காதலி அணுவைப் பார்க்க ஆவலோடு சென்று கொண்டிருந்தான் ஞானி. வழக்கமாக அணு நிற்கும் அந்த மகளிர் விடுதியின் தெருமுனையில் ஞானி தான் புதிதாக வாங்கிய சொகுசு மகிழ்வுந்தை நிறுத்தினான்.

நொடிகள், நிமிடங்களாகியது, நிமிடங்கள் மணியானது, ஆனால் கற்பனையிலேயே இருக்கும் ஞானிக்கு அந்த மணித்துளிகள் பெரிதாகப் படவில்லை. அவளைப் பார்க்கும் ஆவலில் ஒரு மணி நேரம் முன்பே வந்து நின்றிருந்தான். சில முறை அணுவை அலைபேசியில் பிடிக்க முயன்றும் முடியாமல் போயிற்று. அவளது வீட்டில் இருக்கும் பொழுது அலைபேசியின் தொடர்பு இருக்காது. தீடிரென்று பனியில் மயங்கியிருந்த புற்களெல்லாம் உணர்வு பெற்றது. தூரத்தில் ஒரு சுடிதார் அணிந்து அந்த வானவில் நடந்து வந்து கொண்டிருந்தது. அவள் அணுதான்.

"ஹேய், எவ்வளவு நேரமா இங்க நிற்குறேன் தெரியுமா? என்னை ஒரு மாதிரி பார்த்துட்டுப் போராங்கப்பா எல்லோரும்" என்று சொல்லிக் கொண்டே அவள் கரத்தைப் பிடித்தான்.

"எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்ட, சீக்கிரமா வந்து இங்க நிக்காதன்னு. சரி அது போகட்டும் இதுதான் நீ புதிதாய் வாங்கியதா, நல்லா இருக்குடா" என்று அணு கூறிமுடித்துக் கொண்டே அவனை எப்பொழுதுமே அசத்திவிடும் அந்த கண்ணக் குழியை ஒரு புறமாகக் காட்டினாள்.

அவன் வந்து காத்திருந்தாலும் பரவாயில்லை, அவள் சீக்கிரம் வந்து நின்று அவளை அந்தத் தெருமுனையில் எல்லோரும் ஏதோ போல் பார்த்துவிட்டுப் போகவேண்டாமென்றுதான் எப்பொழுதுமே சீக்கிரம் வந்துவிடுவான் ஞானி. "சரி உள்ளே ஏறு, இன்னைக்குப் பூராவும் நீ என்னுடந்தான் இருக்கனும். நிறைய இடம் சுற்றலாம் வா" என்றான் ஞானி.

நகரத்தின் நெரிசல் அதிகம் இல்லாத அந்த இடத்தில் வேகமாகச் சென்றவனை திடீரென்று ஒரு ஆள் தடுத்து நிறுத்தினார். அங்கே கொஞ்சம் கும்பல் அதிகமாக இருந்தது. படபடப்புடன் பேசிய அந்த நபர் "இங்கே ஒரு ஆள் அடிபட்டுக் கிடக்கிறாரு, அவரை ஆஸ்பத்திரிக்கு இட்னு போணும்பா" என்று பேசி முடித்தார். எதுவும் யோசிக்காமால் "நான் அவசரமா போறேம்பா, பின்னாடி வர்ற வண்டியில கேளு" என்று கூறிவிட்டு வாகனத்தை எடுத்து விட்டான்.

நடந்ததைப் பார்த்த அணுவிற்கு கோபம் வந்துவிட்டது. "எல்லார மாதிரியும்தான் நீயும் இருக்க, பாவம் ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கு, நீ பாட்டுக்கு இப்படிப் போற" என்று கோபித்துக் கொண்டாள்.

இன்னைக்கு காலையிலேயே கவலைன்னு தினசரிப் பலன்ல போட்டிருந்தது நடக்காதுன்னு நினைச்சுட்டு வந்த ஞானிக்கு அது இன்று இவளால் நடந்துவிடும் என்று புரிந்தது. "ஹேய், உன் கூடப் பேசியே ஒரு மாசம் ஆகுதுப்பா. நான் இன்னைக்கு நிறைய கனவுகளோட வந்தேன், அதுவும் இது இப்போ வாங்கின வண்டி, இதுல போயி இரத்தக் கறையெல்லாம் படனுமா? நான் இன்னைக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாதுன்னு நினைச்சு வந்தா, இப்படியா எனக்கு நடக்கனும்" என்று அலட்டிக் கொண்டான் ஞானி.

"ஹலோ, இங்க பழைய மகாபலிபுரம் சாலையில திருவான்மியூர்ல இருந்து 40 நிமிட தூரத்துல ஒருத்தர் அடிபட்டுக் கிடக்குறாருங்க, அங்கே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்க" என்று அவசர தகவலுக்குப் பேசிவிட்டு மூச்சு விட்டாள் அணு. "நீ என்னை சமாதானப் படுத்த முயற்சிக்காத, ஒரு உயிர் மேல அக்கரையில்லாத உனக்கு எதுக்குக் காதல்" என்று மீண்டும் அவனைக் கடிந்து கொண்டாள்.

