ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

இரண்டாவது கல்யாணம்

வழக்கத்துக்கு மாறாக அன்று மிகுந்த புன்னகையோடு எழுந்தாள் விசாலம்மா. புறவாசலுக்குச் சென்று கிணற்றில் நீரெடுத்து முன்வாசல் தெளித்து விறுவிறுவென கோலம்போட்டாள். பஞ்சாரத்துக் கோழியெல்லாம் வெளியே மேயவிட்டாள். எதிர்வீட்டில் எப்பொழுதும் ஐந்தரை மணிக்கு எழுந்துவிடும் சேது தாத்தா "என்னாத்தா காலையிலேயே எழுந்திருச்சு கோலமெல்லாம் போட்டுட்டேன்னாரு". அதற்கு இதுநாள் வரைப் புடிச்சிருந்தப் பீடை நேத்து ராவைக்கு ஒழிஞ்சதுல இருந்து பொழுது எல்லாம் என் குடும்பத்துக்கு நல்ல பொழுதுதேன் என்றாள்.

இதற்கு முந்தினதினம்தான் தனது மருமகள் ஆனந்தியை அவளது பிறந்தவீட்டுக்கு மூன்று வாரம் போய்வருமாறு அனுப்பி இருந்தாள் விசாலம்மா. ஆனந்திக்கும் விசாலம்மா மகன் நாகராசுக்கும் திருமணமாகி 4 வருடம் முடிந்தும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

காலையில் எழுந்து வழக்கம்போல வயலுக்குப் போவதற்கு அழுக்கான வேட்டியுடன் கிளம்பிக்கொண்டிருந்தான் நாகராசு. "ஆத்தா நான் வயலுக்குப் போறேன்" என்று புறவாசல் வழியாக புறப்பட்டான்.

வெடுக்குனு வச்சத வச்ச இடத்துலேயே வச்சுட்டு புறவாசலுக்கு ஓடினாள் விசாலம்மா. "நாகராசு, உனக்கு இந்த சம்சாரம் வேண்டாம்ப்பா, இன்னைக்கு நம்ம பக்கத்து ஊருலருந்து உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றேன்னு சொல்லி இருக்காங்கப்பா" என்றாள்.

இதைக் கேட்டும் அதிகம் கோபப் படாதவனாக, தோளில் கிடந்த துண்டை மட்டும் எடுத்து உதறிவிட்டு தலைப்பாகையாகக் கட்டிக் கொண்டு விசாலம்மாவை முறைத்துப் பார்த்தான். "நீயும் இதை என்கிட்ட ரெண்டு வருசமா சொல்லிகிட்டேதான் இருக்க, ஆனால் இதெல்லாம் கூடி வராது சொல்லிபுட்டேன். கல்யாணமே வேணாமுன்ன எனக்கு இவள கட்டி வச்ச, இப்போ இவ வேண்டாம்னு இன்னோருத்தியா" என்று சாடினான்.

அந்த எடுப்பு எடுத்தவளைப் பற்றி பேசவேண்டாம் என்றாள். மேலும் நாகராசுவின் தங்கை ராணி முழுகாம இருக்கிறதா கல்யாணம் செஞ்சு கொடுத்த இடத்துல இருந்து சேதி வந்ததும் இரண்டு நாட்களாகவே விசாலத்தை பெருமையின் உச்சியில் வைத்திருந்தது. "மலட்டுப் பொண்ண நம்ம தலையில கட்டிவச்சு நம்ம வம்சத்தை அழிக்கப் பாக்குறானுவ, எம்பொண்ணு போன 4 மாசத்துல முழுகாம இருக்கா. இங்க என்னாடான்னா இந்த மலட்டுப் பொண்ணு வச்சு நான் 4 வருசமா மாரடிக்கிறேன்" என்று புறவாசலில் இருக்கும் காய வைத்த வரட்டிகளையெல்லாம் எடுத்த படியே பேசிக் கொண்டிருந்தாள் விசாலம்.