இவளைச் சமாதானப் படுத்துவதிலேயே அரை நாள் கழிந்து போனதும், இடையே ஒரு கூரியர் பற்றி ஞாபகம் வரவே இந்தப் பிரச்சினைக்கிடையில் வீட்டிற்குப் பேசி விட அலை பேசி எடுத்தான். இவளிடம் பேசும்போது இடைஞ்சல் செய்யப் போவதாய்க் கூறியிருந்த ஒரு நண்பனைத் தவிர்ப்பதற்காக அலைபேசியை அமர்த்தி வைத்திருந்தான். அதை சரிசெய்து கொண்டு அம்மாவிற்குப் பேசினான்.

"ஏம்பா எங்க இருக்க, உடனே அடையார் மலர் ஆஸ்பத்திரிக்கு வந்திடுப்பா, காலையில மகாபலிபுரத்துக்கு ஒரு ஆளைப் பார்க்க போன அப்பாவுக்கு விபத்தாயிடுச்சுப்பா. அவரோட ஒரு காலை எடுத்திட்டாங்க. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தா காலைக் காப்பத்திருக்கலாம்னு சொல்றாங்கப்பா. சீக்கிரம் வா" என்று அழுது அழுது பேசி முடித்தாள் ஞானியின் தாய் சத்யா.


இன்னும் எத்தனை நாள்தான் மனிதர்கள் இப்படி மனிதம் இழந்து இருக்கப் போகிறார்கள் எனப் புரியவில்லை.

நான் இறை தூதுவன்

சரியாக அறுபதாயிரம் வருடங்கள் கழித்து.....

ஒரு புறம் மிகப் பெரிய புனித விழா ஒன்று கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்து சூரியனிலிருந்து மூன்றாவதாக இருக்கும் அந்த கிரகத்தில். அங்கே ஏற்கனவே மக்களுடன் மக்களாக வாழ்ந்த ஒரு மாபெரும் இறை தூதரைப் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது. கூடியிருந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு தேவனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள், அந்த இறைவனை அடைய வழிமுறைகள் கற்பித்து விட்டுப் போன அந்த இறை தூதர் சில்லா என்பவரின் கோட்பாடுகள் எனக் கூறிக் கொண்டு ஒன்று புத்தகமாக வெளிவந்திருந்தது. அந்த புத்தகத்தில் இறைவன் செவ்வாயைய்ப் படைத்தார், அதற்கு வெளிச்சம் தருவதற்கு சூரியனைப் படைத்தார் என்றும், இரவு வெளிச்சத்திற்கு போபோஸ், டெய்மோஸ் எனும் இரண்டு நிலாவையும் படைத்தார் எனவும் மனிதர்களாலேயே எழுதப் பட்டிருந்தது. அது இறை தூதர் சொன்னதல்ல. அதே சமயத்தில் அதிலிருந்து சில நூறு வருடங்களுக்கு முன்பு தோன்றி மறைந்த இன்னொரு இறை தூதராக கருதப்பட்ட பயஸ் என்பவர் கூறிய வழிமுறைகளின் படி வாழ்ந்து வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் கடுமையான மன வேறுபாடு இருந்தது. மிகப் பெரிய போர்க் கருவிகளுடன் இன்னொரு புறம் இரு தரப்பினரும் பெரிய திடல் ஒன்றில் சண்டையிடுவதற்காக தயாராக இருந்தனர். அப்பொழுது அழிந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் காப்பாற்ற ஒரு புது இறை தூதர் ஒருவர் வானிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் அவருக்குக் கற்பிக்கப்பட்டதை எடுத்துரைத்து மனிதர்களைச் சமாதானப் படுத்த வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கையிலிருந்த தமிழில் எழுதப் பட்டிருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். இந்த மூன்றாவது கிரகத்தில் வாழ்பவர்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். இதுவரை வந்த எல்லா இறை தூதர்களும் கொண்டு வந்த அந்த அந்த புத்தகத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள், ஹிந்தி எழுத்துக்கள், உருது எழுத்துக்களும் தேவ பாஷையாக நினைக்கப் பட்டது. அது இறை தூதர்களுக்கு மட்டுமே புரியுமெனவும் சித்தரிக்கப் பட்டது. இருப்பதிலேயே குறைவாகப் பேசப்பட்ட மொழிகளை எடுத்து தேவபாஷைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் இறை தூதர்கள்.