அந்த சிறுக்கி வந்ததுல இருந்தே நேரம் சரியில்லையென்று கடுகடுத்துக் கொண்டாள். "நீ என்ன செய்வியோ தெரியாது எனக்கு நம்ம வம்சம் இதோட நின்னு போறதுல சம்மதம் இல்ல. இன்னைக்கு மதியத்துக்கு உன்னை பார்க்க வருவாக, ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுதான் வாராக, நீ கழனியிலிருந்து வெள்ளன வந்து சேரு. வெயில் உச்சியில இருக்கும் போதே வந்துருவாக" என்று விசாலம் சொன்னாள்.

அம்மா எப்பவும் இப்படித்தான் பேசுமென்று அறிந்துகொண்டவன், மறுப்பேதும் பேசாமல் வயலுக்குப் புறப்பட்டான். மனதுக்குள்ளேயே மதியம் வீட்டுக்கு வரவேண்டாமென்று முடிவெடுத்துக் கொண்டான். இதற்கு மனைவி மேலிருந்த அவனது பாசத்தைவிட, இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறதுல விருப்பம் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக இருந்தது.

இதயெல்லாம் அங்கிருந்தே கேட்டபடி இருந்த சேது தாத்தா விசாலத்திடம் மகன் ஒத்துக்கிட்டானா என்றார். அவருக்கு விசாலம்மா செய்வது எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் எதிரெதிர் வீடு என்பதற்காக எப்பொழுதும் பேசி வைப்பார். இவருக்கு ஆனந்தி மீதும் ஒரு பாசம் உண்டு. பல நேரம் இவரு நோயில் கஷ்டப்பட்ட போதெல்லாம் திண்ணையில தனியா படுத்திருப்பவருக்கு ஆறுதலா கஞ்சித்தண்ணி கொடுத்து பேசிவிட்டு அவள் வருவதே காரணம். பதிலாக விசாலம்மா அவருக்கு ஒன்றுமே சொல்லவில்லை. சேது தாத்தா ஆனந்தியுடன் பாசமாக இருப்பது விசாலம்மாவிற்குப் பிடிக்கவில்லை.

படபடப்பாக அனைத்து வேலையும் முடித்துவிட்டு மாட்டுக்கு கழனித்தண்னியும் வைத்துவிட்டு "நம்ம பையனுக்கு ஒன்னும் கொறயில்ல, எல்லாம் அவளுக்குத்தான் குறை. என் வம்சத்துல பொறந்த எம்பொண்ணு போயி நாலு மாசத்துல உண்டாயிட்டா. ஆனந்திக்குத்தான் குறை இருக்கனும். போன சனியன் திரும்பி வர்றதுக்குள்ள இவன ஒரு தாலிய கட்ட வச்சிடனும். வந்த சிறுக்கி இங்கனையே கெடந்தா கெடக்கட்டும் இல்லைன்னா அவ அப்பன் வீட்டுக்குப் போகட்டும்" என்று மாட்டிடம் பேசிக் கொண்டிருந்தாள். நடந்ததையெல்லாம் சொல்லி முழுச்சம்மதத்துடந்தான் மாப்பிள்ளை பார்க்க வருகிறார்கள். கிட்ட திட்ட இது தேதி குறிக்க மட்டுமே. அவர்களுடைய வீட்டில் வரதட்சணை எதுவும் கொடுக்க முடியாமல் இருப்பதாலும், வீட்டில் நான்கு பெண்கள் கல்யாண வயசுல இருப்பதாலேயும் முதல் பொண்ணை இப்படி கட்டிவைக்க சம்மதம் தெரிவிச்சுட்டாங்க.

மெதுவாக நகரும் சூரியன் அன்று விசாலத்துக்காக வேகமாக நகர்ந்தது போல ஒரு உணர்வு அவளுக்கு. ஆனால் இன்னும் நாகராசு வீட்டுக்கு வந்து சேரலை. தெருவழியே போன ஒருத்தர்கிட்ட தன்னோட பையனை வயக்காட்டுல இருந்து வேகமா வரச்சொல்லும்படி சொல்லி அனுப்பியிருந்தது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.

மாப்பிள்ளைப் பார்க்க வந்த பதினைந்து பேரும் வந்து வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டனர். வந்தமர்ந்த பெண்ணின் அப்பா ராசவேலு சுவற்றில் கவனிக்கப் படாததாய் தொங்கிக் கொண்டிருந்த விசாலம்மாவின் கணவர் படத்தைக் காண்பித்து இவர்தானா உங்க கணவர் என்று கேட்டார்.

"அவரேதேன், 10 வருசமாச்சு அவரு போயி சேர்ந்து. இந்தக் குடும்பத்தைப் படாதபாடு பட்டு கரை சேர்த்துட்டேன்னு நினைச்சா கொலத்தக் கெடுக்கன்னே ஒருத்தி வந்து சேர்ந்துட்டா. இந்தக் கல்யாணம் மட்டும் நல்ல படியா முடிஞ்சுதுன்னா நான் மகராசியா போய் சேர்ந்துடுவேன்" என்று சொல்லிக் கொண்டே பலகாரங்கள் பரிமாறினாள்.

நாகராசு வருவதாய்த் தெரியவில்லை. ஆனால் பேச வேண்டியதெல்லாம் கிட்டதிட்ட பேசி முடித்தாயிற்று. இன்னும் இரண்டு வாரத்துல திருமணத்திற்கு நாளும் குறித்தாயிற்று. அந்த சமயம் உள்ளே இருக்கும் கூட்டத்தை கவனிக்காத பக்கத்து ஊர்க்காரர் ஒருவர் திண்ணையில் வந்து அமர்ந்து விசாலத்தைக் கூப்பிட்டார்.

விசாலம்மா மகளைக் கட்டிக் கொடுத்த ஊர்க்காரரென்று தெரிந்ததும் விசாலம் உடனடியாக வெளியே சென்று பேச ஆரம்பித்தாள். வந்த பெரியவர் தந்தி போல பேச ஆரம்பித்தார். "உம்மவளுக்கு வயித்துல புள்ள ஏதும் இல்லையாம் அது வெறும் கட்டிதானாம். ஊரு பெரிய ஆஸ்பத்திரியில போய் பார்த்ததற்கு இவளுக்கு புள்ள பொறக்குற பாக்கியமும் இல்லைன்னுட்டாங்க. நீ போயி ஒரு எட்டு பாத்துட்டு வந்துடு. மாப்பிள்ளை வீட்டுல இவள வெட்டி விட்டுட்டு வேற கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சுறுவாக போலிருக்கு. எனக்கு சோலி நெறய கெடக்காத்தா. நான் கிளம்புறேன்" என்று கூறி விட்டு திண்ணையைக் காலி செய்துவிட்டார். அந்தத் திண்ணையிலேயே உட்கார்ந்து அழுதபடி உறைந்து இருந்தாள் விசாலம்மா. இதைப் பார்த்துவிட்டு வேறு ஏதும் சொல்லாமல் சொல்லி அனுப்புங்கள் என்று கூறி விட்டு வந்தவர்கள் இடத்தைக் காலி செய்து விட்டார்கள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த சேது தாத்தா மெதுவாக புன்னகைத்துக் கொண்டார்.

4 comments:

வல்லிசிம்ஹன் June 28, 2008 at 7:48 AM  

முற்பகல் செய்தால் முற்பலிலேயே விளைந்துவிட்டதோ!!!

ஒளியவன் June 28, 2008 at 7:52 AM  

:-) சில நேரங்களில் தனக்குத் துன்பம் நேரும்பொழுதுதான் மனிதன் பிறரைப் பற்றியும் சிந்திக்கிறான்.

சின்னப் பையன் June 28, 2008 at 9:30 AM  

ம். நல்லா இருக்கு கதை...

ஒளியவன் June 28, 2008 at 9:36 AM  

நன்றி திரு.சின்னப் பையன்.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்