அப்பொழுது சூரிய குடும்பத்தின் மூன்றாவது கிரகமாக செவ்வாய் இருந்தது. ஆமாம் ஒரு மிகப் பெரிய எரிகல் ஒன்று சுமார் கி.பி. 3200 வது ஆண்டு பூமியைத் தாக்கியது. அப்பொழுது அந்த எரிகல்லின் விசையை தாங்கிக் கொள்ள முடியாத பூமி வெடித்துச் சிதறியது, சுமார் 48 மணி நேரத்தில் அந்த இடத்தில் ஏற்பட்ட வேகமான வெற்றிடத்தால் செவ்வாய் கிரகம் பூமியிருந்த இடத்திற்கு இழுக்கப் பட்டது. இறுதியில் தனது பாதையைக் கடந்து பூமியின் பாதைக்கும் வரமுடியாமல் தனது இயல்பு பாரம் காரணமாக சற்றே பூமி இருந்த இடத்திலிருந்து 5000 கி.மீ தூரத்தில் நிலைபெற்று சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. இதனால் ஏற்கனவே இருந்த இரண்டு துணைக் கோள்களுடன் உடைந்து சிதறிய சின்னச் சின்ன துண்டுகளும் சேர்ந்து மொத்தம் 6 துணைக்கோள்களுடன் செவ்வாய் சுற்ற ஆரம்பித்தது. ஆனால் இரண்டு மட்டும்தான் இரவில் தெரியும். மற்றவை மிகவும் சிறியதாக இருப்பதால், அது கொஞ்சம் பெரிய நட்சத்திரம் அளவிற்கே தெரியும். இந்த நிகழ்வு நடந்த பொழுது பூமியின் விஞ்ஞான வளர்ச்சியினால் ஒளி வேகத்தை தொட்டுவிடும் மனிதர்கள் பயணிகக் கூடிய வானூர்திகள் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது, மேலும் மிகப் பெரிய வான் திடல் மூன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த பேராபத்தின் பொழுது உலக பணக்காரர்கள் பலரும், அந்த தொழில்நுட்பம் அறிந்த வல்லுனர்களும் சரியாக சூரியனிலிருந்து 4.3 ஒளி வருடத் தொலைவில் இருக்கும் ப்ராக்ஸிமா சென்ச்சரி எனும் சூரிய குடும்பத்திற்கு பயணமானார்கள். அவர்கள் மொத்தம் 350 பேர் கொண்ட குழு. அவர்கள் அங்கே சென்று சேருவதற்கு 6 வருடம் ஆகியது. பின்னர் அங்கேயே வசிக்கக் கூடிய அளவிலான ஒரு இடத்தில் இறங்கி 58,802 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

சுமார் கி.பி. 3200 இல் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு 45000 வருடங்களில் செவ்வாய் கிரகத்தில் வெகுவாக ஆக்ஸிஜனும், தண்ணீரும் பெருகத் தொடங்கியது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்ததும் அதன் படிமங்களும் மனிதர்கள் கண்டு பிடித்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கே ப்ராக்ஸிமாவிலிருந்து மனிதர்கள் செவ்வாய்க்கு வந்திறங்கினார்கள். அவர்கள் திரும்ப அந்த ப்ராக்ஸிமாவிற்குச் செல்லவில்லை. காலப் போக்கில் சுமார் 13,800 வருடங்களில் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருந்தது. சென்றவர்கள் திரும்பி வராததால் அங்கே அனுப்பி வைக்கப் பட்ட வெவ்வேறு மனிதர்கள் செவ்வாய்க்கு வந்தார்கள். அவர்கள் வெவ்வேறு இடத்தில் இறங்கி மனிதர்களைச் சமநிலைப் படுத்த பல வழிமுறைகள் கற்பித்து பின்னர் இறந்து போனார்கள். அவர்கள் தான் வாழ்ந்த ப்ராக்ஸிமா எனும் இடத்தில் சொர்க்கம் நரகம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் இறைவன் எனவும் இவர்கள் செய்யும் பாவங்களிற்கேற்ப அங்கே தண்டனை வழங்கப் படும் என்றும் பயமுறுத்தினர். அப்படி வந்த அந்த இருவர்தான் பயஸும், சில்லாவும்.

தன்னுடைய பெரும்பணியை மட்டும் கருத்தில் கொண்டு செவ்வாயில் வாழும் மனிதர்களை நன்னெறிப் படுத்த வந்து கொண்டிருந்தார் அவர் பெயர் தில்கி. ஏற்கனவே சில்லா எனும் இறைதூதர் வந்த பிறகு அந்தப் பகுதியில் அதுநாள் வரை இருந்த மக்கள் சிலபேர் இடம் பெயர்ந்து வசிக்கும் இடம்தான் இப்பொழுது தில்கி வந்து இறங்கும் இடம். இவர்களுக்கு தில்கி என்ற பெயரில் இறை தூதர் ஒருவர் வருவார் என்பது பயஸ் என்பவர் சொல்லிச் சென்ற சில குறிப்புகளை வைத்து அந்த மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அங்கே வந்து இறங்கிய தில்கி அந்த மக்களுக்கு தாந்தான் தில்கி என்றும், தான் இறைதூதுவன் என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். இங்கே நடப்பதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர் இறைவனாகக் கருதப்படும் ப்ராக்ஸிமாவில் வாழும் பழைய பூமியின் மனிதர்கள்.....

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்